
2022 - 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்” என அறிவித்தார்.
2023ம் ஆண்டுக்குள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி டிஜிட்டல் கரன்சியை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் டிஜிட்டல் கரன்சியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “இந்த டிஜிட்டல் ரூபாய் முதற்கட்டமாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கரன்சியா அப்படின்னா?
டிஜிட்டல் கரன்சி அல்லது இ-ரூபாய் என்பது தற்போதுள்ள பேப்பர் வடிவத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக டிஜிட்டல் கோடுகளை கொண்ட டிஜிட்டல் கரன்சி அல்லது இ-ரூபாயாகும். இதனை அனைத்து விதமான டிஜிட்டல் கரன்சிக்கும் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, இது, “டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த மட்டுமே தவிர, பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக அல்ல” என தெரிவித்துள்ளது.
இந்த இ - ரூபாய் வந்ததால் இப்போது இருக்கும் பேப்பர் ரூபாய்கள் என்னவாகும்?
கவலையே வேண்டாம். அதுவும் தொடரும். “நீங்கள் டிஜிட்டல் கரன்சியைத்தான் பயன்படுத்த வேண்டும்” என்ற கட்டாயமில்லை. இது நமது நாட்டின் நாணயம் தொடர்பான வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையில் இது மிகப் பெரிய சாதனையாக இருக்கப் போகிறது. தொழில் நடைபெறும் வழிமுறையில் இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இது ஒரே இரவில் நடைபெற்றுவிடாது. பல காலமாகும், அதுவரை பேப்பர் கரன்சிகளும் தொடரும்.
இப்போது பரிசோதனை முறையில் சில்லறை வர்த்தகத்திற்கான டிஜிட்டல் கரன்சி, இந்த மாதத்திற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்படும். அதேநேரத்தில், ‘டிஜிட்டல் கரன்சியை முழு அளவில் பயன்பாட்டுக்கு விடுவது எப்போது’ என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. டிஜிட்டல் கரன்சி தற்போதுதான் உலகிற்கு அறிமுகமாகி இருக்கிறது. ஒரு சில நாடுகளே டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தி உள்ளன.
இது கிரிப்டோ கரன்சி மாதிரியா?
இல்லை ரிசர்வ் வங்கி இன்று(3/11/22) முதல் முறையாக டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தும் நிலையில், சிலர் இதை “கிரிப்டோ கரன்சி” எனத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். உலகெங்கும் கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோ கரன்சிகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை பிட்காயின் தொடங்கி வைத்த நிலையில், அதன்பின் பல கிரிப்டோ கரன்சிகள் இப்படி வெளிவரத் தொடங்கியது. இருப்பினும், இந்த கிரிப்டோ கரன்சிகளை பல நாடுகள் சந்தேகத்துடன் தான் அணுகின. ஏனென்றால், கிரிப்டோ கரன்சிகள் எந்தவொரு நாட்டின் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிலும் வரவில்லை.
கிரிப்டோ கரன்சி இந்தியாவைப் பொறுத்தவரை முதலில் கிரிப்டோ கரன்சிகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், பலரும் அதை வைத்து சூதாட்டம் போல டிரேடிங் செய்யத் தொடங்கியதால் இதற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. நேரடியாக கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவில்லை என்றாலும் கூட அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டிரேட் செய்யவே முடியாத வகையில் மாற்றிவிட்டன.
கடந்த ஆண்டு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் கிரிப்டோ கரன்சியின் புழக்கம் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்திருந்தது. கிரிப்டோ கரன்சியில் பெருவாரியான முதலீடுகளைச் செய்வது பண மோசடி, பயங்கரவாதத்திற்கு பண உதவி செய்வது போன்றவற்றிற்கு வழிவகுக்கக்கூடும். மேலும் கிரிப்டோ கரன்சியின் பயன்பாடு பணவியல் கொள்கை பரிமாற்றம் மற்றும் உள்நாட்டு நாணயத்தின் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு வழிவகுக்கக்கூடும். அதனால் தான் இந்த டிஜிட்டல் கரன்சிஅறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தக்கூடியது என்பதால் சட்டப்பூர்வமான அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு கிடைக்கிறது.
அதுமட்டுமில்லை, கிரிப்டோ கரன்சிகளின் விலை தாறுமாறாக மாறும். உதாரணமாகக் கடந்த ஜூன் 1ம் தேதி ரூ.25 லட்சமாக இருந்த ஒரு பிட்காயின் மதிப்பு இப்போது 16.8 லட்சமாகச் சரிந்து உள்ளது. இப்படி மாறிக் கொண்டே இருந்தால் தொழில் செய்வது கடினம். அதேநேரம் டிஜிட்டல் ரூபாயின் மதிப்பு எப்போதும் ரூபாய் மதிப்புக்கு நிகராகவே இருக்கும். இதனால் தொழில் செய்வதில் பிரச்னை எதுவும் இருக்காது. ரிசர்வ் வங்கி மேலும், டிஜிட்டல் நாணயத்தை யாராலும் சேதப்படுத்த முடியாது. ரூபாய் நோட்டுகளின் காலம் என்பது குறிப்பிட்ட ஆண்டுகள் வரைதான். ஆனால், டிஜிட்டல் ரூபாய்க்கு இப்படி கட்டுப்பாடுகள் இல்லை.
இது எப்படி இயங்கும்.
கண்ணால் பார்க்கமுடியாத இந்த கரன்சி டிஜிட்டல் வடிவில் இருக்கும், அதாவது ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ள மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமானது (CBDC) டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ நாணயம் ஆகும். இதனை பரிவர்த்தனைக்காகவும், சேமிப்பிற்காகவும் பணத்தைப் போலவே பயன்படுத்தலாம். உங்கள் சேமிப்புக்கு ஒரு கோட் எண் கொடுக்கப்படும். அதைப் பயன்படுத்தி நீங்கள் மற்றவருக்கு செய்ய வேண்டிய பணபரிமாற்றத்தை அவருடைய டிஜிட்டல் கணக்கில் செய்யலாம். அவரும் இதுபோல் செய்வார். இப்படி படிப்படியாக நாளடைவில் பேப்பெர் கரன்சிகளின் புழக்கம் குறையும் இந்த கரன்சி முறை பரிவர்த்தனைகள் பெருகும்.
டிஜிட்டல் நாணயத்தின் வகைகள்:
சில்லறை விற்பனை (CBDC-R), மொத்த விற்பனை (CBDC-W) என மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
சில்லறை CBDC என்பது சில்லறை பரிவர்த்தனைகளுக்கான பணத்தின் டிஜிட்டல் வடிவமாகும். சில்லறை விற்பனைக்கான டிஜிட்டல் நாணயங்களை தனியார் நிறுவனங்கள், நிதி சாராத நிறுவனங்கள் மற்றும் வணிகத்திற்கு பயன்படுத்தலாம். மொத்த CBDC ஆனது வங்கிகளுக்கிடையேயான பரிமாற்றங்கள், அரசின் சேமிப்புபத்திரங்களில் மூதலீடு செய்ய, வங்கிகளுக்கிடையேயான பண மாற்றங்கள் மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கரன்சி என்பது 'டிஜிட்டல் கோட்' பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது.
டிஜிட்டல் கரன்சி எப்படி இருக்கும்?
டிஜிட்டல் நாணயமான இ-ரூபாய் இரண்டு வடிவங்களைக் கொண்டிருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.
முதலாவது, டோக்கன் அடிப்படையிலும் இரண்டாவது கணக்கு அடிப்படையிலும் இருக்கும்.
டோக்கன் அடிப்படையிலான டிஜிட்டல் நாணயம் என்பது வங்கியின் ரூபாய் நோட்டு போன்றது. அதாவது, இந்த டோக்கனை வைத்திருப்பவர் அதன் மதிப்புக்கு உரிமையாளராக இருப்பார்.
கணக்கு அடிப்படையிலான அமைப்பில் டிஜிட்டல் கரன்சி வைத்திருப்பவர், இருப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்திருக்க வேண்டும். உண்மையில் இ-ரூபாய், இந்திய ரூபாயின் டிஜிட்டல் பதிப்பாக இருக்கும்.
டிஜிட்டல் நாணயம், எந்தவொரு வங்கி அல்லது சேவை வழங்குனருடனும் இணைக்கப்பட்டுள்ள உங்கள் பணப்பையில் (Wallet) இருக்கும். அதைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் பரிவர்த்தனைகளைச்செய்யலாம்.
இதை யார் வழங்குவார்கள், இது எப்படி டிரான்ஸ்ஃபர் செய்யப்படும்?
ரிசர்வ் வங்கி இ-ரூபாய் வெளியிடும், ஆனால், வணிக வங்கிகள்தான் அதை விநியோகிக்கும். டிஜிட்டல் ரூபாயின் சில்லறை பதிப்பு, டோக்கன் அடிப்படையிலானதாக இருக்கும். நீங்கள் மின்னஞ்சல் போன்ற இணைப்பை (link) பெறுவீர்கள். அதில் உங்கள் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பணம் அனுப்ப முடியும்.
மற்ற நாடுகளில் இது இருக்கிறதா?
தற்போது நைஜீரியா, ஜமைக்கா உள்ளிட்ட பத்து நாடுகள் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளன. G-20 குழுவின் 19 நாடுகள் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றது.
100க்கும் மேற்பட்ட நாடுகள் டிஜிட்டல் கரன்சிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அட்லாண்டிக் கவுன்சிலின் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி டிராக்கரை மேற்கோள் காட்டி உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
இதனால் என்ன பயன்?
டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதின் மூலம் - ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவது, பராமரிப்பது போன்ற செலவுகளை குறைக்க டிஜிட்டல் கரன்சி பயன்படும். மேலும், பொருளாதாரத்தை அதிகரிக்க டிஜிட்டல் கரன்சி உதவக்கூடும் என்று ரிசர்வ வங்கியின் குழு தன் அறிக்கையில் சொல்லுகிறது.
இது நமது நாட்டின் நாணயம் தொடர்பான வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையில் இது மிகப் பெரிய சாதனையாக இருக்கப் போகிறது. தொழில் நடைபெறும் வழிமுறையில் இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.