‘‘அறிவுத்திருட்டு குற்றம் என்பதை ஆரம்பக் கல்வியிலேயே புகட்ட வேண்டும்!’’

‘‘அறிவுத்திருட்டு குற்றம் என்பதை ஆரம்பக் கல்வியிலேயே புகட்ட வேண்டும்!’’

வாஷிங்டன் வாழ் தமிழ் எழுத்தாளர் சத்யராஜ்குமார் பேட்டி

‘‘அடுத்தவர் பொருளை எடுப்பது திருட்டு, ஒரு புத்தகத்தையோ, பத்திரிகைகளையோ பிடிஎஃப்பாக படிப்பதும் திருட்டுதான். அது அறிவுத்திருட்டு எப்படி மற்றவர் பொருளை அபகரிப்பது குற்றம் என்ற உணர்வு நமக்குள் இருக்கிறதோ, அதே உணர்வு அறிவுத்திருட்டு செய்யும்போதும் வரவேண்டும். அமெரிக்காவில் இது திருட்டு என்பது பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடத் திட்டத்திலேயே உள்ளது. எனவே அங்கெல்லாம் இந்த அறிவுத் திருட்டு நடப்பதில்லை. நம் இந்தியாவில்தான் நாம் செய்வது திருட்டு என்ற அடிப்படை உணர்வுகூட இல்லாமல்   செய்கிறார்கள். கூகுளிலோ, முகநூல், இன்ஸ்ட்டாகிராமிலோ ஒரு படத்தை கூசாமல் டவுன்லோடு செய்து சம்பந்தப்பட்டவர் அனுமதியின்றி தன் வலைப்பக்கங்களில் ஏற்றுகிறார்கள். இந்த திருட்டுக் கலாச்சாரம் அமெரிக்காவில் இல்லை!’’ என்று பேசும் எழுத்தாளர் சத்யராஜ்குமார் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் வசிக்கிறார்.

பொள்ளாச்சியை சேர்ந்த இந்த எழுத்தாளரின் ஆரம்ப காலக் கதைகள், மாத நாவல்கள் 1990-களில் தமிழின் முன்னணி இதழ்கள் நிறைய பிரசுரித்தன.  2000-ல் அமெரிக்கா சென்றவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு இவரின் எழுத்தை நம் தமிழ் பத்திரிகைகளில் காண்பதே அரிதாகி விட்டது. இடைப்பட்ட காலத்தில் ‘ஒரு விநாடியும்- ஒரு யுகமும்’, ‘நியூயார்க் நகரம்’ என்ற  சிறுகதைத் தொகுப்புகள் கண்ணில் பட்டன. ‘ஓர் எழுத்தாளனின் சிறகுகளை புலம் பெயர்வு முறித்துப் போட்டு விடுகிறதா என்ன?’ என்று அண்மையில் கோவை வந்திருந்த சத்யராஜ்குமாரை கல்கி ஆன்லைனுக்காக சந்தித்துக் கேட்டோம். ‘அப்படியெல்லாம் இல்லையே!’ என்று ரொம்ப கேஷுவலாக தன் எழுத்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்ப எனக்கு 15, 16 வயசுதான். ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை போன்ற எழுத்தாளர்கள் எழுதுவதைப் பார்க்கப் பார்க்க எழுதனும்ன்னு ஆசை வந்துருச்சு. குமுதத்திற்கு மட்டும்  தினம் ஒரு கதைன்னு எழுதி அனுப்பினேன். அத்தனையும் திரும்பி வந்துச்சு. ஆனா எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதைகள் வாரம் தவறாமல் பிரசுரமாகிட்டே வந்துச்சு. அதைப் பார்த்து, ‘உங்க கதைகள் எல்லாம் இவ்வளவு பிரசுரமாகிறது, என் கதைகள் திரும்பி வருகிறது. ஏதும் சிபாரிசு இருந்தால்தான் பிரசுரிப்பார்களா?’ என்று கேட்டு அவருக்கு கடிதம் அனுப்பினேன். அதனுடன் என் கதை ஒன்றையும் வைத்திருந்தேன். 10- 15 நாளில் அவரிடமிருந்து ஒரு கடிதம்.  ‘கதை நன்றாக உள்ளது. இதை சாவிக்கு அனுப்புங்கள். பிரசுரமாகும். நேரில் வாருங்கள். நிறைய பேசலாம்!’ என்று தெரிவித்திருந்தார்.

அக்கதையை சாவிக்கு அனுப்பி விட்டு அவரைப் போய்ப் பார்த்தேன். அப்ப எனக்கு 18 வயசுதான்.  ஒரு கதை எப்படி இருக்கணும். தலைப்பு எப்படி வைக்கணும் என்றெல்லாம் என் கதைகளை படித்து விட்டு உதாரணங்கள் சொன்னார். ஒரே வாரம்தான். சாவியிலும், ஜனரஞ்சனியிலும் என் கதை ஒரே நேரத்தில் வந்தது. ராஜேஷ்குமாரை சந்திக்கும் முன் இதயம் பேசுகிறது இதழுக்கு ஒரு கதை அனுப்பியிருந்தேன். அது சிறுகதைக் களஞ்சியம் என்ற புது இதழில் புதுமைப்பித்தன், ராஜேஷ்குமார், இந்துமதி போன்ற பிரபலமான எழுத்தாளர் கதைகளுக்கு நடுவே இளம் எழுத்தாளர் அறிமுகம் என்ற அடையாளத்துடன், என் முகவரியும் சேர்த்து வெளி வந்தது. அதைப் படித்துவிட்டு ராஜேஷ்குமார் பாராட்டிக் கடிதம் எழுதினார்.

இதுதான் என் எழுத்தின் ஆரம்பம். அதற்குப் பிறகு ஒவ்வொரு பத்திரிகைக்கும் எப்படி கதை எழுதணும் என்பதை புரிஞ்சுகிட்டு எழுத ஆரம்பிச்சேன். சாவியில் ஒரு வாரம் சமூகம், ஒரு வாரம் க்ரைம், ஒரு வாரம் சயின்ஸ் சப்ஜெக்ட்டில் கதைகள் எழுதினேன். எந்தக் குமுதத்தில் கதை வரவில்லை என்று ஏங்கினேனோ அதில் முதல் கதை 10 பக்க அளவில் பிரசுரமானது. வாசகர்கள் பாராட்டுக் கடிதங்கள் வீடு தேடியே நிறைய வர ஆரம்பித்தது. அப்படி போய்க் கொண்டிருக்கும்போது, ஒரு வாசகர் ‘நீங்க நல்லா எழுதறீங்க. ஆனா ஜிகினா எழுத்தாளரா இருக்கீங்க’ என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். எனக்கு சுரீர்ன்னு இருந்தது.

கல்கி, அமுதசுரபி, கலைமகள், கணையாழி போன்ற ஆழம் அழுத்தம் மிக்க இலக்கிய தரமான கதைகளை வெளியிடும் இதழ்களில் எழுதினால்தான் இந்த ஜிகினா எழுத்தாளர் என்ற பார்வை மறையுமோ என்று அவற்றுக்கும் எழுதினேன். 1994-ல் அந்நிய துக்கம் என்ற சிறுகதை அமரர் கல்கி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. அடுத்து ஒரு கதை அதே கல்கியில் வெளியாகி இலக்கிய சிந்தனை பரிசும் பெற்றது. ஆக ஜிகினா எழுத்தாளர் என்ற பெயர் உடைபட்டது. எழுத்துங்கறது நம்ம சாய்ஸ்தானே? நம்ம ஆசைப்படற மாதிரி எழுதறோம். கணையாழிக்கு எழுதணும்ன்னு நினைச்சா நம்மாள எழுத முடியும்தானே?

அப்படித்தான் ஏராளமான மாதநாவல்கள் எழுதினேன். எஞ்சினியரிங் படிச்சிட்டு சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் பணியில் சேர்ந்த பின்னாடி கூட தீவிரமாக எழுதிகிட்டுத்தான் இருந்தேன். 2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பணி வாய்ப்பு வந்தது. நியூஜெர்சி மாநிலத்தில் நியூயார்க் நகரில் போய் இறங்கும் முன்பு 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நிறைய மாத நாவல்கள் எழுதியிருந்தேன். அப்போது இப்போது போல் பத்திரிகைகள் இணையத்தில் இல்லை. மின்னஞ்சலில் அனுப்பப்படும் கதைகளை கண்டுணர்ந்து எடுத்து பிரசுரிக்கும் அளவு நம் தமிழ் பத்திரிகைகளும் இல்லை. உலகமே இப்போது பயன்படுத்துகிறதே தமிழ் எழுத்துரு யுனிகோடு. அதன் வாசமே கிடையாது. கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் ஆகி விட்டது எழுதுகிற பணியும்.

தமிழில் ஒரு சில எழுத்து ஆர்வலர்கள் மட்டும் டிடிஎப் பாண்ட் மாதிரி தமிழில் உருவாக்கி கணினியில் டவுன்லோடு செய்து பிளாக்கரில் பயன்படுத்தினார்கள். இந்த பிளாக்கர் பயன்படுத்துபவர் 50- 60 பேர் இருந்தாலே பெரிய விஷயம். அதில் பலரும் கட்டுரைகள் எழுதினார்கள். கதைகள் எழுதவில்லை. நான் கதைகளாக எழுதினேன். நான் அமெரிக்காவில் பெற்ற அனுபவங்களை கதைகளாக போட ஆரம்பித்தேன். அவை வரவேற்பும் பெற்றது. நான்கைந்து வருஷம் கழித்துத்தான் மைக்ரோ பிளாக்ஸ்ன்னு பாப்புலர் ஆச்சு. அதில் இன்ஸ்ட்டாகிராம், டிவிட்டர் என வந்த பிறகு காப்பி, பேஸ்ட் சமாச்சாரம் அதிகரித்தது. ஆக பிளாக்கரும் எழுதறதுக்கான பிளாட்பாரம் இல்லைன்னு ஆகிப் போச்சு. அதனால் நான் எழுதுவதும் குறைஞ்சிருச்சு. இப்ப யாராவது கதை கேட்டா கொடுக்கிறேன். பிரசுரிக்கவும் செய்யறாங்க!’’

அமெரிக்கவாழ் இந்தியர் என்றான பிறகு எழுத்தை இழந்த மாதிரி உணர்கிறீர்களா?

‘‘இல்லவே இல்லை. பத்திரிகையில் இப்ப கேட்டா உடனே என்னால கதைகள் எழுதித் தந்திட முடியுது. எத்தனை நேரத்தில் வேணும்ங்கிறது அவங்க முடிவு பண்ணினா போதும். மற்றபடி  என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் ‘எழுதறதை விட்டுட்டீங்களே என்றும், நல்ல கதை படிச்சு எவ்வளவு நாள் ஆச்சு?’ என்று கேட்பவர்கள் உண்டு நச்சுன்னு, ஒரே மூச்சுல படிச்சு முடிக்கிற மாதிரி கதைகள் யாரும் எழுதறதில்லையே!’ என பலரும் பேசுவதை நான் அறிகிறேன்!’’

அச்சிதழ்கள் வாசகப்பரப்பு கடுமையாக குறைந்துள்ளது. இது தமிழில் மட்டும்தானா? உலகம் தழுவியதா? அளவிலா?

எனக்கு அமெரிக்காவைப் பத்தி மட்டும்தான் தெரியும். அங்கே அச்சிதழ் வாசிப்புப் பரப்பு படு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் டிஜிட்டல் இதழ்கள் முன்னேறிகிட்டே இருக்கு. நம்மவர்கள் அதுக்கு மாறிக்கணும். நான் இப்ப எல்லாம் டிஜிட்டல் இதழ்கள்தான் வாசிக்கிறேன். இது போல தெருவில் நூற்றுக்கு 90 சதவீதம் பேர் மாறி விட்டார்கள். ஒரு நூலை நாம் வெளியிடறோம்ன்னா உடனே அதை எலக்ட்ரானிக் வடிவத்துல கொண்டு வந்துடணும். இல்லாவிட்டால் அந்த நூல் வாசிக்கப்படாமலே போய் விடலாம்...!’’

‘‘கிண்டிலில் போட்டால் மறுகணமே அவை பிடிஎப்பாக மாறி, திருட்டு மென்நூல் புத்தகங்களாக வெளி வந்துவிடுகிறதே! இது அறிவுத்திருட்டுக்குத்தானே ஊக்கமளிக்கிறது?’

‘‘விலை கொடுக்காம ஒரு பொருளை எடுப்பது எப்படி குற்றமோ, அது போல ஒருத்தரோட கதையை, கட்டுரையை, கவிதை, ஓவியங்களை வலையில் இருந்து திருடுவதும் குற்றம் ஆகும். அதுதான் பிடிஎப்பாக எதைப் பார்த்தாலும் அதை திருட்டுப் பிடிஎப் எனக்குறிப்பிடுகிறேன். அமெரிக்காவில் குழந்தைப் பருவத்திலிருந்தே இது அறிவுத்திருட்டு, குற்றம் என்பதை கல்வியாகவே சொல்லித் தருகிறார்கள். எனவே இந்த பைரசிக்கான புரிதல் இருக்கு. எனவே அவர்கள் மறந்தும் கூட இந்த பாதகத்தை செய்வதில்லை. நம் ஊரிலும் குழந்தைகளுக்கு ஆரம்பிக் கல்வியிலேயே அதை புகட்ட வேண்டும். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. இந்த மாற்றத்தை நாம் ஏற்றுகிட்டு ஆகணும்.’’

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com