‘எழுது, படி… எழுத்தறி, எழுந்திரு’ இதுதான் சாட்சரதாவின் முழக்கம்.

‘எழுது, படி… எழுத்தறி, எழுந்திரு’ இதுதான் சாட்சரதாவின் முழக்கம்.

கேரளாவின் அட்டப்பாடி சீமையில் பழங்குடியினரின் ‘பாஷெ’ – உருவாக்கியவர் தாசனூர் நாராயணன், தொடர்ந்து அட்டப்பாடியில் பழங்குடியினரின் உயர்வுக்குப் பாடுபடுகிறார். அரசின் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் (ஹில் ஏரியா டெவலப்மெண்ட் ஸ்கீம்) ‘அகாட்ஸ்’. அதிலிருந்து பெண்களுக்குப் பாதுகாவலாக ‘தாய்க்குலச் சங்கம்’. அதன் உட்கட்டமைப்பாகப் புறப்பட்டது ‘சாட்சரதா’.

‘எழுது, படி… எழுத்தறி, எழுந்திரு’ இதுதான் சாட்சரதாவின் முழக்கம்.

அட்டப்பாடியின் சுற்றுவட்டாரத்து 100+ பழங்குடியினர் குடியிருப்புகளிலிருந்தும் கள்ளச்சாராயம் காய்ச்ச வேலைக்கு ஆளெடுக்கும் சாராய மாஃபியாவுக்கு இந்த முன்னேற்றங்கள் பிடிக்குமா? முட்டிக்கொள்கிறது.

சாராய மாஃபியாவின் வேர் ஆழமானது. அட்டப்பாடி காட்டுக்குள் சாராயம் வடிக்கும் குன்னிக்கண்ணனே பெரிய கை. அந்தப் பகுதியின் காவல் துறையும் பார்த்து நடுங்கும் கை. அவனுக்கும் மேலே மாஹி மஸ்தான், கோடிகளை சொடுக்கும் நேரத்தில் காவல் துறையின் வாயடைக்கக் கொடுக்கும் பெருங்கை. அவனுக்கும் மேலே பல தலைகள். யாராலும் சாராய மாஃபியாவை எதுவும் செய்ய இயலவில்லை.

எதிர்த்துக் குரல் கொடுத்த தாய்க்குலச் சங்கத்தின் பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். கொடூரமெனில், மிகக் கொடூரம். கூட்டுப் பாலியல் வன்முறையை மென்மையெனச் சொல்லும் அளவுக்குக் கொடூரம். முகம் சிதைக்கப்பட்டுக் கொல்லப்படும் பெண்களின் கொலையை விசாரிக்க வரும் காவல் துறை ஆய்வாளரும் விசாரணையென்னும் பேரில் எல்லை மீறுகிறார். இறக்கும் பெண்கள் ‘மர்மச் சாவு’ எனப் பதியப்படுகிறார்கள். எவையும் அங்கு கொலையில்லை; மர்மச் சாவு, தற்கொலை, அவ்வளவுதான்.

சாராய மாஃபியாவிடம் படியாத பழங்குடி ஆணென்றால் கஞ்சா பொய் வழக்கு, பெண்ணென்றால் விபச்சாரப் பொய் வழக்கு. ஒரு குடும்பத்தில் ஆண் மாஃபியாவிடம் பணிந்து வேலை செய்வதும், அவன் மனைவி தாய்க்குலச் சங்கம் மூலமாக மாஃபியாவுக்கு எதிராகவும் கிளம்பினால், அவளைப் பற்றித் தவறான செய்திகளைச் சொல்லி அவள் கணவனை நம்பவைத்துக் குடும்பத்தில் குழப்பம்.

கட்டுக்கு அடங்காமல் இவை செல்லும்போது மூன்று எதிர்பாராத நிகழ்வுகள்.

பழங்குடியினச் சிறுமிகளைத் தகாத முறையில் நீலப்படம் அளவுக்குப் படம்பிடித்து இணையத்தில் இட்டது பரபரப்பாகிறது. காட்டுக்குள் சென்று வருவோர்க்கு அந்தச் சிறுமிகளைத் தெரியுமென்பதால் ஊடகங்கள் உள்ளே வருகின்றன.

பழங்குடியின மாணவியர் உறைவிடப் பள்ளியில் இரவில் புகுந்து பாலியல் தொல்லை தரும் கருப்பு உருவம். தொடர்ந்து சிறுமிகள் கர்ப்பமாதல், தற்கொலை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்கவைக்காமல் அழைத்துச் செல்லல், எல்லாமும் நடக்கின்றன. கொடுமையால் மனம் நொந்து ஜனாதிபதிக்கு இரண்டு மாணவிகள் கடிதம் எழுதுகிறார்கள். கடிதத்தை முறையாகத் தபாலில் அனுப்பப் பொறுப்பாளர் உதவுகிறார்.

பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சரே உதாசீனப்படுத்திய பிறகும், அனைத்துத் தடைகளையும் மீறி, அகாட்ஸ் அமைப்பின் பொறுப்பாளர் காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநரை சந்தித்துவிடுகிறார். மனு கொடுக்கிறார்.

ஜனாதிபதிக்குக் கடிதம் சேர்ந்ததா?

பழங்குடியினரின் மேல் நடத்தப்படும் அத்துமீறல்கள் ஊடகங்களால் பேசப்பட்டதன் பலன் என்ன?

காவல்துறை கூடுதல் இயக்குநர் கருப்பு ஆடுகளைப் பிடித்தாரா?

அட்டப்பாடி சுற்றுவட்டாரப் பழங்குடியினர் தொடர்ந்த ஆண்டுகளில் என்னவாக ஆனார்கள்?

வயிறான், செம்பட்டன், செங்கீரி, லட்சுமி, பழனிசாமி, மாதவன், குன்னிக்கண்ணன், மாஹி மஸ்தான், மருதி, நஞ்சி, கண்ணகி, மாதவி, அகாட்ஸ் சொசைட்டியின் பொறுப்பாளர் அனைவரும் அருமையாகப் படைக்கப்பட்டுள்ள கதைமாந்தர்கள்.

 நூல் : ‘சாட்சரதா’

ஆசிரியர் : கா.சு. வேலாயுதன்

பதிப்பு : ஸீரோ டிகிரி

விலை : 310/-

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com