பொங்கல் தொகுப்பில் கரும்பு... முதல்வர் அறிவிப்பு... விவசாயிகள் களிப்பு

பொங்கல் தொகுப்பில் கரும்பு...
முதல்வர் அறிவிப்பு... விவசாயிகள் களிப்பு

ரசு சார்பில் சென்ற ஆண்டுகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக  பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்புடன் குறிப்பிட்ட தொகையும் வழங்கி வந்தது. பொதுமக்களை மகிழ்ச்சிப்படுத்திபடுத்தியதை அறிவோம்.

      இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பு குறித்த அரசின் முடிவுகளை அறிய மக்கள் ஆவலாக இருந்தனர். வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 1000 ரூபாய் பணமும் ஒரு கிலோ பச்சரிசியும் சர்க்கரையும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த வாரம் அரசு அறிவித்திருந்தது. அந்தத் தொகுப்பில்  கரும்பு இல்லாதது குறித்து மக்கள் ஆச்சர்யமும் வேதனையும் அடைந்தனர். காரணம் கரும்பு விவசாயிகள் அரசு மீது வைத்த நம்பிக்கை.

     அரசு, தங்களிடம் இருந்து நேரடியாக கரும்பினை கொள்முதல் செய்து மக்களுக்கு பொங்கல் பரிசாக தருவதால் தங்கள் உழைப்புக்குத் தகுந்த விலை கிடைக்கும் எனும் நம்பிக்கையில் அதிகப்படியான கரும்பு சாகுபடி செய்து காத்திருந்த விவசாயிகள் அரசின் அறிவிப்பால் பெரிதும் ஏமாற்றத்தையும் கவலையும் அடைந்தனர்.

       கரும்பு விவசாயிகள் கவலையுடன் செய்வதறியாது சேலம், கரூர், எடப்பாடி, திருச்சி போன்ற தமிழகமெங்கும் உள்ள ஊர்களில்  விதவிதமான போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக மக்களும் இருந்தனர். காரணம் பொங்கல் என்றாலே கரும்புக்குத் தானே முதலிடம். அதுவே இல்லை எனில்? ஒரு பக்கம் கரும்பு விவசாயிகளின்  வாழ்வாதாரம். மறு பக்கம் மக்களின் ஏமாற்றம்.

இந்த சூழலில் இது குறித்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி  ராதாகிருஷ்ணன் என்பவர் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் பொங்கல் தொகுப்புக்காக அரசு நல்ல விலைக்கு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக் கையில் கரும்பைப் பயிரிட்டதாகவும் ஆனால், தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் அதனைக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றத்துடன் திருப்தியாக பொங்கலைக் கொண்டாட முடியாத சூழலை சுட்டிக் காட்டி இருந்தார். மேலும், அந்த மனுவில் பொங்கலையும் கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால் பொங்கல் பரிசில் கரும்பையும் வழங்கக் கோரி டிசம்பர் 24 ந்தேதி அரசுக்கு அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார்.

      இந்த வழக்கு டிசம்பர் 28 அன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை ஜனவரி 2 ந்தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

இது ஒருபுறமிருக்க முதல்வரின் கவனத்துக்கு விவசாயிகள் போராட்டம் கொண்டு வரப்பட்டது. தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோருடன் அவர் நடத்திய ஆலோசனையின் பேரில் இந்த வருடம் பொங்கல் பரிசுடன் செங்கரும்பையும் வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் பெரியகருப்பன். மேலும், விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டியிருப்பதால் முதல்வர் ஜனவரி 9-ந் தேதியன்று பொங்கல் பரிசுத் தொகுப்பை மக்களுக்குவழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைப்பார் என்றும் ஜனவரி 3 முதல்  8 வரை டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்  .

       இந்தச் செய்தியைக் கேட்டு, மகிழ்ந்த தமிழகமெங்கும் உள்ள கரும்பு விவசாயிகள் பொங்கல் பண்டிகையில் தங்கள் வாழ்வில் இனிமை சேர்த்த அரசுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com