ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

யிரமாண்டுக்கு முந்தைய ஒரு கொடூரக் கொலை வழக்கு இப்பிரம்மாண்ட நாவலில் துப்பறியப்படுகிறது.

“ஆதித்த கரிகாலன்” என்ற சோழத்து இளவரசனின் துர்மரணத்தின் மர்மத்தில் ஒளிந்திருப்பது “சாவுக்கான பழிவாங்கலா, அரியணைக்கான பேராசையா, காதல் துயரின் வன்மமா அல்லது அதிகாரத்துக்கான வேட்கையா” என்ற வினாவைத் தமிழ் வாசகப் பரப்பு தொடர்ந்து விவாதித்துக்கொண்டே இருக்கிறது.

காலாதீதமாக‌ மௌனித்து நிற்கும் கல்வெட்டுகளின் இடைவெளிகளில் கற்பனையைப் பாய்ச்சி கண் கூசும் அந்த‌ உண்மையை நெருங்கிக் காண எத்தனிக்கிறது இந்த வரலாற்றுப் புதினம்! 

கல்கியின் “பொன்னியின் செல்வன்” மூலம் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானது. பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த‌ சோழத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் படுகொலை. ஆனால், அதன் ‘சூத்ரதாரி யார்’ என்பது இன்றளவும் துலங்காத‌ மர்மமாக நீடிக்க, கொஞ்சம் உண்மைகளையும் நிறைய ஊகங்களையும் குழைத்துச் சரித்திர இடைவெளிகளை நிரப்பி அந்த‌ துர்மரணத்தைத் துப்பறியும் வரலாற்று நவீனம்தான் 'ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு'. அனேகமாக‌த் தமிழின் முதல் Historical Whodunnit.

அடுத்து சோழ சாம்ராஜ்யம் ஆள‌ அரியணை ஏற வேண்டிய பட்டத்து இளவரசனாகிய அவன் ஏன் கொல்லப்பட்டான்? ஆசையா, பகையா, பாசமா, அல்லது வேறு காரணமா? வாளா, விஷ‌மா, புலியா, பெண்ணா, அல்லது இன்னோர் ஆயுதமா? கல்கி பூடகமாகக் காட்டியது போல் பாண்டிய ஆபத்துதவி சகோதரர்களா அல்லது வேறு எவருமா? புதிர்ச் சர்ப்பங்களும், விடை ஏணிகளும் நிரம்பிய இச்சரித்திரப் பரமபத ஆட்டத்தில் இடப்பட்ட முடிச்சுகள் அவிழுமா அல்லது மேலும் புது முடிச்சுகள் விழுமா? சின்ன விண்மீன்களாக‌ மின்னிக்கொண்டிருக்கும் ஆயிரம் பொய்களை மழுங்கடித்து விட்டு உண்மையானது ஒற்றைச் சூரியனைப் போல் முளைத்தெழுமா? வினாக்கள் வரிசை கட்டி நிற்க, சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் கொலை வழக்கின் தீரா மர்மம் இதில் வெளிப்படுகிறது. 

வரலாற்றுப் புதினங்களில் வழமையாக உலவுகின்ற‌ வாள்கள், புரவிகள், பல்லக்குகள், அழகிகள் மட்டுமின்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய‌ தமிழ் நிலத்தின் அரசியல், சமூகம், கலை, பண்பாடு குறித்த நுண்மையான குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்த‌ நாவல் அளிக்கிறது. நாம் அண்ணாந்து பார்த்த புனித பிம்பங்களை உடைத்து சாதாரண மானிடர்களாகவே கதை மாந்தர்களின் உளவியலைப் பேசப்பட்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ, வழமையான‌ மர்ம நாவல் எனக் கடக்கவியலாத கனம் கொண்டிருக்கிறது.

நூல் : ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’

ஆசிரியர்: சி.சரவணகார்த்திகேயன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பக்கம் : 912,

விலை: ரூ.950/-

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com