குதிரை வண்டியை மறந்து விட்டோமே!

குதிரை வண்டியை மறந்து விட்டோமே!

ரு காலகட்டத்தில் வீதிதோறும் குதிரை வண்டி டக்... டக்....என்ற சத்தத்தோடு ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் இன்றைய நவீன உலகத்தில் குதிரை வண்டிகள் காணாமல் போய்விட்டது. குதிரை வண்டிகள் இருந்த காலகட்டத்தில் அதில் பயணம் செய்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் அருமை.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல வீதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இன்றும் விடாமல் குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறார், அந்த குதிரை வண்டியை இன்றும் பழமை மாறாமல் அப்படியே வைத்திருக்கிறார் 

சரி அவரிடம் சென்று கொஞ்சம் பேச்சு கொடுப்போமே...

என்ன சார் வண்டி எல்லாம் எப்படி ஒடுது என்றோம்...

சார் சிதம்பரத்தில் 50க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் ஓடின ஆனா, இப்ப நான் ஒருத்தன்தான் ஓட்டிக்கிட்டு இருக்கேன், எனக்கு வயது 65 ஆகுது. நான் பத்து வயசு முதல் இந்த வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கேன். ஏன்னா இந்த வண்டி ஓடினால்தான் என் குடும்பமும் ஓடும் என்று ஒரு நகைச்சுவை பஞ்சை போட்டார். இடையில் எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் ஒரு மகன் மொத்த குடும்ப உறுப்பினர் 7 பேர் இந்த ஏழு பேருமே இந்த ஒரு குதிரை வண்டியை நம்பித்தான் இருந்தோம் இருக்கிறோம் 

நீங்க குதிரை வண்டியை விற்பனை பண்ணிட்டு ஆட்டோ வாங்கி இருக்கலாமே என்று இடைமறித்தோம்,

னக்கு பத்து வயசு முதல் சோறு போட்டது இந்த வண்டி தாங்க. அதை எப்படி என்னால் விட்டு விட முடியும். இங்கே பக்கத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் இருக்குது. அந்த பசங்க கூட சொல்லுவாங்க வாங்க தாத்தா நாங்க ஆட்டோ கற்றுக் கொடுக்கிறோம் நீங்க ஆட்டோ ஓட்டலாம்னு. நான் அவர்களிடம் சொல்வது ஒன்றுதான் வேண்டாம் கடைசி வரை இந்த குதிரை வண்டியை ஓட்டியே நான் போய் சேற்கிறேன் என்பேன்.

குதிரை வண்டி ஒரு நிலை இல்லாத தொழிலாக போச்சு பள்ளிக்கூட பசங்கள முன்னாடி எல்லாம் ஏத்திக்கிட்டு போவேன். குதிரை வண்டிகள்ல அவர்களும் ஜாலியாக வருவார்கள் பாட்டு பாடிக்கொண்டே. ஆனா இப்ப இருக்கிற பசங்க எல்லாம் குதிரை வண்டியை  கண்டாலே ஓடுறாங்க. பசங்க மாறிட்டாங்க எல்லாருமே நவீனம் ஆயிட்டாங்க. இதையெல்லாம் வேறு ஏதோ வேற்று கிரகத்தில் ஓடும் வண்டியில் நினைச்சுக்கிட்டு இருக்காங்க அப்படி இருந்தும் ஒரு நாலு பசங்கள தினமும் ஸ்கூலுக்குப் கூட்டிக்கிட்டு போயிட்டு வரேன். மாதத்தில் 2000 ரூபாய் கிடைக்கும் அதுதான் என் நிரந்தர வருமானம். 

முன்பெல்லாம் வயதானவர்கள் குதிரை வண்டியை விரும்புவார்கள். இப்போதெல்லாம் அவர்கள் கூட குதிரை வண்டியை விரும்புவதில்லை. நிலையில்லாத வருமானமா போச்சி,  தத்தி புத்தி ரெண்டு சவாரி அல்லது 3 சவாரி ஒரு நாளைக்கு கிடைக்கும் அதை வச்சுதான் ஓட்டிக்கிட்டு இருக்கேன்.

மதியம் வரைக்கும் ஒரு சவாரியும் கிடைக்கலைன்னா ரொம்ப சோர்வா ஆயிடுவேன். ஏன்னா,  வீட்டுல நான் பசியோடு தூங்கிடுவேன். ஆனா எங்கள நம்பி இருக்கிற குதிரை தூங்குமா? ஒரு ஆட்டோ டிரைவர் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் ஓடினால் லாபம். ஓடலைன்னா மறுநாள் ஓட்டிக்கலாம் பெட்ரோல் போட்ட பணம் அப்படியேதான் இருக்கும். ஆனா எங்க பொழப்பு அப்படி இல்ல. நான் தினமும் குதிரைக்கு 200 ரூபாய் செலவு செய்தே ஆகனும். புள்ளு, கொள்ளு, என்று நான் பட்டினியாய்க் கிடந்தாலும் குதிரையை பட்டினி போடக்கூடாது கடன் வாங்கியாவது அதுக்கு சாப்பாடு போட்டு விடுவேன்.

இங்க பாருங்க சாலையில் எவ்வளவு மோட்டார் பைக் ஓடுது, எவ்வளவு புகை வருது இதனால் சுற்றுப்புற சூழலுக்கு எவ்வளவு பாதிப்பு மழை பெய்யலை மழை பெய்யலைன்னு அடிச்சுக்கிறோம் எப்படி பெய்யும் சுற்றுப்புற சூழலை நாசம் பண்றோம். இந்த மாதிரி குதிரை வண்டியால சுற்றுப்புற சூழல் எள்ளளவு கூட பாதிக்காது.

என்னோட ஒரே ஆசை, பழையபடி குதிரை வண்டி சவாரியை மக்கள் விரும்பனும். அரசாங்கமும் அதற்கு ஊக்குவிக்கனும். உள்ளூருக்குள் சுற்றிவரக் கூடவா  குதிரை வண்டியை பயன்படுத்தக் கூடாது?

உடையில் பழமை திரும்புது ஏன்? முடி வெட்டிக் கொள்வதில் கூட  பழமை திரும்பியிருக்கு. இனிமேல் வாகன சவாரியிலும் பழமை திரும்பனும்.  குதிரை வண்டியை குறைந்த பட்சம் உள்ளூர் மக்களாவது பயன்படுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தினால் இரண்டு ஜீவன்களுக்கு உதவியாக இருப்பீர்கள். ஒன்று என் குடும்பத்துக்கும், என்னை நம்பி இருக்கும் வாயில்லா ஜீவன் குதிரைக்கும்.

நான் குதிரை வண்டியை தினமும் காலையில் இங்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டு யாராவது வர மாட்டார்களா? என் குதிரை வண்டியல் சவாரி செய்ய மாட்டார்களா? என்று ஒரு கனவோடுதான் இருப்பேன். எனக்கு வயது 65 ஆகிவிட்டது. என்வாழ்க்கைக்கு பிறகு  இந்த குதிரை வண்டியோடு போய்விடும் என்றுதான் நினைக்கிறேன் என்று கண்கள் கலங்கியபடியே கூறினார் கிருஷ்ணமூர்த்தி நம் இதயமே கனத்து விட்டது.

பழைய பாரம்பரியங்கள் திரும்ப வேண்டும். திரும்பினால் நன்றாகத்தான் இருக்கும். அதற்கெல்லாம் மக்கள் மனது வைக்க வேண்டும். உடைகளில் பழமை வேண்டும் என்று நினைக்கிறீர்கள், கேட்டால் மாடல். உணவில் பாரம்பரிய உணவு வேண்டும் என்று சொல்லி மண் சட்டியில சாப்பிடுகிறீர்கள் கேட்டால் அதுவும் ஒரு மாடல்.

ஆனால் இப்படிப்பட்ட போக்குவரத்துக்கு பயன் படுத்தப்பட்ட குதிரை வண்டிகள் இன்று காணாமல் போய்விட்டது. இருக்கும் ஏதோ ஒருவர், இருவருக்காவது ஆதரவு கொடுத்தால் அவருக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து நிச்சயம் ஒரு குதிரை வண்டி, நான்கு குதிரை வண்டிகள் ஆக மாறும். காலப்போக்கில் சாலை முழுக்க குதிரை வண்டிகள் ஓடுவது நிச்சயம். அந்த காலமும் வரும். எவ்வளவு காலத்துக்குத்தான் நாம் பெட்ரோலும், டீசலையும் நம்பி இருக்க போகிறோம். இன்னும் சில ஆண்டுகளில் இதே குதிரை வண்டியை பன்னாட்டு நிறுவனங்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த ஆரம்பிக்கும். அப்போது மக்கள் மீண்டும் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். ஏனென்றால், இன்று மக்கள் பன்னாட்டு நிறுவனங்கள் பின்னாடி தானே ஓடுகிறார்கள். 
மக்கள் இப்பொழுது சைக்கிள் பக்கம் திரும்பி இருக்கிறார்கள். அதே வரும் காலகட்டத்தில் நிச்சயமாக குதிரை வண்டி பக்கமும் திரும்புவார்கள் என்று ஒரு தெம்பான வார்த்தையை கிருஷ்ணமூர்த்தியிடம் கூறிவிட்டு அவரின் குதிரைக்கு கொள்ளும்,புல்லும், வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தோம்.

கூடியவரை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இது போன்ற குதிரை வண்டி சவாரிகளை ஆதரிப்பதும் நம் கடமையே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com