ரெக்கை கட்டிப் பறக்க வேண்டும் சைக்கிளில்!

உலக சைக்கிள் தினம் – ஜூன் 3
ரெக்கை கட்டிப் பறக்க வேண்டும் சைக்கிளில்!

மிதிவண்டியுடனான மலரும் நினைவுகள்;

ருபது, முப்பது  வருடங்களுக்கு முன்பு அனேகமாக எல்லோர் வீட்டிலும் இருந்த ஒரு வாகனம் சைக்கிள். வீட்டில் அண்ணா, அப்பா, தாத்தா என மூன்று தலைமுறை யினரும் உபயோகித்தது சைக்கிளைத் தான். அப்போதெல்லாம் பால்காரர், பூக்காரர், பேப்பர் போடுபவர், என சகலரும் பயணித்தது மிதிவண்டிகளில் தான். சைக்கிள் கடைகளில் அரைமணி, ஒரு மணி நேரம் போன்ற கால அளவீடுகளில் வாடகை சைக்கிள்கள் கிடைக்கும்.  சிறுவர்கள் வாடகைக்கு மிதிவண்டிகளை எடுத்து, குரங்குப் பெடல் போட்டு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்வர். கீழே விழுந்து கை, கால்களில் அடிபட்ட விழுப்புண்களுடன் தோற்றம் தருவர். பள்ளி, கல்லூரி மற்றும் ட்யூஷன் செல்லும் மாணவ, மாணவியர் அதிகம் உபயோகப்படுத்தியது மிதிவண்டிகளைத் தான். மோட்டார் பைக்குகள் வருகை தந்து சைக்கிளை ஓரம் கட்டி சென்றது. இன்று பேப்பர் போடுபவர் கூட பைக்கில் தான் வருகிறார். பால்காரர் டி.வி.எஸ். எக்ஸ்செல்லிற்கு மாறி வருடங்கள் ஆகிவிட்டன.

மிதிவண்டிகளின் வரலாறு;

த்தொன்பதாம் ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த உலகிற்கு சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது ஜெர்மனி. முதல் இருசக்கர வாகனத்தை ஜெர்மனியைச் சேர்ந்த “கார்ல் வான் ட்ராய்ஸ்” வடிவமைத்தார். முழுவதும் மரத்தினால் வடிவமைத்தார். அதற்கு டான்டி குதிரை என்று பெயர் வைத்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் வடிவமைப்பை மாற்றிய சைக்கிளில் இறுதியாக “பெடல்” பொருத்தப்பட்டது. அப்போதிருந்து, மிதிவண்டிகள் பெரும்பாலும் வணிக நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டன. சைக்கிள்கள் 1890- ல் இந்தியாவிற்கு  இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது நெதர்லாந்து நாட்டு மக்கள் அதிகளவு சைக்கிள்களைப் பயன்படுத்துகின்றனர். மத்திய ஐரோப்பிய நாடுகள் டென்மார்க், கோபென்ஹெகன்  போன்ற நாட்டினரும் சைக்கிள் விரும்பிகளாக இருக்கின்றனர். உலகளவில் அதிகமாக சைக்கிள்கள் உற்பத்தி செய்வது சீனா.

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள்;

தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும். கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும். மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும். அதிக வியர்வை வெளிப்படுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும். சைக்கிள் ஓட்டுதல் கூடுதல் கலோரிகளை எரிக்கவும் ஆரோக்கியமான எடை நிர்வாகத்தை ஊக்குவிக்கவும் உதவும். உடல் எடையும் விரைவில் குறையும். சைக்கிள் ஓட்டும்போது, இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும். புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது. சைக்கிள் ஓட்டுதல் உடலிலும் மனதிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சைக்கிள் ஓட்டுதல் சுவாசத்தை விரைவுபடுத்துகிறது, இதன் விளைவாக அதிக ஆக்ஸிஜன்  நுரையீரலை அடைகிறது.

இத்தனை பயன்கள் உள்ள ஒரு அருமையான உடற்பயிற்சியான சைக்கிள் ஓட்டுதலை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் எண்ணற்ற பயன்கள் கிடைக்கும். நம் ஆரோக்கியம் மேம்படுவதுடன், எரிபொருள் செலவையும் தடுத்து, பொருளாதார நிலையும் உயரும். அத்துடன்புவி வெப்பமயமாதல் குறையும்.

தற்போது உடற்பயிற்சி செய்யும் சிலர் காலை, மாலை வேலைகளில் ஜாகிங்கிற்கு மாற்றாக சைக்கிள் ஒட்டுகின்றனர். சில நகரங்களில்  சைக்கிள் ஓட்டுனர்களுக்காக தனிப்பாதை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தியாவில் எல்லா நகரங்களிலும் இது போன்ற தனிப் பாதை இருந்தால் நிறைய இளம் வயதினர் சைக்கிள் ஓட்ட முன்வருவர். நாமும் நம் பிள்ளைகளுக்கு மிதிவண்டிகள் வாங்கிக் கொடுத்து ‘’ரெக்கை கட்டி சைக்கிளில் பறக்கச் செய்ய வேண்டும்’.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com