கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; போராட்டம்!

கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; போராட்டம்!

வ்வொரு பொங்கலுக்கும் நம் வீடுகளில் சர்க்கரை பொங்கலுடன் சுவையும் சத்துக்களும் மிகுந்த கரும்புகளும் இடம்பெறுவது வழக்கம். சென்ற ஆண்டுகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் இடம்பெற்றது. இது, பொதுமக்களை பெருமகிழ்ச்சி படுத்தியது. ஆனால் இந்த வருடம் அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரை, பச்சரிசி மற்றும் ரொக்க பணம் ரூபாய் ஆயிரம் மட்டும் வழங்கப்படும் என அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பு கரும்பு சாகுபடி செய்து விற்பனைக்காக காத்திருந்த விவசாயி களுக்கு கவலை தந்துள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்புடன் சென்ற ஆண்டுகளில் வழங்கிய செங்கரும்பும் சேர்த்து  வழங்கப்பட்டால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது  பொதுமக்களின் கருத்தாகவும்  இருக்கிறது.
         கடந்த ஆண்டு தாங்கள் விளைவித்த கரும்புகளின் விற்பனையில் தொய்வு ஏற்பட்டு இருப்பதால் கரும்பு சாகுபடி விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இதனால் தங்களுக்கு பெரிய அளவிலான நஷ்டம் ஏற்படும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது. அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பை அதிக அளவில் சாகுபடி செய்த விவசாயிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

       தாங்கள் விளைவித்த கரும்புக்கு ஏற்ற விலையை கோரியும் நஷ்டத்தை தவிர்க்கவும்  பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பை சேர்க்கவும் அரசிடம் கோரிக்கை வைத்து தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர். திருச்சியில் பொங்கல் தொகுப்பில் கரும்பை சேர்க்க சொல்லி கரும்பு விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

அதேபோல் எடப்பாடி சேலம் பிரதான சாலையில் கன்னந்தேரி பஸ் நிறுத்தம் அருகே அப்பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பெயரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகளின் இந்த மறியல் போராட்டத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

பூலாம்பட்டி காவிரி பாசனம் பகுதியில் கரும்பு விவசாயிகள் தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான கரும்பு விவசாய சங்க நிர்வாகிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

தை மாதம் வரும் பொங்கல் பண்டிகை விவசாயி களுக்கான பண்டிகை எனலாம். அவர்கள் வருடம் முழுவதும் உழைத்து விளைவித்த கரும்பு முதலான உணவுப்பொருட்களுக்கு தகுந்த விலை கிடைத்து’ அவர்களின் வாழ்வாதாரம் உயர வழி வகுக்கிறது பொங்கல் பண்டிகை.  பொங்கல் பண்டிகையில் கரும்பு அதிகம் பயன்படுத்துவது வழக்கம் என்பதால் பெரும்பாலான கரும்பு விவசாயிகள் அரசின் பொங்கல் தொகுப்பை நம்பி கரும்பு சாகுபடியில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால் கரும்பு இடம்பெறாத பொங்கல் தொகுப்பின் அறிவிப்பு கரும்பு விவசாயி களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது எனலாம்.

கரும்பின் இனிப்பு போல் தங்கள் வாழ்விலும் இனிமை சேர்க்குமா இந்த பொங்கல் பண்டிகை என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் விவசாயிகள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com