காதலுன்னா என்னா? அது ரொம்ப டீப்புங்க! எப்படின்னு இவங்களைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க! நெகிழ வைக்கும் நிஜக் காதல்!

காதலுன்னா என்னா? அது ரொம்ப டீப்புங்க! எப்படின்னு இவங்களைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க! நெகிழ வைக்கும் நிஜக் காதல்!

சமீபத்திய ’நீயா நானா’ வில் காணக் கிடைத்த ஒரு காணொலி காட்சி காதல் குறித்தும், அது வெற்றியில் முடிந்தால் வெற்றிகரமான கல்யாண வாழ்க்கையை எப்படித் தொடர்வது என்பது குறித்தும் ஆழமான கருத்தை முன் வைப்பதாக இருந்தது.

இருதரப்பிலும் உரையாடலில் ஈடுபட்டிருந்தவர்களில் நாமக்கலைச் சேர்ந்த ஆண் ஒருவர், நிகழ்ச்சியின் ஹோஸ்ட் ஆன கோபிநாத்திடம்;

‘சார், என் மனைவியைப் பெண் பார்க்கச் செல்லும் போது நான் ஒரு டிரைவர் என்பதைச் சொல்லாமல் மறைத்து விட்டு மில்லில் மேனேஜராக இருக்கிறேன் என்று பொய் சொல்லிப் பெண் கேட்டு உறுதிப் பொன் கொடுத்து திருமணத்தை உறுதி செய்து கொண்டு வந்து விட்டேன். ஆனால், என் மாமனாருக்கு, நான் டிரைவர் என்பது எப்படியோ தெரிந்து விட்டது. அவர், டிரைவருக்கு பெண் தர விருப்பமில்லாமல் இந்தத் திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார். அந்த நேரத்தில் என் மனைவி என்னிடம், நான் உங்களைத்தான் திருமணம் செய்து கொள்வேன். வீட்டில் மறுத்தால் நாம் ஓடிப்போயாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று தைரியமாக என்னுடன் நின்றார். என்னைத் திருமணமும் செய்து கொண்டார். இன்று வரை நான் டிரைவர் தான். நான் இதுவரை என் மனைவியிடம், அப்போது எது உன்னை அப்படி உறுதியாக நான் தான் வேண்டும் எனத் தீர்மானிக்க வைத்தது? எதற்காக வீட்டினர் மறுப்பை கூட புறக்கணித்து என்னைத் திருமணம் செய்து கொண்டாய்? என்று கேட்டதே இல்லை. இப்போது இங்கு வைத்து கேட்கிறேன். அதற்கான காரணத்தை அவர் இங்கு சொல்ல வேண்டும்’ - என்றார்.

’அப்படியா?’ என்ற கோபிநாத்

நீயா நானாவில் மனைவியர் அணியில் அமர்ந்திருந்த அவரது மனைவியிடம்,’

‘என்ன அப்படி பிடிச்சுப் போச்சு அவரிடம்?’

என்று கேட்க அதற்கு அவரது மனைவி அளித்த பதில்

‘அதென்னவோ தெரியலங்க, அவரப் பார்த்த உடனே எனக்கு அப்படியே பிடிச்சுக்கிச்சு’

- அவ்வளவு தான் பதில்.

தொடர்ந்து பேசும் போது கணவன், மனைவி இருவருமே பகிர்ந்து கொண்டது;

சார் இப்பவும் நான் டிரைவர் தான், நான் மட்டுமில்ல, என் மனைவியும் டிரைவர் தான் என்றார் கணவர்.

அப்படியா உங்க மனைவியும் டிரைவரா? அவங்க என்ன வண்டி ஓட்டுவாங்க? - என்று அதிசயித்த கோபிநாத்திடம்’

சார் 7 வருஷமா நானும் வண்டி ஓட்டுவேன். முதல்ல ஆட்டோ ஓட்ட கத்துக் கொடுத்தார் என் கணவர். அப்புறம் கார், லாரின்னு எல்லாமே ஓட்டக் கத்துக் கொடுத்தார். நானும் கத்துக்கிட்டேன் – என்றார்.

கணவர் பேசும் போது, ‘சார் நாங்க ரெண்டு பேரும் டிரைவர் மட்டும் கிடையாது. சுமை தூக்க ஆளில்லாம கஷ்டப்பட்டப்போ இருந்து நானும் என் மனைவியுமே சேர்ந்துபோக வர 8 டன் கணக்குல மொத்தம் 24 டன் சுமையைத் தன்னந்தனியா யாருமில்லாம ஏத்தி இறக்குவோம்.

- என்றார் அசால்ட்டாக.

மனைவி பேசும் போது;

சார் நாங்க கல்யாணமானதுக்கு அப்புறம் நிறைய வண்டி வச்சிருந்தோம். அதுல சில வண்டிங்கள் டிரைவர் கிடைக்காததனால ஒவ்வொன்னா விக்க வேண்டியதா போச்சு. அந்தத் தேவை தான் என்னையும் டிரைவர் ஆக்குச்சு. கடைசியா ரெண்டு வண்டில வந்து நிக்கும் போது ஒரு வண்டிய நீங்க ஓட்டுங்க, இன்னொன்னை நான் ஓட்டுறேன்னு பொறுப்பெடுத்துக்கிட்டேன்.

-என்றார்.

காதலர் தினத்தை ஒட்டி இவர்கள் பேசுவதற்காகக் கலந்து கொண்டிருந்த தலைப்பு என்ன தெரியுமா?

’என் மனைவியால் நான் உயர்ந்தேன்’ – என்பதே!

இவர்களது பந்தம் முதலில் பெற்றோரால் தீர்மானிக்கப்பட்ட போதும் இடையில் அதற்குத் தடை வந்த போது இவர்களுக்கிடையில் திடீரென முகிழ்த்த காதல் தான் இன்று வரை கணவன், மனைவியாக பந்தத்தில் நீடித்திருக்கச் செய்கிறது.

அந்தக் காதலும் கூட இருவருக்குமிடையிலான தோற்றப் பொலிவின் அடிப்படையிலோ அல்லது பொருளாதார வசதிகளை அடிப்படையாகக் கொண்டோ தோன்றியதாகக் கருத இடமில்லை.

இருவரும் மனமொத்து வாழும் வாழ்க்கையைப் பார்த்தால் இவர்களது காதலின், திருமணத்தின் வெற்றிக்கு மிக ஆழமான புரிதலும், விட்டுக் கொடுத்தலுமே காரணமாக இருப்பதாகத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com