‘‘பழங்குடிகளின் நிலங்கள் பழங்குடிகளிடம் இல்லை!’’

‘‘பழங்குடிகளின் நிலங்கள் பழங்குடிகளிடம் இல்லை!’’

நில மீட்புப் போராட்டத்திற்கு தயாராகும் தமிழக பழங்குடி கிராமங்கள்

“கடையனுக்கும் கடைத்தேற்றம்” என்றார் காந்தியடிகள். சுதந்திரம் வாங்கிப் பொன்விழாவும் கொண்டாடி விட்டோம். கடையிலும் கடையாக உள்ள மனிதனுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதா? அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளதா? என்றால் அதற்கு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அனுபவங்கள் வேறு மாதிரி உள்ளன. அதில் ஒன்றுதான் பழங்குடிகளின் நிலை.

காடுகளில் வாழும் பழங்குடிகளைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்விடங்களை பழுதில்லாமல் காப்பாற்றவும் சட்டங்கள் இருக்கின்றன. அதை மத்திய மாநில அரசுகள் காப்பாற்ற ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்கள் முன் முனைப்பு எடுப்பதாகத் தெரியவில்லை. அண்டை மாநிலமான கேரளத்தில் இது குறித்து நிறையவே விழிப்புணர்வு வந்துள்ளது. அதற்கான இயக்க ரீதியான போராட்டங்கள் நடந்து ஓரளவு அங்கே தெளிவு நிலையை அடைந்துள்ளனர் பழங்குடி மக்களும், அவர்கள் சார்ந்த இயக்கங்களும்.

உதாரணமாக கேரளத்தில் அதிகம் பழங்குடி மக்கள் வாழும் பிரதேசமான அட்டப்பாடியில் பெரும்பான்மை இருளர் இன பழங்குடிகள் நிலங்கள் பிறர் வாங்கவோ, விற்கவோ முடியாது. 50 ஆண்டுகளுக்கு முன் கோயமுத்தூர், மன்னார்காடு பகுதியிலிருந்து இங்கே வந்து நிலம் வாங்கின விவசாயிகள், தொழிலதிபர்கள் எல்லாம் தங்கள் நிலங்களை மூதாதைகளுக்கு வெற்றிலை, புகையிலைக்கும், சாராயம், கஞ்சாவும் கொடுத்து எழுதி வாங்கி விட்டனர். அதனால் நாங்கள் எங்கள் மண் இழந்து தவிக்கிறோம் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிவாசிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இதனையொட்டி பல்வேறு சட்டதிட்டங்களை வகுத்தது கேரள அரசு. அதன்படி இப்போதும் கூட அட்டப்பாடியில் சுமார் ஐயாயிரம் ஆதிவாசியல்லாதோரின் நிலங்கள் சர்ச்சைக்குள் சிக்கித் தவிக்கின்றன. என்றாலும் கூட இந்த நிலை புதிய நிலங்களுக்கும் வந்து விடக்கூடாது என்ற வகையில் எஞ்சியிருக்கிற பழங்குடி நிலங்களை பிறர் யாரும் வாங்கவோ, விற்கவோ பத்திரப்பதிவுத்துறை அனுமதிப்பதில்லை.

தவிர தற்போதுள்ள பழங்குடிகளுக்கு அவரவர் நிலங்களை அரசே பட்டா செய்தும் கொடுத்து விட்டது. இப்போது கேரள பழங்குடிகளின் நிலங்கள் விஷயத்தில் முன்மாதிரி மாநிலமாக விளங்குவதோடு, பழங்குடிகளுக்கான கல்வி, மருத்துவம், சுகாதாரம், இருப்பிடம் விஷயங்களிலும் அக்கறை காட்டி வருகிறது. அந்த வகையில் “அகாட்ஸ்” என்ற அமைப்பை நிறுவி கடந்த 25 ஆண்டுகளில் ஏகப்பட்ட நலத்திட்டங்களை பழங்குடிகளுக்காக நிறைவேற்றி உள்ளது.

ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தில் அதே அட்டப்பாடி எல்லையில் உள்ள தமிழக ஆனைகட்டி பகுதியில் இருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்குடி கிராமங்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. இங்கே மட்டுமல்ல, ஆளியாறு, வால்பாறை, சின்னாறு, மேட்டுப்பாளையம், சிறுமுகை, மஞ்சூர், வெள்ளியங்காடு, முதுமலை, கூடலூர், மசினக்குடி, பர்கூர், தாளவாடி என வரும் பல்வேறு பழங்குடி கிராமங்களிலும் பெரும்பாலான ஆதிவாசிகள் நிலங்களுக்கு பட்டா இல்லை.

பிரிட்டீஸ் ஆட்சி காலத்திலேயே இவை பழங்குடி மக்களின் செட்டில்மெண்ட் நிலங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன. இதனால் பழங்குடிகளுக்கான உரிமை பறிக்கப்பட்டு இவர்களின் நிலத்திலிருந்தே வெளியேற்றும் முயற்சியை வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

அதற்கு முதுமலை வனச்சரணாலயம் மற்றும் இந்திராகாந்தி உயிரினப்பூங்கா போன்றவை புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்ட பின்பு இந்த கெடுபிடிகள் மிகவும் அதிகரித்து விட்டன.

அதையெல்லாம் தாண்டி சமீபத்தில் வால்பாறை தெப்பக்குளமேடு மக்கள் தாங்கள் தன் சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட, தொடர் போராட்டங்கள் செய்து தங்களுக்கென குடியிருக்க இரண்டு சென்ட் நிலம் வாங்கி உள்ளனர். அவர்கள் விவசாயம் செய்யும் நிலங்கள் இன்னமும் செட்டில்மெண்ட் என்றே பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதேபோல் 20 ஆண்டுகள் முன்பு கோவை ஆனைகட்டி தூவைப்பதி கிராமத்தில் கோவை தொழிலதிபர்கள் சிலர் “வனஉயிரினப்பூங்கா” என்ற பெயரில் தமிழக அரசிடம் 99 வருடக் குத்தகைக்கு (லீசு) சில நூறு ஏக்கர் நிலங்களைப் பெற்றது. அந்த நிலங்கள் பெரும்பாலும் ஆதிவாசிகளுடைய செட்டில்மெண்ட் நிலங்கள் என்பதால் அவர்கள் நில மீட்புப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் இருதரப்புக்கு மோதல் ஏற்பட்டது. நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது. அதில் உத்தரவு ஆதிவாசி மக்களுக்கு சாதகமாக வந்து விட்டது. என்றாலும் இன்றளவும் இந்தப் பிரச்சனையை அதிகாரிகள் தலையிட்டு முழுமையாகத் தீர்த்து வைக்காது உள்ளனர்.

இதே நிலைமைதான் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர், ஆசனூர், தாளவாடிக் காடுகளிலும் நடக்கிறது. இந்தப் பகுதியில் பழங்குடியினர் சங்கம் சார்பில் 1999-லேயே பழங்குடியினர் நில மீட்புப் போராட்டம் நடத்தி வருகிறார் இதன் தலைவர் விபிஜி என்றழைக்கப்படும் வி.பி.குணசேகரன். அதில் இன்னமும் விடிவு காணப்படவில்லை.

இந்தப் போராட்டம் அவ்வப்போது சுணங்கி, அடிக்கடி தீவிரப்பட்ட நிலையில் சமீபகாலமாகத்தான் இப்பகுதிகளிலும் பழங்குடி மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா தந்து வருகிறார்கள் அரசு அதிகாரிகள். அதிலும் 50 பேர் குடியிருக்கும் கிரமத்தில் 20 பேருக்கு பட்டா கிடைத்தால் அதிகம். அதே நேரம் இவர்கள் விவசாயம் செய்யும் நிலங்கள், கால்நடைகள் மேய்க்கும் நிலங்கள் எல்லாம் பட்டாவாக இன்னமும் இவர்கள் கைக்கு வரவில்லை. அதில் எல்லாம் வனத்துறையே ஆதிக்கம் செலுத்துகிறது.

வன உரிமைச்சட்டம் 2006-ன் படி ஒரு பழங்குடி கிராமத்தில் கிராம சபை கூட அவர்களின் உரிமையை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். வனம், வனம் சார்ந்த பொருட்கள், அங்கே வாழும் உரிமை உட்பட அவர்களுக்கு சாதகமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே அதை முன் வைத்து பல்வேறு பழங்குடி கிராமங்கள் தற்போது பழங்குடி மக்கள் பயன்படுத்தும் நிலங்கள் யாவும் பழங்குடிக்கே சொந்தம் என்ற தீர்மானத்தை இயற்றி வருகிறது.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமங்களில் எல்லாம் கூட்டங்கள் நடத்தி தீர்மானங்களை இயற்றி வருகிறது தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம். அதன் உச்சபட்சமாக இச்சங்கத்தின் ஈரோடு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஞாயிறன்று இச்சங்கத்தின் தலைவர் பாலதண்டாயுதம் தலைமையில் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.

இதன் செயலாளர் ஜீவபாரதி, பொருளாளர் கடம்பூர்.ராமசாமி,சங்கத்தின் மாநில நிர்வாகி வி.பி. குணசேகரன், ஈரோடு வடக்கு மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் எஸ்.மோகன்குமார் உள்பட, தாளவாடி, ஆசனூர்,கடம்பூர்,ப ர்கூர்.அந்தியூர், டி.என்.பாளையம்,சத்தியமங்கலம்,பவானிசாகர் போன்ற பகுதிகளில் இருந்து சஙக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற வி. பி. குணசேகரனுடன் இதுகுறித்துப் பேசினோம்.

‘‘விளிம்பு நிலையில் வாழும் பழங்குடியினரின் நலனுக்காக அரசு பல்வேறு காலகட்டங்களில் விவசாயம் செய்ய விலையில்லாமல் நிலங்களை வழங்கியுள்ளது. வழங்கப்பட்ட இந்நிலங்கள் அனைத்திற்கும் நிபந்தனையுடன் கூடிய பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இந்நிலங்களை வேறு யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கக் கூடாது, பயன்படுத்தாமல் தரிசாக போடக்கூடாது, விற்கக்கூடாது என்றும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் இந் நிலங்களை விற்பனை செய்வதாக இருப்பின் அரசின் அனுமதி பெறவேண்டும், நிலத்தை வாங்குபவர் பழங்குடியினரல்லாதவராக இருக்கக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பழங்குடியினரின் பலவீனமான நிலையைக் கருத்தில் கொண்டே இத்தகைய கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

‘‘இதனையும் மீறி பழங்குடியினரின் நிலங்கள் பழங்குடியல்லாத பிறரால் நாள்தோறும் கிரயம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு வருவாய்த் துறையும்,பதிரப்பதிவுத்துறையும் சட்ட விரோதமாக துணைபோகின்றன. இதனால் நூற்றுக்கு தொன்னூறு சதமான பழங்குடிகள் நிலமற்றவர்களாக மாறியுள்ளனர். இது பல்வேறு சமூக-பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக பழங்குடியினரின் நிலங்களை பழங்குடியினரல்லாதோரால் வாங்கப்படுவதை தடுக்கும் வகையில் நாட்டின் பிற மாநிலங்களில் உள்ளது போன்ற ஒரு சட்டத்தை கொண்டு வரவேண்டும். வருவாய் மற்றும் பத்திரப்பதிவு துறைக்கு கடும் உத்திரவுகளை பிறப்பித்து கிரயங்களையும், வருவாய் ஆவண மாற்றங்களையும் தடுக்க வேண்டும். பழங்குடியினரிடமிருந்து கைமாறிய நிலங்களை அரசே மீட்டு பழங்குடியினருக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளோம்!’’ என்றவர், தொடர்ந்து,

‘‘பர்கூர் மலைப்பகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு வனக்கோட்டத்தை புலிகள் காப்பகமாக அறிவிக்கை செய்திட வனத்துறை முன்மொழிவுகளை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (NTCA) அனுப்பியுள்ளதாக தெரிகிறது. 1972 ஆம் ஆண்டின் வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் 2006 ல் திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட அச்சட்டத்தில், ஒரு வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வகுத்துள்ளது. இதுவரை தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட புலிகள் காப்பகங்கள் எதுவுமே இச்சட்டப்படி அமைக்கப்படாத சட்டவிரோத புலிகள் காப்பகங்களே ஆகும். இச்சட்டப்படி,புலிகள் காப்பகம் அறிவிக்கை செய்யப்படும் முன், அறிவியல் ரீதியான வல்லுநர் குழுவினை அமைத்து புலிகள் மற்றும் மனிதர்களின் வாழ்விடங்கள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். அப்பகுதி மக்களின் கருத்தறிய வேண்டும். வனத்தி்ல் வாழும் பழங்குடியினர் மற்றும் வனம் சார்ந்து வாழும் இதரரின் பாரம்பரிய உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால், இவை எவற்றையும் செய்யாமல்,புலிகள் காப்பகங்கள் அறிவிக்கப்பட்ட பின் மக்களின் வாழ்வுரிமைகள்-சட்ட மற்றும் பாரம்பரிய உரிமைகள் திட்டமிட்டு பறிக்கப்படுகின்றன. வனத்துறையின் இத்திட்டமிட்ட சதிக்கு தமிழ்நாடு அரசு இரையாகக் கூடாது. மக்களின் கருத்தறியாமல்,உரிமைகள் அங்கீகரிக்கப்படாமல் எக்காரணம் கொண்டும் ஈரோடு வனக் கோட்டம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படக் கூடாது!’’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ‘‘தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சோளகர் தொட்டி, பாலப்படுகை, கோடம்பள்ளி, அல்லபுர தொட்டி, ராமரணை, இட்டறை, தடசலட்டி, பெஜலட்டி, மாவநத்தம் , காளிதிம்பம் ஆகிய 10 பழங்குடியினர் கிராமங்கள், 2006 வன உரிமைச்சட்டப்படி மேய்ச்சல் ,சிறு வன மகசூல் சேகரம்,வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளை பயன்படுத்துதல் ,புதைவிடங்களை பயன் படுத்துதல், வனக்கோயில்களில் வழிபாடு செய்தல் மற்றும் இன்ன பிற சமூக வன உரிமைக் கோரிக்கைகளை கிராமசபைகளில் தீர்மானமாக இயற்றி, உரிய ஆவணங்கள் -வரைபடங்களுடன் கோட்ட அளவிலான குழுவிற்கு (SDLC) அனுப்பி பல மாதங்கள் ஆகின்றன. இவற்றை கோட்ட அளவிலான குழு இதனை பரிசீலித்து,அங்கீகரித்து மாவட்ட அளவிலான குழுவிற்கு அனுப்ப வேண்டும். மாவட்ட அளவிலான குழு மக்களின் சமூக வன உரிமைகளை அங்கீகரிக்கும் பத்திரங்களை வழங்க வேண்டும்.

ஆனால்,கோட்ட அளவிலான குழு,கிராம சபை தீர்மானங்கள் வந்து பல மாதங்களாகியும் வனத்துறையின் சட்ட விரோத இடையூறுகளுக்கு இசைந்து உரிமைகளை அங்கீகரிக்காமல் உள்ளது. கோட்ட அளவிலான குழுத் தலைவர் தனது சட்டப்படியான அதிகாரத்தை உணராமல் வனத்துறையின் வற்புறுத்தலுக்கு இசைவு தெரிவிக்கும் நிலையை மேற்கொண்டுள்ளார். இது வனஉரிமைச்சட்டப்படியே தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே, கோட்ட அளவிலான குழுவின் தலைவரான கோட்டாட்சித்தலைவர் தனது சட்டக்கடமைகளை நிறைவேற்றும் வகையில் கிராமசபைக் கோரிக்கைகளை அங்கீகரித்து மாவட்ட அளவிலான குழுவிற்கு(DLC) உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட அளவிலான குழுவின் தலைவரான, மாவட்ட ஆட்சியரும், மாநில கண்ணகாணிப்புக் குழுத் தலைவரான தலைமைச் செயலாளரும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். தொடர்ந்து இந்நிலை நீடிக்குமானால், பழங்குடியினரைத் திரட்டி,கோட்டாட்சியர் அலுவலகத்தில்"அங்கீகாரம் கிடைக்கும் வரை காத்திருக்கும் போராட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று முடிவெடுத்துள்ளோம்!’’ என்று குறிப்பிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழங்குடிகள் கிராமத்திற்காக போடப்பட்ட இந்த தீர்மானங்கள் இதர மாவட்டங்களில் உள்ள பல்வேறு பழங்குடி அமைப்புகளுக்கும், இயக்கங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அவர்களும் இதை அடியொற்றி தீர்மானங்கள் போடவும், போராட்டங்களுக்கு முடுக்கி விடப்பட்டும் உள்ளது. எனவே இந்த முறை பழங்குடிகளுக்கான இந்த நில உரிமை விஷயம் தமிழகத்திலும் புதியதொரு உச்சத்தை தொடும் என நம்பலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com