அன்றும் இன்றும்: காமராஜர் என்னுடைய தலைவர் - எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு எதற்கும் தயாராக இருந்த எம்.ஜி.ஆர்!

அன்றும் இன்றும்: காமராஜர் என்னுடைய தலைவர் - எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு எதற்கும் தயாராக இருந்த எம்.ஜி.ஆர்!

14-03-1964ல் நிகழ்ந்த சம்பவம்!

1972ல் தி.முக ஆட்சியில் இருந்தபோது முதல்வர் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான மோதல் வெடித்து, எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது எல்லோருக்கும் தெரிந்து விஷயம்தான். அதற்கு முன்னதாகவே எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு இருந்ததும், தி.மு.கவின் முன்னணி தலைவர்களுக்கும் எம்.ஜி,ஆருக்கும் இடையே மோதல் இருந்ததும் நிறைய பேருக்கு தெரியாத விஷயம்.

1962ல் தமிழகம் முழுவதும் தி,மு.க வேட்பாளர்களை ஆதரித்து எம்.ஜி.ஆர் பிரச்சாரம் செய்தார். அதன் காரணமாக 52 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்று, தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை பெற்றது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் கட்சி சார்பற்ற மக்களையும் ஓரணியில் திரட்டிய எம்.ஜி.ஆரை பாராட்டி அவருக்கு சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவி தரப்பட்டது.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்ற அண்ணாதுரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தி.மு.க தலைவர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது. இந்நிலையில் காமராஜரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர், தனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள பூர்வ ஜென்ம பந்தம் பற்றியெல்லாம் பேசிவிட்டு, அண்ணாதுரை வழிகாட்டியாக இருந்தாலும் காமராஜர்தான் என்னுடைய தலைவர் என்றார்.

காமராஜர், என்னுடைய தலைவர் என்று எம்.ஜி.ஆர் பேசியது தி.மு.க வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. எம்.ஜி.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவெடுத்துவிட்டார். அண்ணாதுரை கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் இனி தி.மு.கவுக்கு அரசியல் வாழ்வு இல்லையென்று முடிவுக்கு வந்துவிட்டார் என்றெல்லாம் வதந்திகள் உலா வந்தன.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் நடிப்பில் என் கடமை என்றொரு படம் வெளியானது. காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர் பட வெளியீடுகளின் போது தி.மு.கவின் கொடி திரையரங்கு வாசல்களில் அலங்கரிக்கப்படும். படம் வெற்றி விழாவில் தி.மு.கவின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், என் கடமை திரைப்படத்தை தி.மு.கவினர் முற்றிலுமாக புறக்கணித்தார்கள்.

தி.மு.கவினரின் வரவேற்பு இல்லாத காரணத்தால் என் கடமை தோல்விப்படமானது. இதனால் அதிருப்தியடைந்த எம்.ஜி.ஆர் தன்னுடைய எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்தார். 59 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (14/03/1964) தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த எம்.ஜி.ஆர், தான் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்று எதற்கும் தயாராக இருந்தார்.

எம்.ஜி.ஆர், காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு தயாராகிவிருகிறார் என்னும் செய்திகள் வந்ததும், அவருடைய சக நடிகரான எஸ்.எஸ். ராஜேந்திரன் எம்.ஜி.ஆரை துரோகியாக வர்ணித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை கிளப்பிய அந்த அறிக்கையை தி.மு.க தலைவர்களும் கொண்டாடினார்கள்.

எம்.ஜி.ஆர் காங்கிரஸ் பக்கம் சாய்கிறார் என்று தெரிந்ததும் சிறையில் இருந்த அண்ணாதுரை உள்ளுக்குள் உடைந்து போனர். ஆனாலும், எம்.ஜி.ஆரை பற்றி உருக்கமாக குறிப்பிட்டு தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். எங்கே போனாலும் எம்ஜிஆர், என்னுடைய நெஞ்சை விட்டு அகல மாட்டார் என்று எழுதியிருந்தது எம்.ஜி.ஆரின் மனதை மாற்றிவிட்டது.

சிறையிலிருந்து அண்ணாதுரையை நேரில் சந்தித்து பேசியதும் சுமூக நிலை திரும்பியது. சத்யா மூவிஸ் தயாரிப்பில் அடுத்து வெளியான தெய்வத்தாய் படத்தை எம்.ஜி.ஆர் ரசிகர்களோடு தி.மு.கவினர் கொண்டாடி, 1964ன் மிகப்பெரிய வெற்றிப்படமாக்கினார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com