வாகனக் காப்பீட்டில் 0% தேய்மானம் (0% depreciation) என்றால் என்ன?

வாகனக் காப்பீட்டில் (vehicle insurance) 0% தேய்மானம் என்றால் என்ன என்று விரிவாகப் பார்ப்போம். வாகன காப்பீட்டில் அடிப்படையில் மூன்று வகைகள் உள்ளன.
1. மூன்றாம் நபர் சொத்துக்களின் பாதிப்புகளுக்கான காப்பீடு (Third party insurance) -
2. தனிப்பட்ட தன்னுடைய வாகனத்தின் பாதிப்புகளுக்கான காப்பீடு (Standalone own damage insurance) -
3. இரண்டும் சேர்த்த முழுவதுமான காப்பீடு (Comprehensive insurance)
இவற்றில், முதலாவது அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி கட்டாயம். அதில் 0% தேய்மானம் என்ற பிற்சேர்க்கையினை (add-on) சேர்க்க முடியாது.
இரண்டாவது மற்றும் மூன்றாவதில், 0% தேய்மானம்(0% depreciation) என்ற பிற்சேர்க்கையினைச் (addon) சேர்த்துக் கொள்ளலாம். இந்த பிற்சேர்க்கை,5 வருடங்களுக்குள்ளான வாகனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். சில சமயங்களில் 7 வருடங்கள் வரை கிடைக்கும்.
ஒரு விபத்தில் வாகனம் பாதிக்கப்பட்டால், அதற்கு கேட்புரிமை (claim) கோரும்போது, வாகனத்தின் பழுதடைந்த பாகங்களுக்கு, தேய்மானம் கணக்கிடப்பட்டு, மீதிப்பணம் மட்டுமே காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும்.
இத்தகைய தேய்மானம்,பழுதடைந்த பாகத்திற்கு ஏற்ப மாறுபடும். உதாரணமாக, பின்வரும் வகையில் தேய்மானம் கணக்கிடப்படும்.
பைபர் கண்ணாடி பகுதிகள் - 30% தேய்மானம்
ரப்பர், பிளாஸ்டிக், நைலான் போன்ற பகுதிகள் - 50% தேய்மானம்
ஒரு உதாரணத்திற்கு, சிற்றுந்தின் முன்பக்க மோதல் தாங்கி (bumper) பாதிக்கப்பட்டு, 5,000 ரூபாய் செலவு என்று கொண்டால், 50% தேய்மானம் கழிக்கப்பட்டு, 2500 ரூபாய் மட்டுமே காப்பீட்டு நிறுவனம் கொடுக்கும். 0% தேய்மானம் பிற்சேர்க்கை (add-on) வைத்திருந்தால், மொத்த 5,000 ரூபாய் பணத்தை காப்பீட்டு நிறுவனம் கொடுக்கும். ஆனால், இந்த பிற்சேர்க்கை காரணமாக, நீங்கள் அதிக தொகை காப்பீட்டுத் தவணையாக செலுத்த நேரிடும்.
பொதுவாக, உங்களது காப்பீட்டுத் தவணை 15% அதிகமாகும். இப்போது இதனை எடுக்கலாமா வேண்டாமா என்று பார்ப்போம்.
வாகனத்திற்கு காப்பீடு என்பது அவசியம் தான். ஆனால், வாகனத்தில் விபத்து ஏற்படுவது என்பது மிகவும் அரிதான விஷயம். அந்த அரிதான விபத்து ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட பாகத்திற்கு, தேய்மானம் கணக்கிட்டால், கொஞ்சம்அதிகமாக கைவிட்டு பணத்தைக் கொடுக்க நேரிடும். ஆனால், அதற்காக, இத்தகைய பிற்சேர்க்கையை வாங்க வேண்டிய அவசியமில்லை. மேலும், ஒரு வருடத்திற்கு அதிகப்படியாக இரண்டு முறை மட்டுமே, இதனைப் பயன்படுத்த முடியும்.
நிகழ்தகவின் (Probability) படி, அரிதாக நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக, அதில் அரிதாகச் செலவாகும் பணத்தை மிச்சம் பிடிக்க, அதிக காப்பீட்டுதவணையைவருடா வருடம் கட்ட வேண்டிய அவசியமில்லை.மிகவும் அதிக விலையுள்ள வாகனங்களான பிஎம்டபிள்யூ, மெர்செடஸ் பென்ஸ் அல்லது அதிக உதிரி பாகங்கள் விலை உள்ள வெளிநாட்டு இறக்குமதி வாகனங்களின் உதிரி பாகங்களுக்கு இந்த பிற்சேர்க்கை பலன் தரலாம். ஆனால், பொதுவாக, சாதாரண சிற்றுந்துகளுக்கு, இத்தகைய பிற்சேர்க்கையின் மூலம்,வருடாந்திர தவணை காரணமாக, அதிக பணம் வீணாகும்.
எனவே, இத்தகைய பிற்சேர்க்கையினை (Add on) சேர்ப்பதா வேண்டாமா என்பதை உங்களது சிற்றுந்தின் வகையின் அடிப்படையிலும், உங்களது வாகனத்தின் பழுதுச் செலவினை உங்களால் தாங்கும் அளவிற்கு ஏற்பவும் தேர்ந்தெடுக்கலாம்.