ஈரோடு இடைத்தேர்தல் நடக்குமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

ஈரோடு இடைத்தேர்தல் நடக்குமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

ணிதத்தில்தான் புதிய பார்முலாக்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இடைத்தேர்தல்களில் புதுப்புது பார்முலாக்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. லட்டுக்குள் மூக்குத்தி வைத்துக் கொடுத்த திருமங்கலம் பார்முலா எனத் தொடங்கி அரவக்குறிச்சி பார்முலா எனப் பயணித்து தற்போது வீடுகளுக்கு சென்று பத்துப் பாத்திரம் தேய்த்துக் கொடுக்கும் ஈரோடு பார்முலா வரை வெற்றிகரமாக உருவாகி வருகின்றன. ஆனால் ஜனநாயகத்தின் நிலையோ பரிதாபமாக உள்ளது.

ஈரோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவெரா திருமகனின் மறைவைத் தொடர்ந்து வரும் 27ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நடைபெறுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.  

தமிழ்நாட்டிற்கு இடைத்தேர்தல்கள் புதிதல்ல. ஆனால் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தான் வென்று விட வேண்டும் என்கிற முனைப்பு ஆளுங்கட்சிக்கு இருந்துகொண்டே இருக்கும். ஏனெனில் அது ஆட்சியை எடை போடுகின்ற தேர்தல். தன்மானத்தை நிரூபித்தாக வேண்டிய தேர்தல். நாம் மக்களுக்காக செய்திருக்கிறோம் மக்கள் நமக்கு மகுடம் சூட்டுவார்கள் என்ற தத்துவம் எல்லாம் கற்பனைக் கதையாகிப் போய்விட்டது. யாரா இருந்தா என்ன, என் ஓட்டுக்கு எவ்வளவு என்பது மக்களின் மனநிலையாகவும், நீ எந்தக் கட்சியா இருந்தா என்ன, புடி காச எனக்கு ஓட்டுப் போட்ரு என்பது கட்சிக்காரர்களின் மனநிலையாகவும் மாறி விட்டது.

எப்போதும் இல்லாத அளவிற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி அடிக்கின்றன. சென்ற ஞாயிற்றுக்கிழமை இரண்டு கிலோ ஆட்டுக்கறி, மளிகை சாமான், கையில் 500 ரூபாய் என வார இறுதி நாளை அற்புதமாக கொண்டாடும் தொகுதியாக ஈரோடு கிழக்கு மாறிவிட்டது. கொங்கு மண்டலத்தின் ஸ்பெஷல் டிஷ் ஆன பள்ளிப்பாளையம் சிக்கனும், சிந்தாமணி சிக்கனும் உணவகங்களில் தயாராகிக் கொண்டே இருக்கிறது. ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து வைப்பதைப் போல ஏழை வாக்காளர்கள் அடைத்து வைக்கப்பட்டு அவர்களுக்கு காலை, மாலை தலா 500 ரூபாய், மதியம் பிரியாணி என ராஜ  உபசாரம் நடக்கிறது.

கொலுசு, குக்கர், பேண்ட், சட்டைகள், சேலை, பணம் என பல்வேறு இடங்களில் விதவிதமான பரிசுப் பொருட்கள் தாரளமாக வழங்கப்பட்டு வருகின்றன. கிடைக்கும் போது வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் என்ற மனநிலைக்கு மக்கள் சென்று விட்டனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள மரப்பாலம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், கல்கி ஆன்லைனுக்காக பேசிய போது, “ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய், வீட்டுக்கு ஒரு மிக்ஸி, பட்டுச்சேலை வழங்குகிறார்கள்” எனக் குற்றம் சாட்டினார். “சில நாட்களுக்கு முன்பு ‘ஆளுங்கட்சியினர் இன்னும் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று பத்துப்பாத்திரம் தான் தேய்க்கவில்லை’ என்று சொன்னேன். நேற்று அதையும் செய்து விட்டார்கள். இனி வரும் காலங்களில் வீட்டுக்குச் சென்று கைகால் அமுக்கி விடுவார்கள் போல. ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கி விட்டனர். 80 சதவிகிதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்பவர்களால் தேர்தலை நியாயமாக சந்திக்க வக்கில்லை” எனக் காட்டமாக விமர்சித்த ஜெயக்குமார், “தற்போதைய அரசு அட்டக்கத்தி அரசாக இருக்கிறது” எனவும் குறிப்பிட்டார்.

455 புகார்கள் வந்ததில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா தொடர்பாக இதுவரை இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனுமதி பெறாமல் இயங்கி வந்த 8 பணிமனைகள் அகற்றப்பட்டிருக்கின்றன. 14 பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்திடமும், தேர்தல் ஆணையத்தின் மீதும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் இடைத்தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

இது தொடர்பாக கல்கி ஆன்லைனுக்குப் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “இடைத்தேர்தல்கள் முதலமைச்சர்களின் பிரஸ்டீஜ் ப்ராப்ளம் என்ற அளவுக்கு ஆகிவிட்டது. அதனால்தான், 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முழுமையாகத் தோல்வியடைந்த அதிமுக தலைமையிலான அரசு, காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் வெற்றியடைய முடிந்தது. காரணம், அதிகார பலம் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றனர். மக்களவைத் தேர்தலில் 35 சதவிகிதம் மட்டுமே வாக்குகளைப் பெற்ற அதிமுக, இந்த இடைத்தேர்தலில் கூட்டணி இல்லாமலே 50 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஆர்.கே.நகரில் 50 சதவிகிதம் வாக்குகளைப் பெற்ற டிடிவி தினகரனால் ஒட்டு மொத்தமாக ஐந்தரை சதவிகிதம் மட்டுமே பெற முடிந்தது. கடந்த கால முன்னுதாரணங்கள் இடைத்தேர்தலுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதையே காட்டியிருக்கிறது. ஈரோடு கிழக்கில் அதிகார பலம், பணபலத்தோடு நடக்கின்ற தேர்தல் இது. இதன் பிரதிபலிப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது. இதுதான் உண்மை நிலவரம்” என்று தெரிவித்தார்.

ஒருவேளை தேர்தல் கமிஷன் இந்த இடைத்தேர்தலை நிறுத்தினால் மீண்டும் மக்களின் வரிப்பணம் தான் வீணாகும். மேலும், இந்த தேர்தலிலேயே எவ்வித முறைகேடுகளும்(!?) நடைபெற விடாமல் நேர்மையான முறையில் தேர்தல் நடக்குமா என்பதற்கு தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com