வைணவம் பயில  ஓர் ஆய்வு மையம்!

வைணவம் பயில ஓர் ஆய்வு மையம்!

மிழக இந்து சமய அறநிலையத்துறையின் சீரிய வழிகாட்டுதலின்படி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக ஒரு ஆய்வு மையம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் வளாகத்தின் உள்ளே சமீப ஆண்டுகளாக இயங்கி வருகிறது. “ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையம்” என்கிற பெயரில் நடைபெற்று வருகிறது. அந்த மையம் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டின் நினைவினைப் போற்றும் வகையில், 2௦17ல் தொடங்கப்பட்டது. 2018ல் இருந்து அதன் ஆய்வு மைய வகுப்புகளை நடத்தி வருகிறது.

அப்போது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை நடத்தி வந்துள்ளது அந்த ஆய்வு மையம். சான்றிதழ் படிப்பு ஆறு மாதங்கள். பட்டயப் படிப்பு ஒரு ஆண்டு. சான்றிதழ் படிப்பானது வைணவம், ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வாழ்வும் பணிகளும், வேதங்கள் வேதார்த்தங்கள், வைணவ ஆலயங்களில் கல்வெட்டுகள் என்கிற நான்கு பாடங்கள் போதிக்கப்பட்டன. ஒரு ஆண்டு பட்டயப் படிப்பில் வைணவம், தமிழ் இலக்கியங்களில் வைணவக் கூறுகள், இராமானுஜர் ஆகிய மூன்று பாடங்கள் போதிக்கப்பட்டன. ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையத்தின் பேராசிரியையும் அதன் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஜெயவித்யா நரசிம்மன் என்பவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

முனைவர் ஜெயவித்யா நரசிம்மன்
முனைவர் ஜெயவித்யா நரசிம்மன்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் எத்தனை ஆண்டுகள் இணைந்து பாடங்கள் நடத்தினீர்கள்?

2018 – 2019, 2019 – 2020 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகள் இணைந்து நடத்தினோம். அந்த இரண்டு ஆண்டுகளில் நேரடி வகுப்புகளும், ஆன்லைன் வகுப்புகளும் நடத்தினோம். அப்போது ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்சிலும், சென்னை மைலாப்பூர் பி.எஸ். மேனிலைப் பள்ளியிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில் ஓலைச் சுவடிகள் வாசிப்பது, கல்வெட்டுகள் படிப்பது போன்ற வழிகாட்டுதல் பாடங்கள் நடந்தன.

அதன் பின்னர் என்ன செய்தீர்கள்?

அதன் பின்னர் 2௦2௦ல் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் அதன் அனுமதியும் அங்கீகாரமும் பெற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டோம். அதன்படி எம்.ஏ., வைணவம், எம்.ஏ., ஸ்ரீ பாஷ்யம் ஆகிய இரண்டு வகை பாடத் திட்டங்களுடன் வகுப்புகள் தொடங்கினோம். எம்.ஏ., வைணவம் இரண்டு ஆண்டுகள். எம்.ஏ., ஸ்ரீ பாஷ்யம் இரண்டு ஆண்டுகள். இவைகள் இரண்டும் வேறு வேறு. இவைகளின் சிற்சில பாடப் பகுதிகள் சமஸ்கிருதத்தில் இருந்த போதிலும் அவைகளை விரிவாகத் தமிழில் எடுத்து உரைத்து பாடங்கள் தெளிவாக நடத்துகிறோம். இவைகளுக்கும் நேரடி வகுப்புகளும் ஆன்லைன் வகுப்புகளும் நடத்தி வருகிறோம்.

செமஸ்டர் எனப்படும் பருவத் தேர்வுகள் எத்தனை? பாடங்கள் என்னென்ன?

எம்.ஏ., வைணவத்துக்கும் எம்.ஏ., ஸ்ரீ பாஷ்யத்துக்கும் இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொன்றுக்கும் நான்கு செமஸ்டர்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பருவத் தேர்வுகள் நடத்தப்படும். எம்.ஏ., வைணவத்தில் ஒரு பருவத் தேர்வுக்கு ஆறு பேப்பர்கள். அதில் நான்கு தியரி பேப்பர். அதில் ஒன்றினை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணமாக எம்பெருமானார் துதி நூல்கள் அல்லது தேசிகருடைய பிரபந்தங்கள் என்பது போல ஒரு விருப்பப் பாடத்தினைத் தேர்வு செய்து கொள்ளலாம். மீதம் இரண்டு பேப்பர் பிராக்டிகல். நான்காவது பருவத் தேர்வுக்கு மட்டும் மூன்று தியரி பேப்பர்கள், ஒரு பிராக்டிகல், ஒரு பயிற்சி திட்ட ஏடு, ஒரு ஆய்வேடு. எம்.ஏ., ஸ்ரீ பாஷ்யத்துக்கும் நான்கு செமஸ்டர்கள். ஐந்து தியரி பேப்பர்களில் ஒன்று விருப்பப் பாடம். கடைசி நான்காவது செமஸ்டர்க்கு மூன்று தியரி பேப்பர்கள். ஒரு பிராக்டிகல். ஒரு ஆய்வேடு. ஒரு பயிற்சித் திட்ட ஏடு.

ஒரு கோர்ஸ் முடிந்து விட்டதா?

ஆம். ஒரு கோர்ஸ் முடிந்து விட்டது. 2௦2௦ - 2௦22 கல்வியாண்டில் எம்.ஏ., வைணவம் ஒரு குரூப், எம்.ஏ., ஸ்ரீ பாஷ்யம் ஒரு குரூப் தேர்வுகள் எழுதி ஒரு கோர்ஸ் முடிந்து விட்டது. எம்.ஏ., வைணவத்தில் மொத்தம் 22 பேர். அதில் ஆண்கள் 15, பெண்கள் 7. எம்.ஏ., ஸ்ரீ பாஷ்யத்தில் மொத்தம் 3௦ பேர். அதில் ஆண்கள் 21, பெண்கள் 9. மேலும் ஓர் ஆச்சர்யம் என்ன தெரியுமா? நடப்பு 2022 – 2024 கல்வியாண்டில் எம்.ஏ., வைணவத்தில் பதினான்கு பெண்கள், பதின்மூன்று ஆண்கள். மொத்தம் இருபத்தியேழு பேர். மேலும் இன்னொரு ஆச்சர்யம் என்ன தெரியுமா? நிறைவு பெற்ற எம்.ஏ., ஸ்ரீ பாஷ்யம் வகுப்பில் இரண்டு பேர்களுக்கு வயது எண்பத்திநான்கு.

என்ன சொல்கிறீர்கள்? இந்த வைணவ ஆய்வு மையத்தின் படிப்புகளில் சேர்வதற்கு வயது வரம்பு தான் என்ன? அவர்களது அடிப்படைக் கல்வித் தகுதி தான் என்ன?

வயது வரம்பு என்பதே கிடையாது. எந்த வயதினரும் வந்து சேரலாம். அவர்களுக்கு அந்த ஆர்வமும், அவர்களிடம் இயல்பானத் தேடலுமே மிக முக்கியம். அதனால் பெரும்பாலும் நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களே விருப்பமுடன் வந்து சேர்கின்றனர். வைணவத்தில் ஆர்வமும் பிடிப்பும் தேடுதலும் உள்ள எவர் வேண்டுமானாலும் இங்கு வந்து சேரலாம். சாதியப் பாகுபாடுகளோ சாதிய வேறுபாடுகளோ இல்லை. எந்தப் பிரிவினர் வேண்டுமானாலும் வந்து சேரலாம். எம்.ஏ., வைணவம் வந்து சேர்பவர்கள் அடிப்படையில் ஏதேனும் ஓர் இளங்கலை பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.ஏ., வைணவம் சேர்க்கைக்கு பிளஸ் டூ தேர்ச்சி, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.ஏ., வைணவம் மூன்று ஆண்டுகளுக்கான படிப்பாகும். எம்.ஏ., ஸ்ரீ பாஷ்யம் வந்து சேர்பவர்கள் இளங்கலை பட்டப் படிப்பு அல்லது சமஸ்கிருதத்தில் சிரோன்மணி அல்லது தமிழில் வித்துவான், புலவர், பி.லிட்., போன்ற படிப்புகள் படித்திருந்தால் போதும். ஒரு செமஸ்டர்க்கு பத்தாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம் என்கிறார் ஆய்வு மையத்தின் பேராசிரியையும் அதன் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஜெயவித்யா நரசிம்மன்.

“ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாகவும், தமிழக இந்துசமய அறநிலையத் துறையின் சீரிய வழிகாட்டுதலிலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் இந்த மையம் இயங்கி வருகிறது. ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையத்தின் முக்கிய நோக்கமானது, மிகுந்த ஆர்வத்துடன் வைணவம் குறித்து பயில வருபவர்களின் தேடுதலை நிறைவு செய்வதாகும். வைணவத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள் பலரும் வருகை தரும் பேராசிரியர்களாக இங்கு வந்து விரிவுரை ஆற்றிச் செல்கின்றனர். இங்கு பயில்பவர்களுக்கு வைணவம் சார்ந்து தோன்றும் சந்தேகங்களை தெளிவு படுத்துகின்றனர். வைணவத்தின் சிறப்பம்சங்களும் அதன் உயரிய கோட்பாடுகளும் மேலும் மேலும் பரவிட வேண்டும் என்பதே இந்த மையத்தின் உயரிய நோக்கம் ஆகும்.

இணை ஆணையர் செ. மாரிமுத்து
இணை ஆணையர் செ. மாரிமுத்து

இங்கு பி.ஏ., வைணவம், எம்.ஏ., வைணவம், எம்.ஏ., ஸ்ரீ பாஷ்யம் ஆகிய பாடங்கள் போதிக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து வைணவத்தில் பி.ஹெச்டி., எனப்படும் ஆய்வுப் படிப்பும் இங்கு உருவாக்கும் முயற்சியிலும் தொடர்ந்து இயங்கி வருகிறோம்.” எனக் கூறுகின்றார் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com