தேவலோகத்தில் சந்திரயான்!

தேவலோகத்தில் சந்திரயான்!

‘சிரி’ கதை!

“மகாதேவா… மகாதேவா… அவசரம் அவசரம்” பதறியபடியே தேவர்கள் ஓடி வர அவர்களை தடுத்து நிறுத்தினார் பார்வதி.

    “அப்படி என்ன உங்களுக்கு அவசரம்? அவர் மனைவியான நானே அவர் தவத்தைக் கலைக்கக் கூடாது என்று அமைதியாக அமர்ந்து உள்ளேன். அவரோட கோபம் தெரியும்தானே உங்களுக்கு? கொஞ்சம் பொறுமையா வாங்க...”

    “தேவி பொறுமையாக இருக்கறதுக்கு நேரமில்லை. அதற்குள் மனிதர்கள் நம்மை மிஞ்சி விடுவார்கள் தேவி.”

   “என்னது மனிதர்களா? அவர்கள் நமது கண்காணிப்பில் அல்லவா இருக்கிறார்கள்.”

   “அதை  ஏன் கேட்கிறீர்கள் தேவி? அவர்களுக்கு அதிகப்படியான அறிவை தந்தது நமது தவறு.”

   “என்ன சொல்கிறீர்கள்?”

   “சந்திரனுக்குள்ளே வந்துட்டாங்க தேவி இப்ப. அடுத்தது நம்ம தேவலோகத்துக்கு வருவதற்கு எவ்வளவு நாள் ஆகும்?”

  “என்னது சந்திரனுக்கு வந்துட்டாங்களா?”

   “ஆமாம் தேவி...  அழகுக்கு, அறிவுக்கு சந்திரன்னு சொல்லிட்டு  இருந்தோம். இனிமே அப்படி சொல்ல முடியாது. ஏன்னா அவங்கதான் வந்து நேர்ல பாத்துட்டாங்களே.”

   அந்த நேரத்தில் சந்திரன் தலையை தொங்க போட்டவாறு பரிதாபமாக வந்து பார்வதியின் முன் நின்றார்.

    “தேவி என்னுடைய சுயம் ரூபம் தெரிஞ்சதுபோல  மத்தவங்களோட சுயரூபமும் தெரியக்கூடாது தேவி.”

  “இது என்ன புது சிக்கலாக இருக்கிறது. இதற்கு நம்ம சிவபெருமான் மட்டுமே பதில் சொல்லமுடியும்…”

   “ஆமாம் தேவி. அதனால்தான் இங்கு ஓடிவந்தோம். இன்னும் சற்று நேரத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் கூட வந்துவிடுவார்கள். இங்கே ஒரு மாநாடு நடத்த வேண்டியதுதான்...”

   “மாநாடா?” 

“ஆமாம் தேவி. இப்பொழுதெல்லாம் மாநாடு நடத்துவதுதான் பேஷன் ஆக இருக்கிறது.”

    “சரி சரி மாநாட்டுக்கு தேவையானதெல்லாம் பாருங்க. அதற்குள் சிவபெருமான் கண்ணு முழிக்கிறாரா பார்க்கலாம்.” தேவியின் உத்தரவு பெற்று  தேவர்கள் கலைந்தனர்.

   ற்று நேரம் ஆகியது. சிவபெருமான் கண்களைத் திறந்தார்.

    “பார்வதி சற்றுமுன் இங்கு என்ன நிகழ்ந்தது? என் ஞானக் கண்களினால் தேவர்கள் இங்கு வந்ததை அறிந்தேன்.”

    “ஆம் தேவா.  சந்திரனுக்கு ஏதோ ராக்கெட் விட்டு படமெல்லாம் எடுத்து, இன்ஸ்டாகிராம்னு பயங்கரமா பரவ விட்டுட்டாங்களாம் பூலோக மக்கள். அதற்காக பயந்துபோய் தேவர்களும், பிரம்மா, விஷ்ணு எல்லாம் வந்துட்டு போனாங்க. உங்க தியானம் கலைஞ்சதும் ஒரு மாநாடு போட்டுடலாம்னு சொல்லிட்டு போயிருக்காங்க. எப்படியாவது இந்த பிரச்னையிலிருந்து நாமதான் அவங்களுக்குத் தகுந்த பாதுகாப்பைத் தரணும்.”

     சிவனாரின் முகத்தில் குறுநகை. இதில் என்ன பிரச்னை இருக்கிறது?”

  “மகாதேவா... மகாதேவா...” போற்றிய குரல்களுடன் அத்தனை தேவர்களும் ஆஜர் முக்கியமாக நவகிரகங்கள் முகத்தில் அத்தனை பீதி...

    சந்திரன் பேசினார்: “பெருமானே நானே தேய்வதும் வளர்வதுமாக கஷ்டத்துடன் இங்கு இருக்கிறேன். இந்த நேரத்தில் இந்தியாங்கிற நாட்டுல இருந்து என்ன சோதனை செய்ய வந்துட்டாங்க. இனி எனக்குன்னு மனிதர்கிட்ட இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்டுமோன்னு பயமா இருக்கு தேவா! என்னை இதுவரைக்கும் அழகு, அப்படி இப்படின்னு புகழ்ந்து தள்ளிட்டு, இப்ப பயங்கரமா கலாய்கிறாங்க. இனி எப்படி நான் தலைநிமிர்ந்து ஒளி வீசுவேன்?” கவலையுடன் வார்த்தைகள் தடுமாற நிறுத்தினார்.

     உடன் பிரம்மா பேசினார்: “பிரபோ நாம் செய்த முடிவின்படியே மனிதர்களுக்கு அறிவியல் எனும் அறிவைத் தந்து படைத்தேன். ஆனால், நம்மிடமே வரம் பெற்று நம்மையே துரத்திய அசுரர்கள்போல இவர்களும் நம்மிடத்துக்கே வர எண்ணுவது நியாயமா?”

    அடுத்து விஷ்ணு திருவாய்: “நல்லவேளை நான் பாற்கடலில் இருக்கிறேன். இல்லை என்றால் நானும் மாட்டிக்கொள்வேன். சரி விஷயத்துக்கு வருகிறேன். இன்று சந்திரனுக்கு வந்தவர்கள் நாளை சூரியன், செவ்வாய் என்று நுழைய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இந்த கிரகங்கள் இருப்பதால்தான் மனிதர்கள் கொஞ்சமாவது பயந்து நம்மிடம் வருகிறார்கள். இந்த பயம் விட்டுப்போனா கடவுளாவது ஒன்றாவது என்று நம்மையே ஏளனம்தானே செய்வார்கள் ஐயனே?”

சிவபெருமான் அனைவரின் வாதங்களையும் ரசித்துக் கேட்டார் .   “உங்கள் அனைவரின் பயத்துக்கும் ஒரே காரணம் மனிதர்களின் அறிவுதானே? ஒன்றை மறந்து விட்டீர்கள். ராக்கெட் சந்திரனில் பாதுகாப்பாக இறங்கவும் இயங்கவும் வேண்டி  நம்மிடம்தான் பூஜைகள் செய்தனர் . அது மட்டுமின்றி நாம் தந்த அறிவினால்தான் இந்த சாதனையை அவர்கள் செய்துள்ளனர். அப்படிப் பார்த்தால் இந்த பெருமைகளுக்கு எல்லாம் மூல காரணம் நாம்தான்.

அது மட்டுமல்ல,  ஜாதியும், அரசியலும் உள்ளவரை அவர்கள் சந்திரனுக்கே வந்தாலும் யாரும் பயப்பட வேண்டியதில்லை. எப்பவும் போல ஜோதிடர்கள் சந்திராஷ்டமம் என்று சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.  முக்கியமா ஒண்ணு புரிஞ்சுக்குங்க... சாதனையெல்லாம் சோதனை வரும்வரைதான். அதுக்கப்புறம் நம்ம கிட்டதான் வரணும். எல்லோரும் கவலைப்படாம, கண்டுக்காம அவங்கவங்க வேலையைப் பாருங்க...” சிவனாரின் கண்கள் மீண்டும் மூடி, தியானத்துக்கு சென்றது .

    தேவர்களும் மாநாடு வெற்றிகரமாக முடிந்து அவரவர் இருப்பிடம் சென்றனர். சந்திரனும் சந்தோஷமாக ரோவர் எடுக்கும் புகைப்படத்திற்கு போஸ் தர தன்னை அழகு படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com