‘‘தப்பாயிடும் தப்பாயிடும்ன்னா யார்தான் தப்பைத் துணிச்சலா சொல்றது?’’

‘‘தப்பாயிடும் தப்பாயிடும்ன்னா யார்தான் தப்பைத் துணிச்சலா சொல்றது?’’

துணிச்சலாகப் பேசும் ஓர் இளம் பெண் எழுத்தாளர்.

திர்பாராத ஒரு விபத்தில் இறந்து போகிறாள் பெல்லா. தன் உயிர்க்காதலியின் திடீர் மரணத்தில் வாடும் அலெக்ஸ் அவள் கல்லறையிலேயே சதா சர்வகாலமும் காவலிருக்கிறான். எப்படி? அந்த சுடுகாட்டில் வெட்டியானாகவே பணியமர்கிறான். தினம் தினம் தன் காதலியின் கல்லறையை பூக்களால் அலங்கரிக்கிறான். தினந்தோறும் தான் புதைக்கும், எரிக்கும் உடலின் கதையை ஓய்வு நேரங்களில் கல்லறைக்குள் உறங்கும் காதலிக்குச் சொல்கிறான்.

இந்த நேரத்தில்தான் கொரோனா பெருந்தொற்று உலகையே உலுக்குகிறது. எத்தனை, எத்தனை ஆயிரம் உயிர்கள். நிமிஷ நேரத்தில் பறந்த கணங்கள். இதோ அலெக்ஸ் பணிபுரியும் கல்லறைகளிலும் ஏராளமாய் உடல்கள். தினம், தினம் அவனுக்கு ஓய்வில்லை. எத்தனை பேர் தாய், தந்தையற்று, பிள்ளைகளற்று, அண்ணன், தம்பி, தங்கைகளற்று தன்னந்தனியாய் உடல் அடக்கம். அதையெல்லாம் இயந்திரம் போல் பார்க்கிறான். அவர்களுக்கெல்லாம் இறுதிச் சடங்கு செய்பவன் அலெக்ஸாகவே இருக்கிறான்.

அது மட்டுமா? கொரோனா காலத்தில் தான் அடக்கம் செய்தவர்களின் கதையை தன் கல்லறைக் காதலியிடம் சொல்லி சொல்லி உருகுகிறான். அந்த மரணங்களில்தான் எத்தனை வலிகள்?

காக்கி சட்டை மாட்டிக் கொண்டு ஒருவன் செய்த அட்டூழியத்தால் ஒரு குடும்பமே சிதைந்த வாழ்க்கை, சூப்பர் வுமன் என்று சொல்லப்பட்ட ஒரு செவிலியரின் மரணம். வாழ்நாள் முழுவதும் எதையெதையோ இழந்த பின்னரும் உறுதியுடன் நின்ற பெண்ணின் வாழ்க்கை. கணவனைப் பறி கொடுத்த ஒரு கர்ப்பணிப் பெண்ணின் வாழ்க்கை. அதிலும் சொந்த சகோதரனால் பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண் சொந்தத் தாயாலேயே புறக்கணிக்கப்படும் கோலம். கேவலப்படுத்தப்படும் தன்மை.

அதை வாசிக்கும்போது நம் உடல், பொருள், ஆவி எல்லாமே நடுங்கி விடுகிறது. இந்த சூழ்நிலையிலும் அந்தப் பெண் எப்படி எழுச்சி கொள்கிறாள் என்பதே கதை. அதை வாசிக்கும்போது பொள்ளாச்சியில் பாலியல் வக்கிரத்தால் சீரழிந்ததாக சொல்லப்படும் நூற்றுக்கணக்கான இளம் பெண்களின் வாழ்வு கண்முன்னே வந்து விடுகிறது.

இந்த கதைகளை உள்ளடக்கிய நாவலுக்கு, ‘உலகம் காணாத ஊரடங்கு 2019’ என்று தலைப்பிட்டு வெளியிட்டிருப்பவர் இருபது வயது இளம்பெண் என்பதுதான் ஆச்சர்யம்.

‘‘இந்த நூலை எழுதும்போது எனக்கு வயசு பத்தொன்பதுதான் சார். Never thought ever expected 2019 to?’ என்று இதை ஆங்கிலத்தில் எழுதி விட்டேன். இப்போது உலகம் காணாத ஊரடங்கு 2019..? என்ற தலைப்பில் வந்திருப்பது அதன் தமிழ் மொழி பெயர்ப்பு” என்று சொல்லி அதிர வைக்கிறார் வினிஜோனா.

மரணத்தைப் பற்றி விட்டல் ராவ், எம்.வி. வெங்கட்ராம், இந்திரா பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்கள் 80 வயது முதுமையில் சிந்தித்து எழுதியிருக்கிறார்கள்.

‘‘அதை எழுத 80 வயது அனுபவம் தேவையில்லை. 20 வயது இளமையிலும் கூட சிந்தித்து எழுதலாம். அதை பெண்கள் எழுதினால் என்ன தப்பு? பாலியல் வக்கிரங்கள், உறவு முறை தவறிய இச்சைகளை இளம் பெண்கள் எழுத யோசிக்க வேண்டியதில்லை. அதைப் பற்றி வெளியே சொல்லாமல், எழுதாமல் இருப்பதே குற்றம் செய்பவர்களுக்கு வசதியாகப் போய் விடுகிறது!’’ வினிஜோனா இப்படி முதிர்ச்சியுடன் மிக முதிர்ச்சியுடன் பேசுகிறார்.

கோவையைச் சேர்ந்த வினிஜோனாவுக்கு 6ம் வகுப்புப் படிக்கும்போதிருந்தே ஆங்கிலத்தில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். பி.ஏ. ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு ஆசிரியப் பயிற்சி பள்ளி ஒன்றில் பி.எட்., படித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை 15 தொகுப்பு நூல்களின் ஆசிரியராக இருந்துள்ளார். பெஸ்ட் கோ ஆத்தர் ஆப் த இயர்2021, ஆல் இன்னியா பெஸ்ட் ரைட்டர் அவார்ட் 2022, யூத் அச்சீவ்மெண்ட் அவார்டு, ஃபென்டஸ்டிக் வுமன் அவார்ட் 2022 என பத்துக்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். அதிர்ச்சியூட்டும் இத்தகைய கதை எழுதிய அனுபவங்களைப் பற்றி அவரை சந்தித்துப் பேசினோம்.

‘‘என் அம்மா கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி, மரணத்தின் விளிம்புக்கு சென்று விட்டுத் திரும்பினார். அதைத் தொடர்ந்து எங்கள் குடும்பத்தில் எல்லோருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்கள். அதன் மூலம் எல்லா மக்களும் இதில் எப்படியெல்லாம் துன்பப்பட்டார்கள் என்பதை என்னால் உணர முடிந்தது. அதனாலேயே இந்த விஷயங்களை என்னால் சுயமாக எழுத முடிந்தது!’’ என்று பேச ஆரம்பித்தவர், தான் எழுத வந்த அனுபவத்தை விவரித்தார்.

‘‘ஆறாம் வகுப்பு படிக்கும்போதே நான் டைரி மாதிரி ஒரு நோட் போட்டு எழுதி வச்சிட்டிருப்பேன். அது கவிதையா, கதையான்னு எல்லாம் எனக்கே தெரியாது. மனதில் தோன்றுவதை எல்லாம் எழுதுவேன். ஃப்ரண்ட்ஸ் பற்றி, எக்ஸாம் பற்றி. ஒரு தடவை ஸ்கூல்ல ட்ராமாவுக்கு ஸ்டோரி கேட்டாங்க. அதை ஸ்டூடண்ட்ஸ் சைடுல இருந்தும், டீச்சர் சைடுல இருந்தும் எழுதிக் கொடுத்தேன். அதை அவங்க நாடகமாப் போட்டாங்க. இது ஏழாம் வகுப்புல நடந்தது. இந்த மாதிரி எழுதும் ஆர்வம் எப்படி வந்துச்சுன்னு இப்பத்தான் நினைச்சுப் பார்க்கிறேன். என் பாட்டி, அம்மாவோட அம்மா எல்லாம் கதை சொல்லுவாங்க. அதை நான் கேட்டிருக்கேன். ஒரே மாதிரி கதையைத் திரும்பத் திரும்ப சொல்லுவாங்க என் அப்பா, அம்மா ஸ்கூல் பிரின்சிபல். அவங்க அன்னன்னைக்கு நடக்கற அனுபவங்களை எங்கிட்டவும், அண்ணன்கிட்டவும் ஒரு ஃப்ரண்ட்ஸ் போல பகிர்ந்துக்குவாங்க. அதையெல்லாம் கூட அப்பப்ப தோன்றுவதை எழுதி வைப்பேன்.

அதிலும் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கையில் சின்ன வயசில அப்பா அம்மா சொன்ன கதை அதோட தலைப்பு கூட எனக்குத் தெரியாது. மடையன், மட்டி, மூடன், முட்டாள்ன்னு ஒரு கதை. அந்தக் கேரக்டர் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதுலதான் என் எழுத்து ஆர்வம் வளர்ந்தது. அதோட டிராயிங் கிளாஸ் போனேன். நடன வகுப்புக்கும் போனேன். எழுதறது இவ்வளவு பெரிய Professionalனு எனக்குத் தெரியாது. எழுதிட்டே இருப்பேன். ஒரு கட்டத்தில் நான் எழுதி வச்சிருக்கிற டைரிகளை எல்லாம் பார்த்துட்டு நான் படிச்சுப் பார்க்கிறேன்... கொடுன்னு என் அம்மா கேட்டாங்க. நான் கொடுக்க மாட்டேன்னுட்டேன். தப்பா எதுவும் சொல்ல மாட்டேன் கொடுன்னு ரொம்பவும் வற்புறுத்தி வாங்கினாங்க. அப்புறம் படிச்சுட்டு ரொம்ப நல்லா எழுதற பாப்பா. உனக்குள்ளே எழுத்துக் குடி கொண்டிருக்குன்னு ஊக்கப்படுத்த ஆரம்பிச்சாங்க.

அப்புறம்தான் எதை எழுதினாலும் என் அம்மா, அப்பாகிட்ட காட்ட ஆரம்பிச்சேன். அவங்க அதுல கருத்து சொல்லுவாங்களே ஒழிய, இப்படி எழுதாதே. அப்படி சொல்லாதே என்றெல்லாம் சொல்லவே மாட்டாங்க. பேச்சில் எப்படியோ, அதேபோல எழுத்திலும் சுதந்திரமா இருக்கணும்ன்னு மட்டும் சொல்லுவாங்க. நீ எழுதறது பேசறது சமுதாயத்துக்குப் பயன்படணும்ன்னு மட்டும் சொல்லுவாங்க. அதுதான் நான் வேத வாக்கா எடுத்துட்டேன். காலேஜ் வந்தபின்னாடிதான் அங்கே காலேஜ் மேகஸினுக்கு கேட்டாங்க. அது பப்ளிஷ் ஆன பின்னாடிதான் இப்படியெல்லாம் அச்சுக்கும் கொடுக்கணும்ன்னு உந்துதல் வந்தது.

தொடர்ந்து “வில்லயா விட்” என்று ஒரு பப்ளிகேஷன் என் கதைகளை பதிப்பித்தது. அந்தப் பதிப்பகம் காலேஜ் மூலமா அறிமுகமாச்சு. அதுக்கப்புறம்தான் இப்படிக்கூட பப்ளிஷ் பண்ணலாம்ன்னு தோணுச்சு. கோவிட் சமயம் இதுபோல நிறைய பப்ளிஷர்ஸ் கிடைச்சு பல கதைகள் எழுதினேன். வீட்ல ஏன் சிறுகதைகளா எழுதறே. ஒரு நாவல் எழுதேன்னு சொன்னாங்க. அப்படியெல்லாம் நம்ம எழுத வருமான்னு யோசித்துட்டு இருந்தப்பத்தான் கொரோனா வந்துச்சு. அதுவும் அம்மாவை முதன் முதலா தாக்குச்சு. அதுல எங்க குடும்பமே உருக்குலைஞ்சு போனோம்.!’’ என்றவர் கொரோனா கால சம்பவங்களுக்குள் நுழைந்தார்.

கொரோனாவில் இவர் தாய் ஆஸ்பத்திரிக்குப் போய் உண்டு இல்லை என்று ஆகிவிட்டார். 20 நாள் கழிச்சு, அவர் உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயம். வீட்டில் அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டார்கள். அதற்குப் பிறகு சாதாரண நிலைக்கு வருவதற்கு நிறைய நாட்கள் பிடித்திருக்கிறது. அப்புறம்தான் இப்படியான விஷயத்தை நாவலாகக் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாராம் வினிஜோனா.

‘‘நமக்கு ஒருத்தருக்கு நடந்ததுக்கே இப்படி இருக்கே. தினசரி இத்தனை ஆயிரம் பேர் ஆஸ்பத்திரி போய் வர்றாங்களே. அது எல்லாம் வெறும் நம்பர்ஸ் கிடையாது. ஒவ்வொன்றிலும் பெரிய வாழ்க்கைப் போராட்டமே இருக்கிறதுன்னு நினைச்சேன். அதுல இருந்துதான் அபூர்வத்திலும் அபூர்வமா அந்த வெட்டியான் கேரக்டரை உருவாக்கினேன்!’’ என்றவரிடம், ‘‘உங்க கதைகளில் உலுக்கும் கதை அந்த சகோதரன், சகோதரியையே பாலியல் இச்சைக்கு உட்படுத்தும் கதை. அதில் பெண்ணையே கடிந்து வெளியேற்றுகிறாள் தாய். இதை வளர்ந்த பெண் எழுத்தாளர்கள் கூட சொல்ல அச்சப்படுவாங்க. தன்னை கட்டுப்பெட்டியா வச்சுக்குவாங்க. இப்படியான சமூகத்தில் ஒரு இளம்பெண்ணான நீங்கள் எழுதும் அளவு எப்படித் துணிச்சல் வந்தது?’’ என்று கேட்டோம்.

‘‘இதுல துணிச்சலுக்கு என்ன இருக்கு? உலகத்தில் நடப்பதுதானே இது. பல செய்திகளில் பார்க்கிறோம். பல செய்திகளைக் கேட்கிறோம். இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதும்தானே படைப்பின் நோக்கம். இந்த டாபிக் அப்யூஸ் சம்பந்தமா ஒரு ஹோப் கொடுக்கணும்ன்னு தீர்மானிச்சேன். அதுவும் எந்த மாதிரியான ஹோப்பாக இருக்கணும்ன்னு யோசிச்சேன். மற்றபடி இந்த மாதிரி விஷயங்களை சொல்லாம இருக்கறதே தப்பான ஒரு விஷயம். இதெல்லாம் தப்பு. இதை வெளியில் சொன்னாலே தப்பு. வெளியிலயே சொல்லக்கூடாது அப்படிங்கிறக்காக வச்சிட்டிருக்கறது எல்லாம் சரியானது அல்ல. அது இது மாதிரி குற்றம் செய்கிறவர்களை மேலும் குற்றம் செய்யவே தூண்டும்.

இதை வெளியே சொல்ல மாட்டாங்கன்னு வரும்போதுதான் அந்த மாரியான ஆண்களுக்கு தைரியமும் வருது. அதே டைமிங்லதான் விக்டிம் பிளேமிங்கும் நடக்குது. இப்ப நிறைய பேர் இப்படியான விஷயங்களை சொல்லாம இருக்கறதுக்கு வீடுதான் காரணமா இருக்கு. அப்பா அம்மாகிட்டவே சொல்ல மாட்டாங்க. வெட்கப்பட்டுட்டு இருந்துக்குவாங்க. தப்பாயிடும் தப்பாயிடும்ன்னா யாருதான் தப்பை சொல்லுவாங்க. இப்ப எல்லாம் நான் மட்டுமல்ல, நிறையபேர் இப்ப எல்லாம் இதைப் பத்தி முன் வந்து பேசறாங்க... எழுதறாங்க... அவங்களையெல்லாம் முன்னோடியா வச்சுத்தான் நானும் இதை எழுதியிருக்கேன். அதற்கான தைரியமும் ஊக்கமும் எங்க அம்மா அப்பா இயல்பிலேயே எனக்குக் கொடுத்து வளர்த்துட்டாங்கன்னு நினைக்கிறேன்!’’

வினிஜோனா எழுத்தில் மட்டுமல்ல, வாசிப்பிலும் சூரப்புலி. ஒன்றாம் வகுப்பிலிருந்தே புத்தகங்கள் வாசித்ததாகச் சொல்லுகிறார். அவர் போர் இலக்கியங்கள் குறித்து நிறையப் பேசுகிறார். பலரும் அச்சுப் புத்தகம் படித்தால்தான் படித்த மாதிரி இருக்கு. “மென்நூல்கள் படித்தால் மனசில் ஏறுவதேயில்லை என்கிறோம். ஆனால் வினி தானும், தனது தோழிகளும் மென்நூல் படிப்பதே சுகமாக, சுலபமாக இருக்கிறது” என்று புது நம்பிக்கையை நமக்கு ஊட்டுகிறார்.

“எதிர்கால எழுத்துக்கு ஒரு பொக்கிஷம் வினிஜோனா” என்பதை அவர் எழுதிய கதைகளே நிரூபிக்கின்றன.

இன்னும் நிறைய எழுதுக என வாழ்த்தி விடைபெற்றோம்.

Other Articles

No stories found.