என்ன நடக்கிறது தமிழ்நாடு காங்கிரஸில்?

என்ன நடக்கிறது தமிழ்நாடு காங்கிரஸில்?

தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி எப்போதுமே அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் நோக்கில் "இந்திய ஒற்றுமைப் பயணம்" என்ற பெயரில் நீண்ட நடை பயணத்தை மேற்கொண்டிருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் ஒரு வட்டாரத் தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் ஆரம்பித்த பிரச்னையால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரண்டுபட்டு நிற்கிறது. அண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலை தொடர்ந்து கட்சி பிளவுப்பட்டு கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி ஒரு பக்கமாகவும் மற்ற மூத்த தலைவர்கள் மற்றொரு பக்கமாகவும் நிற்கிறார்கள். கே.எஸ். அழகிரியை நீக்க வேண்டுமென கட்சியின் அகில இந்தியத் தலைமையிடமும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறதாகச் சொல்லப்படுகிறது.

என்னதான் பிரச்னை?

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வட்டாரத் தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தபோது, மொத்தமுள்ள மூன்று வட்டாரங்களில் ஒரு வட்டாரத்தில் மட்டும்தான் அவருடைய ஆதரவாளர் தேர்வானார்.

மீதமுள்ள இரண்டு வட்டாரங்களில் வேறு இருவர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அதிலும் தன்னுடைய ஆதரவாளர்களையே தேர்வுசெய்ய வேண்டுமென விரும்பினார் ரூபி மனோகரன். இதுதவிர, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமாரையும் நீக்க வேண்டுமென விரும்பினார் ரூபி மனோகரன். இந்த விவகாரம்தான், நவம்பர் 15ஆம் தேதியன்று சத்தியமூர்த்தி பவனில் பெரிதாக வெடித்தது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, குறித்து விவாதிக்க கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டின் மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் பிரச்னையை எழுப்பி மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரியின் வாகனம் உள்ளே நுழைந்தபோது, அதனை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதற்குப் பிறகு, ரூபி மனோகரன் உள்ளிட்ட சிலர் மட்டும் பேச்சுவார்த்தைக்காக உள்ளே அழைக்கப்பட்டனர். அப்போது அவரை கே.எஸ். அழகிரி கடுமையான வார்த்தைகளில் கடிந்துகொண்டதோடு, நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். ஆனால், அதற்கு மறுத்துவிட்டார் ரூபி மனோகரன்.

இரவு 8 மணிக்கு கூட்டம் முடிந்தவுடன் அழகிரி ஆதரவாளர்களுக்கும் ரூபி மனோகரனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மூன்று பேருக்கு காயமும் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சானல்களில் பிரேக்கிங் நீயூஸானது.

மறுநாள் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மொத்தமுள்ள 77 மாவட்டத் தலைவர்களில் 62 பேர் பங்கேற்று, ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரூபி மனோகரன், தன் மீது எந்தத் தவறும் இல்லையென்றும் நியாயம் கேட்க வந்த தொண்டர்களை கே.எஸ். அழகிரியின் ஆதரவாளர்கள் உருட்டுக் கட்டையால் அடித்துத் துரத்தியதாகக் குற்றம்சாட்டினார்.

அழகிரி எதிர் பார்க்காத திருப்பம்

ரூபி மனோகரனுக்கும் கே.எஸ். அழகிரிக்கும் இடையிலான மோதல், பிறகு அழகிரிக்கும் கட்சியின் பிற தலைவர்களுக்கும் இடையிலான மோதலாக மாறியதுதான் எதிர்பாராத திருப்பம். ரூபி மனோகரை கண்டிக்கும்போது அழகிரி சில மாவட்ட தலைவர்களையும் தாக்கி பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, இந்திரா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு கே.எஸ். அழகிரி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தியபோது, மூத்த தலைவர்கள் யாரும் அவருடன் வரவில்லை.

இ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, செல்வப்பெருந்தகை ஆகியோர் தனியாக வந்து இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கே.எஸ். அழகிரி மீது அதிருப்தியில் இருக்கும் இ.வி.கே.எஸ்., தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

என்ன பேசினார்கள்? என்பது வெளியிடப்படவில்லை. ஆனால் வழக்கம்போல மாநில கட்சி தலைமையை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையாகத்தான் இருக்கும் என்கிறது ஊடகங்கள்.

கே.எஸ். அழகிரி அவர்களிடம் இது பற்றிக் கேட்டபோது “இந்த விவகாரம் குறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை” என்பது பதிலாக இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com