தானத்தில் சிறந்த தானம் – உடல் தானம்

தானத்தில் சிறந்த தானம் – உடல் தானம்

நானும் உடல் தானம் செய்ய விரும்பறேன். அதுக்கு என்ன ஃபார்மாலிட்டீஸ், எப்படி அப்ளிகேஷன் போடணும்னு சொல்லுங்கள். அப்புறம், அதுக்கு ஏதாவது ஏஜ் லிமிட் இருக்கா? ஏன்னா, என்னோட பொண்ணுக்கு பதினொரு வயசு. அவளும் உடல் தானம் பண்ணணும்னு சொல்றா.  இன்னொரு டவுட்டு. உடல் தானம் வேற, உறுப்பு தானம் வேறயா? தனித்தனியா செய்யணுமா? இல்லே, உடல் தானம் செய்தாலே அவங்களுக்கு தேவையான உறுப்புகளை எடுத்துக்கிட்டு, அப்புறம் உடலை எடுத்துக்குவாங்களா?  என்று நமது வாசகி ஒருவர்  அனுப்பியிருந்த இந்தக் கேள்விக்கு,  டில்லியில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளரும் உடல் தானத்தைச் செய்தவருமான ஷாஜஹானிடம் பதிலை கேட்டோம்...

 உடல் தானம் , உறுப்பு தானம் இரண்டும் வேற வேறா?

ஆம். இரண்டும் வேறு வேறு. என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உறுப்பு தானம் என்பது, ஒருவர் உயிரோடு இருக்கும்போதும் செய்யலாம். உதாரணமாக, நமக்கு இரண்டு சிறுநீரகங்கள் (கிட்னி) உண்டு. இயல்பான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான ஒரு கிட்னி போதும். இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் ஒருவருக்கு ஒரு கிட்னியை நாம் தானம் செய்யலாம். இது போன்ற செயல்கள் உறுப்பு தானத்தில் வரும் - இது Living Donation எனப்படும். ஆனால் இதற்கு நிறைய விதிகளும் நிபந்தனைகளும் உண்டு. உறுப்பு தானம் Transplantation of Human Organs Act (THOA) என்ற சட்டத்தின்கீழ் வரும்.

உறுப்பு தானம் செய்ய :

1. 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

2. தானம் செய்கிற நபருடைய கிட்னி, தானம் பெறுகிற நபருக்குப் பொருந்தக்கூடியதாக இருந்தால்தான் செய்ய முடியும். அதற்காக பல பரிசோதனைகள் செய்துதான் முடிவு செய்வார்கள்.

3. தானம் செய்கிறவரின் உடல் ஆரோக்கியமும் பரிசோதனை செய்யப்படும். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய், எச்ஐவி (எய்ட்ஸ்), போன்ற நோய்கள் உள்ளவர்களின் உறுப்புகளை ஏற்க முடியாது. புகைப்பவர்களின் கிட்னியைக்கூட ஏற்க முடியாது, எனவே உறுப்பு தானம் செய்வதற்கு முன்பு புகைப் பழக்கத்தை கைவிட்டுவிட்டு வாருங்கள் என்று சொல்லவும் கூடும்.

4. யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் தானம் செய்ய முடியாது. உடல் உறுப்பு வியாபாரத்தைத் தடை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த விதி உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் இரண்டு வகையில் தானம் செய்யலாம். நெருங்கிய உறவினர்களுக்கு (near relative donor), உறவினர் அல்லாதவர்களுக்கு (other than related).

5. மேலே குறிப்பிட்ட விதியின்படி, உறவினர்கள் என்பதில் பெற்றோர், வாழ்க்கைத் துணை, உடன் பிறப்புகள், குழந்தைகள், பேரக் குழந்தைகள் போன்றோர் அடங்குவர். உறவினர் அல்லாதவர்களுக்கு தானம் செய்வது என்றால், அது முழுக்க முழுக்க தன்னார்வத்தின் அடிப்படையில் செய்வதாக இருக்க வேண்டும். பணத்துக்காகவோ, வேறு ஏதாவது பலன் பெறுவதற்காகவோ தானம் செய்வதாக இருக்கக்கூடாது. உறவினர் அல்லாதவருக்கு தானம் செய்வதானால், அதற்கான ஒரு ஆணையத்தின் அனுமதி பெற்றே செய்ய முடியும்.

உறுப்பு தானத்தில் மற்றொரு வகை Deceased donation - அதாவது, இறந்தபின் தானம். திடீரென்று ஏதேனும் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை அவர்களது குடும்பத்தினர் தானம் செய்வது. கோமாவில் இருப்பவர்களின் உறுப்புகளை தானம் செய்ய முடியாது. ஏனென்றால், கோமாவில் இருந்தாலும் மூளை செயல்படும். அது மூளைச்சாவு எனக் கருதப்படாது. மூளையும் செயல்படாமல், முற்றிலும் செயற்கைக் கருவிகளால் மட்டுமே உடலில் உயிர் இருக்கும் நிலைதான் மூளைச்சாவு நிலை. இந்த வகையில் உள்ள நபர்களின் உறுப்புகளை குடும்பத்தினர் ஒப்புதலுடன் தானம் பெற முடியும்.

 உடல் தானம் செய்தாலே அவங்களுக்கு தேவையான உறுப்புகளை எடுத்துகிட்டு, அப்புறம் உடலை எடுத்துக்குவாங்களா?

உடல் தானம் என்பது, தான் இறந்த பிறகு தனது உடலை எடுத்துக் கொள்ளலாம் என்று ஒருவர் முன்கூட்டியே பதிவு செய்வது. அல்லது, ஒருவர் இறந்த பிறகு, உடலை அவரது உறவினர்கள் தானம் செய்வது.

இப்படி தானம் செய்வதற்கு நாம் உயிரோடு இருக்கும் போதே பதிவு செய்து கொள்ளலாம்  அதற்கான ஒரு அடையாள அடையையும் கொடுப்பார்கள், ஒருவர் தனது உடலை தானம் செய்வதாகப் பதிவு செய்திருந்தாலும், இறந்து போனவர் தானாகவே ஏதும் செய்ய முடியாதே! அதனால், அவர்களுடைய குடும்பத்தினர்தான் அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.  அதற்காக இந்த தானவிருப்பம், அதற்கான் பதிவு அவர்களுக்குத்தெரிந்துக்க வேண்டும் என்னதான் முன்பதிவு செய்திருந்தாலும், இறந்தபிறகு, குடும்பத்தினர்தான் உடலை மருத்துவமனையில் தானம் அளிக்க வேண்டும். இறந்துபோன பிறகு குறிப்பிட்ட நேரத்துக்குள் மருத்துவமனையை அடைந்தால்தான் கார்னியா போன்ற உறுப்புகள் பயன்படும். இதையும் குடுமப் உறுப்பினர்கள் அறிந்திருக்க வேண்டும்.

 ஆனால் இயற்கையாக இறந்தவர்களின் உடலிலிருந்து கார்னியா, எலும்பு, தோல், இரத்தக் குழாய்கள் போன்ற மிகச்சில உறுப்புகளை மட்டுமே பயன்படுத்த முடியும். இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளைப் பயன்படுத்த முடியாது. ஆனால், மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலிலிருந்து, கிட்னி, இதயம், ஈரல், நுரையீரல், திசுக்கள் உள்ளிட்ட சுமார் 37 வகையான உறுப்புகளை தானம் பெற முடியும். இதுதான் உறுப்பு தானம் - உடல் தானம் இரண்டுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு.

 இந்தியாவில் உறுப்பு தானத்துக்கான தேவை மிகமிகமிக அதிகமாக உள்ளது. உதாரணமாக, சிறுநீரகச் செயலிழப்பால் இந்தியாவில் ஆண்டுதோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சம். ஆனால் தானமாகக் கிடைப்பது வெறும் 6 ஆயிரம்தான். கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றால் உயிரிழப்பவர்கள் ஆண்டுக்கு இரண்டு லட்சம். கல்லீரல் கிடைத்தால் இதில் சுமார் 20-30 ஆயிரம் பேரை காப்பாற்ற முடியும். கார்னியா தேவை ஆண்டுக்கு ஒரு லட்சம். ஆனால் கிடைப்பது 25 ஆயிரம்தான்.

மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால், விபத்துகளால் மூளைச்சாவு அடைகிறவர்களின் உறுப்புகளை தானம் செய்வதில்லை. மத நம்பிக்கை, மூட நம்பிக்கை போன்ற பல காரணிகளும் இதைத் தடுக்கின்றன.

 உடல் தானம் மருத்துவ மாணவர்களுக்கும் ஆராய்ச்சிக்கும்  உதவுகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் பயில்கிறார்கள். அவர்கள் கல்வி கற்பதற்கு உடல்கள் தேவைப்படுகின்றன. எந்த உறுப்புகளுமே பயன்படாவிட்டாலும், நமது உடல் நமது அடுத்த தலைமுறைக்கு சிகிச்சை அளிக்கப்போகும் எதிர்கால மருத்துவர்களுக்குப் பயன்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com