996 என்றால் என்ன?

996 என்றால் என்ன?

செஞ்சீனாவின் தனியார் நிறுவனங்களின் வேலைக் கலாச்சாரத்தை 996 என்று கூறுவார்கள். அதாவது உற்பத்தி மற்றும் மென்பொருள் உருவாக்கம் போன்ற துறைகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணி புரிவோர்களின் பணி நேரம் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை, வாரத்தில் ஆறு நாட்கள் வேலை. அதாவது வாரத்திற்கு எழுபத்தி இரண்டு மணி நேரம் கட்டாயமாகப் பணி செய்ய வேண்டும்.

அரசின் சட்டப்படி ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை அல்லது வாரத்தில் அதிகபட்சம் நாற்பத்து நான்கு மணி நேர வேலை என்பது நியதி. இதற்கு மேல் அதிகமான நேரம் பணி புரிபவர்களுக்கு கூடுதல் நேரத்திற்கான ஊதியம் மற்றும் ஒய்வு நேரம் அளிக்க வேண்டும்.

ஆனால் பல சீன நிறுவனங்கள் 996 பணி நேரத்தை அதிகார பூர்வமாக ஏற்றுக் கொண்டு பணியாளர்களை வாரத்திற்கு எழுபத்தி இரண்டு மணி நேரம் வேலை செய்யும்படி நிர்பந்திக்கிறார்கள். இது அரசின் தொழிலாளர் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட கால அளவை விடவும் இருபத்தியெட்டு மணி நேரம் அதிகம். அதிக வேலை நேரத்திற்கு ஈடான சம்பளமும் இல்லை. அரசும் இதை கண்டு கொள்ளாததால், நிறுவனங்கள் தொடர்ந்து இந்த வேலைக் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றன.

இதனை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய மௌன எதிர்ப்பின் பெயர் “996.ஐசியு”. நிறுவனங்கள் சட்டத்தை மீறுவதாகவும், பணியாளர்களை கூடுதல் நேரம் வேலை வாங்குவது “நவீன அடிமைத்தனம்” என்பதும் உழைக்கும் வர்க்கத்தின் வாதம். 996ஐசியு என்பதன் பொருள் -  996 என்ற நிலையில் வேலை செய்யும் பணியாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவு என்ற ஐசியுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது. இந்த வேலைக் கலாசாரத்திற்கு சட்டத்தின் அனுமதியில்லை என்பதை உயர்நீதி மன்றம் 2021ஆம் வருடம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உறுதி செய்தது.

ஆனால் சைனாவின் வணிகத் தலைவர்களான ஜேக் மா, ரிச்சர்ட் லியு போன்றோர் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதுடன், இதை எதிர்ப்பவர்களை வேலை செய்ய மனமில்லாத “சோம்பேரிகள்” என்கின்றனர்.

ஜேக் மா,  ரிச்சர்ட் லியு
ஜேக் மா, ரிச்சர்ட் லியு

உலகச் சந்தையில் கொடி கட்டிப் பறப்பதற்கு, சைனாவிற்கு 996 வேலைக் கலாசாரம் உதவுகிறது. அதிக நேரம் உழைப்பதால் உற்பத்தி அதிகமாகிறது. பணியாளர்களின் சம்பளம் மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் குறைவு. இதனால் பொருளின் அடக்க விலை குறைகிறது. அதனால் குறைந்த விலையில் சைனா பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிகிறது. அதே சமயம் தொழிலாளர்கள் அதிக நேரம் உழைப்பதால், பொருட்களின் தரம் குறைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

மேற்கத்திய நாடுகளில், சுற்றுலாத் தளங்களுக்கு வருபவர்கள், ஞாபகச் சின்னமாக பொருட்கள் வாங்கிச் செல்வதுண்டு. இவற்றில் தொன்னூறு சதவிகிதம் சைனாவில் உற்பத்தி செய்யப்பட்டவை. குழந்தைகளுக்கான பல வகையான பொம்மைகள், மழலையர் புத்தகங்கள் எல்லாம் சைனாவிலிருந்து வருகிறது. அதனால், பல நாடுகள் தேவைகளுக்கு சைனாவை நம்பியிருக்கும் நிலைமை. அமெரிக்கா மற்றும் கனடாவின் வால் மார்ட், ஒன் டாலர் ஸ்டோர், டாலராமா ஆகியவை முழுவதும் சைனாவிலிருந்து வரும் பொருட்களை நம்பி இருக்கின்றன.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் என்பதில் சைனா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், இதற்காக சைனா இழப்பது அதிகம் என்று தோன்றுகிறது. காலம் தான் பதில் சொல்லும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com