புத்தகங்கள் வழங்கும் இரண்டாம் நபர் அனுபவம் (vicarious feeling)

புத்தகங்கள் வழங்கும் இரண்டாம் நபர் அனுபவம் (vicarious feeling)

புத்தகங்களைப் படிப்பதில் நமக்கு கிடைக்கும் மிக முக்கியமான ஒன்று, இரண்டாம் நபர் அனுபவம். ஆங்கிலத்தில் இதனை Vicarious Feeling என்று கூறுவார்கள்.

நாம் ஒரு குறிப்பிட்ட துறையில், குறிப்பிட்ட நபர்கள், நண்பர்களுடன் மட்டுமே பேசி, கலந்துரையாடுகிறோம். நம்மைச் சுற்றிய வட்டமானது குறுகிய வட்டமே. அதில் நாம் சந்திக்கும் நபர்கள் குறைவு.

ஆனால், புத்தகத்தினைப் படிக்கும் போது, வெவ்வேறு மனிதர்கள், அவர்களது ஆசாபாசங்கள், அவர்களது பிரச்சனைகள், அவர்களது வாழ்வின் நோக்கம், அவர்களது சூழ்நிலைகள், அவற்றை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் என்று வேறு ஒரு உலகிற்கு அது நம்மைக் கொண்டு செல்கிறது.

எழுத்து என்றால் என்ன 

தனைப் பற்றி ஸ்டீபன் கிங் அவர்கள் தன்னுடைய எழுதும் கலையினை விவரிக்கும் புத்தகத்தில் (On writing) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

What writing is: It is pure telepathy, where writer and reader are on same page, even though they might be centuries apart in their living.

எழுத்து என்றால் என்ன? அது சுத்தமான சமிக்ஞை, பேச்சு அற்ற மனப் பரிமாறல். அங்கு எழுத்தாளரும், வாசகரும், அவர்களது வாழ்நாள் வெவ்வேறு நூற்றாண்டுகளை சார்ந்திருக்கும் பட்சத்தில் கூட, ஒரே பக்கத்தில் உள்ளனர்.

என்றோ எழுதிய திருக்குறளினை, இன்றும் நாம் படித்து, திருவள்ளுவர் கண்ட அதே உலகினை நாமும் காண்கிறோம்.

இத்தகைய இரண்டாம் நபர் அனுபவத்தின் மூலம், நாம் மேம்படுகிறோம்.

ஸ்டீபன் கிங்
ஸ்டீபன் கிங்

வாசகன் சந்திக்கும் புதிய மனிதர்கள் மூலம் புதிய கோணங்களைக் காண்கிறான்.

புத்தகங்கள் மூலம் வாசகன் எழுத்தாளர் கண்ட கதாபாத்திரங்களை, எழுத்தாளர் உருவாக்கிய உலகத்தில், சந்திக்கிறான். இதன் மூலம், வாசகன் தனது வாழ்நாளில் எதிர்கொள்ள முடியாத (உதாரணமாக, அரசர் வம்சத்து கதாபாத்திரங்கள்), எதிர்கொள்ள வாய்ப்பு இல்லாத (உதாரணமாக, அடித்தட்டு மக்கள் கதாபாத்திரங்கள்), எதிர்கொள்ள மிகவும் பிரயத்தனப்படக் கூடிய (உதாரணமாக, ஆப்கானிஸ்தான் நாட்டு உள்நாட்டு போர் நடக்கும் சமயத்தில், நாட்டு குடிமகன்கள்) போன்ற கதாபாத்திரங்களை, புத்தகம் படிப்பதன் மூலம், எதிர்கொள்கிறான்.

கதாபாத்திரங்களின் வாழ்க்கையைப் பற்றிய வெவ்வேறு கோணங்களை எதிர்கொள்கிறான்.

உதாரணமாக, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, அம்மாவினைப் பற்றிய ஒரு கதையைப் படிக்கிறார். அந்தக் கதையில் ஒரு கதாபாத்திரம், வீட்டில் தோசைக்கு மட்டும் அம்மா எவ்வளவு உழைத்திருக்கிறார் என்ற கோணத்தில் ஒரு கணக்கு போடுகிறது. அந்தக் கணக்கு பின்வருமாறு;

வீட்டில் நபர்கள் 5 பேர். தினமும் இரவு தோசை சாப்பிடுவது வழக்கம். ஒருவருக்கு 4 தோசை வீதம், அம்மா தோசை சுடுவார்.

ஒரு நாளில் அம்மா சுடும் தோசைகள்;

5 x 4 = 20 தோசைகள்

ஒரு மாதம் அம்மா சுடும் தோசைகள்;

30 x 20 = 600 தோசைகள்

ஒரு வருடத்தில் அம்மா சுடும் தோசைகள்;

600 x 12 = 7200 தோசைகள்

கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக, அம்மா சுட்டுள்ள தோசைகள்;

7200 x 25 = 1,80,000 தோசைகள்

இதைப் படித்த பின்பு, அம்மாவினை பார்க்கும் பார்வையானது வாசகனுக்கு மாறி விடும். அம்மாவின் கைகள் சாதாரண கைகள் அல்ல. குடும்பத்திற்காக , கிட்டத்தட்ட 2 லட்சம் தோசைகள் செய்த கைகள். இதைப் படித்தபின்பு, வாசகன் அம்மாவின் கைகளைப் பார்த்தால், கைகளை வணங்கத் தோன்றும். தோசைக்கு மட்டுமே, அம்மாவின் உழைப்பு இவ்வளவு என்றால்,மற்ற உழைப்புகள் எவ்வளவு குடும்பத்திற்காக செய்துள்ளார் என்ற புதியதோர் கோணம், வாசகனுக்கு வருகிறது. அன்று முதல், வாசகனுக்கு தாயின் மீதான பார்வை வேறு ஒரு தளத்திற்கு செல்கிறது.

எனவே, இவ்வாறு புதியதோர் கோணத்தினை, வாசனுக்கு, புதியதோர் கதாபாத்திரம் கொடுக்கிறது. இத்தகைய மனிதர்களை நாம் சந்திப்போமோ என்பது கேள்விக்குறிதான். ஆனால், புத்தகம் மூலம், பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் அந்த ஒரு மனிதனைச் சந்திக்கிறார்கள். அந்த மனிதனின் பார்வையை, கோணத்தினை தாங்களும் பெறுகின்றனர்.

பல மனிதர்களை சந்திப்பதன் மூலம் வாசகனின் மனம் விரிவடைகிறது.

வாசகன் வெவ்வேறு புத்தகங்களைப் படித்தபோது, வெவ்வேறு அனுபவங்களைக் கொள்கிறான். இத்தகைய அனுபவங்களின் மூலம், அவனது பார்வை விசால மடைகிறது. அவன் குறுகிய வட்டமுடையவன் இல்லை. கிணற்றுத் தவளையாக இருந்த அவன், சமுத்திர தவளையாக மாறுகிறான்.

அவன் ஜாதி, மதம், மொழி, நாடு போன்ற வட்டங்களிலிருந்து மேலெழும்பி, கழுகுப் பார்வையுடன் உலகினைப் பார்க்கிறான். வாசகன் சந்திக்கும் கதாபாத்திர நபர்கள், அவனுக்கு வாழ்நாளில் கிட்டாத பல்வேறு விஷயங்களை, அனுபவங்களை பகிர்ந்துக் கொள்கின்றனர். அதன் மூலம், அவனது பார்வை விசாலமடைகிறது. இந்த அனுபவங்கள் மூலம், அவன் மற்றவர்களின் உணர்வுகளை, அவர்களது தேவைகளை புரிந்துக் கொண்டு, ஒத்துதவி , நல்லதொரு மனிதனாக உருவாக, புத்தகங்கள் உதவுகின்றன.

புத்தகங்களைப் படிப்போம். நம்மை மேம்படுத்திக் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com