மரணத்தை முன்கூட்டியே உணர்ந்த கோயில் யானைகள்


காலச்சக்கரம் நரசிம்மாவின் முகநூல் பக்கத்திலிருந்து...
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, திடீரென்று கீழே விழுந்து மரணம் அடைந்தது, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மரணம் அடைவதற்கு முந்தைய இரவு, உறங்குவதற்கு புறப்பட இருந்த பாகனின் கையை தனது துதிக்கையால் பிடித்து இழுத்து , ''போகாதே...போகாதே.'' என்று கூறுவது போல, தனது பக்கத்தில் இருத்தி கொண்டதாம். யானைப் பாகன் அதற்கு முத்தமிட்டுவிட்டு கிளம்புவதற்கு எத்தனிக்க, மீண்டும் மீண்டும், அவரது கையை பிடித்து இழுத்ததாம். ஆக, லட்சுமி யானை தனக்கு மரணம் நெருங்குகிறதை உணர்ந்திருந்தது போலும்.
குருவாயூர் கேசவன் கூட தான் மரணம் அடைய போவதை உணர்ந்து, ஒரு வாரம் முன்பே உணவு உண்பதை நிறுத்தி விட்டது.
எனது சிறு வயதில் திருவல்லிக்கேணியிலும் ஓர் யானை இருந்தது. அதன் பெயர் ஆழ்வான். சிறு குட்டியாக திருவல்லிக்கேணிக்கு வந்த ஆழ்வான், பகுதி மக்களுக்கு உயிராக திகழ்ந்தது. பார்த்தசாரதி பெருமாளுக்கு, சாமரம் போடுவது, அவரை சுற்றி வலம் வருவது, ஊர்வலங்களில் முன்னால் செல்வது, அபிஷேக நீர் குடத்தை சுமந்து வருவது என்று பல கைங்கர்யங்களை செய்தது. ஒரு முறை கூட அதற்கு மதம் பிடித்ததாக வரலாறு இல்லை.
1975-ல், டையேரியாவால் பாதிக்கப்பட்ட ஆழ்வான், நிற்க முடியாமல் நிலத்தில் சரிந்தது. ஆழவான் தனக்கு மரணம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தது. ஒரு விழாவுக்காக பார்த்தசாரதி பெருமாள், ஈக்காடுதாங்கல் வரை சென்றிருந்தார். அவர் திரும்பி வரும் வரையில் காத்திருந்து, அவர் வந்ததும்தான் ஆழ்வான் தனது உயிரை விட்டது.
இன்று புதுச்சேரி லட்சுமிக்காக மக்கள் கலங்குவது போல்தான், அன்று திருவல்லிக்கேணியே ஆழ்வானுக்காக கதறி துடித்தது.
திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் தேசிய பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆழ்வான் அடக்கம் செய்யப்பட்டது.
நான் பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு, ஆழ்வானை மாலை அடக்கம் செய்த பிறகே, குளித்துவிட்டு உணவு உண்டேன். காரணம், அன்றாடம், ஆழ்வான் மாலை ஐந்து மணிக்கு குளிப்பான். நான் பள்ளி முடிந்ததும், ஆழ்வான் குளிப்பதை பார்த்துவிட்டுத்தான், வீட்டுக்கு செல்வேன். எங்கள் இருவரிடையே தோழமை உண்டாகி இருந்தது.
ஆழ்வானுக்கு முந்தைய யானை வைஜயந்திமாலா மைசூர் மகாராஜாவால் பார்த்தசாரதி கோவிலுக்கு வழங்கப்பட்டது. மகாகவி பாரதியாரை நெட்டித் தள்ளிய யானை வைஜயந்திமாலாதான்.
ஆழ்வானுக்கு பிறகு மோகன் என்கிற யானை வந்தது. அதற்கு கான்க்ரீட் காடான திருவல்லிக்கேணி பிடிக்கவில்லை. வண்டலூருக்கு அதை அனுப்பினார்கள். ஆனால் அங்கே மற்ற யானைகள், மோகனுடன் மோதி தாக்கியதில், படுகாயமடைந்த மோகன், இறந்து போனது.

1975-ல் திருவல்லிக்கேணியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தெருவோர பம்பில், ஆழ்வான் யானை தண்ணீர் அருந்தும் காட்சி.