அன்பாழி!

கவிதை!
அன்பாழி!

-பாடலாசிரியர் விவேகா

பேரன்பின்

ஆதி ஊற்றாய்

பிரபஞ்சத்தின்       

மூல வித்தாய

அறைகளை

வீடாக்குபவளாய்

காலத்தை

நாட்களாக்குபவளாய்

எங்கும் பெண்ணே!

தேனீக்கள் இல்லாத

உலகம்

ஐந்தாண்டுகளில் பாலையாகும்

தேவதைகள் அற்றுப்போகும்

நொடியில்

பூமியே ஒரு பெரிய முற்றுப்     புள்ளியாகும்

குவலயம் எனும்

ராட்சஷ விஷக்கோப்பையின்

நஞ்சு முறி அவளே

அவளது அன்பாழியின்

மீச்சிறு துளிக்கு

மகா சமுத்திரங்கள் ஈடாகா

ஒரு தேக்கரண்டி

தாயன்பு போதும்

விதிக்கப்பட்ட ஆயுளின்

மொத்த பயணத்திற்குமான எரிபொருளாய்

கண்கள் தம்மைக்

காண்பதில்லை போல் பெண்களும்

பிறருக்கென்றே

சுரக்கும் பிரியம் அவள்

உதடுகளின்

சதைத் தீண்டல்

எதனால் முத்தமாகிறது?

சத்தங்களின் சீரான

கோர்வை

எக்கணம் இசையாகிறது?

அறிந்தோர்

அறிவர்

வசிக்கும் நாட்கள்

பெண்களால்

எங்ஙனம் வாழ்க்கை ஆகிறது என்பதை...

கோடி நதிகளின்

ஈரத்தால் கருக்கொண்ட

குட்டி மேகம் அது,

அதன்

பெரு மழையில்

வையகம் வசந்தமாகிறது...

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் அக்டோபர்  2019 இதழில் வெளியானது இக்கவிதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com