பேய் விமானங்கள் என்றால் என்ன?

பேய் விமானங்கள் என்றால் என்ன?

திகில் கதை தலைப்பு போல இருக்கிறது அல்லவா? பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதே தெரியவில்லை. அப்படியிருக்கும் போது பேய்களுக்கு விமானமா? “கோஸ்ட் ப்ளைட்ஸ்” என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் இவை என்ன? பைலட் இல்லாத விமானமா? அல்லது பேய்கள் ஓட்டும் விமானமா அல்லது வெறும் புரளியா?

பயணிகளே இல்லாமல் அல்லது மிகவும் குறைந்த பயணிகளுடன் இயக்கப்படும் விமானங்களை “பேய் விமானங்கள்” என்று கூறுவர். உலகில் உள்ள பிரபல விமான நிறுவனங்கள் எல்லாமே இத்தகைய விமானங்களை இயக்குகின்றன. ஆனால் சமுதாயத்தில் இதனால் ஏற்படுகின்ற எதிர்மறை விமரிசனங்களுக்கும், சுற்றுச் சூழல் பாதுகாவலர் எதிர்ப்பிற்கும் அஞ்சி இத்தகைய விமானங்களை இயக்குவதை பறைசாற்றிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை.

எதிர்ப்பு இருந்தும் பன்னாட்டு விமான நிறுவனங்கள் ஏன் இத்தகைய விமானங்களை இயக்குகின்றன? 2021ஆம் வருடம், டிசம்பர் மாதத்தில் லுவ்தான்சா 21000 பேய் விமானங்களை இயக்கியது என்று சொல்கிறார்கள். 2022வது வருடம் பனிக்காலத்தில் குறைந்தது ஒரு இலட்சம் பேய் விமானங்கள் இயக்கப்பட்டிருக்கலாம் என்று “க்ரீன்பீஸ் இயக்கம்” கூறுகிறது. இதனால் காற்றில் 21 இலட்சம் டன் கரிமல வாயு வெளியேற்றப்பட்டிருக்கும் என்று சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் விமானப் பயணம் என்பது தவிர்க்க முடியாதது. 2020ஆம் வருடம் 620 இலட்சம் விமானப் பயணங்கள் நடந்ததாகக் கூறுகின்றனர். விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கவும், பின்னர் பயணிகளை ஏற்றிக்கொணடு புறப்படுவதற்கும் அதற்கென்று தனியிடம் வேண்டும். எந்த நேரத்தில் விமானம் தரையிறங்கும், எத்தனை நேரம் விமான நிலையத்தில் இருக்கும், எப்போது பயணிகளை ஏற்றிக்கொண்டு வானில் பறக்கும் என்ற விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். உலகில் உள்ள சுமார் 200 விமான நிலையங்களில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள பன்னாட்டு விமான நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நடை பெறுகிறது.   

“இன்டர்னேஷனல் சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷன்” வருடத்திற்கு இருமுறை,  கோடையில் ஒரு மாநாடு, குளிர் காலத்தில் ஒரு மாநாடு என்று பன்னாட்டு நிறுவனங் களுடன், உலகிலுள்ள விமான நிலையங்களில் அந்த நிறுவனங்களுக்கான இடத்தை உறுதி செய்கின்றன. இடம் உறுதி செய்யப்பட்ட அந்த விமான நிறுவனம், அதனுடைய விமான சேவை இலக்கில் குறைந்தது 80 விழுக்காடுகளாவது அந்த குறிப்பிட்ட விமான நிலையத்திலிருந்து இயக்க வேண்டும். அப்படி இயக்கினால், அந்த விமான நிறுவனம் அடுத்த முறையும் அதனுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதனை “கிராண்ட் ஃபாதர் ரைட்ஸ்” என்று குறிப்பிடுவர். ஆனால் 80 விழுக்காடு விமானங்கள் இயக்க முடியவில்லை என்றால், அந்த விமான நிறுவனம் அதனுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது.

இதனால் அந்த நிறுவனத்தின் சேவை பாதிக்கப் படுவதுடன், அதனுடைய நிதி நிலையும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. ஆகவே, பயணிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற தாரக மந்திரம் போல விமான நிறுவனங்கள், 80 விழுக்காடு விமானங்கள் இயக்கியே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதற்கான கட்டணத்தையும் அவர்கள் விமான நிலையத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதில் விமானப் பயணியர் நிலை பரிதாபகரமானது. பயணி, குறிப்பிட்ட தேதியில் பயணிக்க டிக்கட் வாங்குகிறார். சில காரணங்களால் விமான சேவை நிறுத்தப்படுகிறது. ஆனால் தன்னுடைய “இடத்தை” தக்க வைத்துக் கொள்ள விமான நிறுவனம் பயணிகள் இல்லாமல் விமானத்தை இயக்குகிறது. பயணியைப் பொருத்த வரை விமான சேவை ரத்து. விமான நிறுவனத்தைப் பொருத்தவரை விமானம் இயங்கியது. ஆகவே பயணிகளுக்கு டிக்கட் கட்டணத்தை திருப்பிக் கொடுப்பதில் சிக்கல் உண்டாகிறது. பெரும்பாலான நேரங்களில் பயணியர் செலுத்திய பணத்தில் பெரும் பகுதி இழக்க நேரிடுகிறது.

சில பெரிய விமான நிலையங்களில், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கென்று அளிக்கப்பட்ட இடத்தை மற்ற நிறுவனங்களுக்கு விற்று இலாபம் சம்பாதிப்பதும் நடக்கிறது. இலண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் ஒரு இடத்தின் விலை 190 இலட்சம் அமெரிக்கன் டாலர்கள். இந்த இடத்தை அதிகாலையில் விமான சேவை இயக்க “ஓமன் ஏர்” நிறுவனம் 750 இலட்சம் டாலர்கள் கொடுத்து கே.எல்.எம் நிறுவனத்திடமிருந்து வாங்கியது.

சர்வதேச நோய் பரவலினால் விமான சேவைகள் முடக்கப்பட்டன. ஆனால் எதிர்கால வியாபாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் விமான நிறுவனங்கள் “பேய் விமானங்களை” இயக்கின. ஆனால்  இதனால் பாதிக்கப்பட்டது நம்முடைய சுற்றுச் சூழல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com