செக்-மேட்!
(ஜெயித்தது யார்?)

செக்-மேட்! (ஜெயித்தது யார்?)

நாடகம்!

மிழ் நாடகக் கலை அன்றும் இன்றும் என்றும் அழியாத தொன்றாகும். நமது நாடு சுதந்திரமடைய, நாடகங்கள் ஆற்றிய பணியை மறுக்கவோ, மறக்கவோ இயலாது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பாகவே நாடகக்கலை தோன்றிவிட்டதெனக் கூறப்படுகிறது. நாடகத்தில் பங்கேற்கும் கலைஞர்கள், நவரச பாவங்களை வெளிக்கொணர்ந்து மக்கள் முன்பு நேரடியாக நடிக்க வேண்டும்.

பம்மல் சம்பந்த முதலியார், பரிதிமாற் கலைஞர், சங்கரதாஸ் ஸ்வாமிகள், டி.கே.எஸ். சகோதரர்கள், ஆர்.எஸ். மனோகர் போன்ற பெரிய கலைஞர்கள் தமிழ்நாடகக் கலையை வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்தவர்கள்.

தமிழ் நாடகப்பற்று கொண்ட மும்பை வாழ்த் தமிழர்களும், நாடகக்குழு அமைப்புகளை ஏற்படுத்தி சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.

முக்கியமாக மும்பை ஸ்ரீசண்முகானந்தா சபா, மற்றும் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி செம்பூர் ஆகிய இரு அமைப்புகளும் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

மும்பை ஸ்ரீசண்முகானந்தா தியேட்டர் குழுவினரின் விருது பெற்ற நாடகமான ‘செக்மேட்’ சமீபத்தில் புனேயில் நடைபெற்றது. இதை புனே சிட்டி தமிழ்ச்சங்கம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

‘செக்மேட்’ என்ற நாடகம், மனித வாழ்வும் செஸ் விளையாட்டு போன்றதுதான். எங்கே வளைந்து கொடுக்க வேண்டும்? எவ்வாறு வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும்? எப்போது கட் செய்ய வேண்டும்? எப்படி காயை நகர்த்த வேண்டும் என பல விஷயங்களைத் தெரிவிக்கிறது.

இந்நாடகத்தில் பெரியவர் கிருஷ்ணன் மாமா தனது டாக்டர் மகன் முரளி, மருமகள் சுமதி, பேத்தி ஷாலினியுடன் சேர்ந்து மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருப்பவர். மருமகள் சுமதியின் பிறந்தநாள் கொண்டாட்ட சமயம், அவளுடைய அமெரிக்காவாசியான அண்ணா ஹரி surprise விசிட் கொடுக்க, ஆச்சரியமும் சந்தோஷமும் அங்கே நிலவுகிறது. எல்லாக் கொண்டாட்டமும் முடிந்தபின், எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வொன்று குடும்பத்தையே கதிகலங்கச் செய்துவிடுகிறது.

அது எப்படிப்பட்ட நிகழ்வு? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? பாதிக்கப்பட்டவர்கள் யார்? அதற்குத் தீர்வு காணப்பட்டதா? இவ்வாறு எழும்பும்  பல கேள்விகள் இறுதியில் ஒரு முடிவுக்கு வருகின்றன. யார்? யாருக்கு செக்மேட் வைத்தார்கள்...? ஸஸ்பென்ஸ்.

நேசம், பாசம், கோபம், பச்சாதாபம், வருத்தம், ஆறுதல் என பல்வேறு வகை உணர்வுகளை நாடகத்தில் நடித்த கலைஞர்கள் வெளிக்காட்டி திறம்பட நடித்தனர்.

மேலும், சுமதியின் தோழி ரேவதி, காலனி வம்பு பேசும் மீனா மாமி, ஊரிலிருந்து அடிக்கடி வரும் கிருஷ்ணன் மாமாவின் சகோதரர் ராமமூர்த்தி என அனைவருமே அவரவரது பாத்திரமறிந்து நடித்தனர்.

கதை, வசனம் எழுதி இயக்கியவர் திருமதி சந்தோஷ் ராஜன். இவருக்கு உதவியாக செயலாற்றியவர் திருமதி ஜி. சுப்புலெக்ஷ்மி.

இசையை திரு. ஸ்ரீராம்ராஜனும், ஒளி அமைப்பினை திருமதி. சுதா ரங்கநாதனும் கையாண்டனர். ஒப்பனைக் கலைஞர் திரு. உஜ்வல் ப்ரஷாந்த் தனது கைத்திறமையால், கலைஞர்களை மாற்றினார்.

நாடகத்தின் எதிர்பாராத திருப்பங்கள், சாட்டையடி போன்ற வசனங்கள், கலகலப்பான வம்பு பேச்சுகள் என வசனங்கள் அனைத்தும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

புனே சிட்டி தமிழ்ச் சங்கம் செயலர் மற்றும் அதன் கமிட்டி அங்கத்தினர்கள், உறுப்பினர்கள் நாடகக் குழுவை மனதார பாராட்டி கெளரவித்தனர்.

புனேசிட்டி தமிழ்ச்சங்கம் பற்றிய விபரங்கள்

டந்த 20 ஆண்டு காலமாக வெற்றிகரமாக செயலாற்றி வரும் புனே சிட்டி தமிழ்ச் சங்கம் ஒரு ரெஜிஸ்ட்டர்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் கலாசாரம் பேணும் சங்கம் ஆகும்.

இதனுடைய குறிக்கோள்கள் (1) தொண்டு ஆற்றுவது. (2) கலாசாரத்தை வளர்ப்பதுஎன இரு பகுதிகளாக வகைபடுத்தப்பட்டுள்ளன.

முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அநாதைக் குழந்தைகள் காப்பகம் போன்ற பல தொண்டு நிறுவனங்களுக்கு அவ்வப்போது உதவி செய்து வருகிறது. மேலும் இயற்கை சீற்றத்தால் அபாய விளைவுகள் ஏற்பும் நேரம், கோவிட் சமயமென அனைத்துவகை இடர்கள் ஏற்படும் நேரம், துன்பமடைந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது.

அங்கத்தினர்களுக்காக சென்னை, மும்பை நகரங்களிலிருந்து நாடகக் குழுக்களை அழைத்து நாடகம் நடத்துவது; கொலு போட்டி, பாட்டு போட்டி போன்றவைகளை வைப்பது; கவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடுவது; பிரபல பேச்சாளர்களை அழைத்து பட்டிமன்றம் நடத்துவது; பொங்கல் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்வது என இந்திய கலாசாரத்தை வளர்த்து வருகிறது.

வாழ்நாள் சாதனையாளர் விருது!

வ்விருது புனே நகர தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய தலைவர் முனைவர் டாக்டர் சத்தியநாராயணன், அவர்களது தந்தை லோகிதாசன் நினைவாக 2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மறைந்த லோகிதாசன் தென்காசியில் எளிய குடும்பத்தில் பிறந்து, தன் அயராத முயற்சியினால், தினத்தந்தி நாளிதழில் எழுத்தராக 40 ஆண்டு காலத்திற்கும் மேல் பணிபுரிந்தவர். தெய்வபக்தி உடையவர். இவரது எழுத்துகள் பல தலைவர்களின் பாராட்டுகளைப் பெற்றதாகும்.

சென்ற ஆண்டிற்கான “திரு லோகிதாசன் நினைவு நாள் சாதனையாளர்” விருது பட்டிமன்ற புகழ் முனைவர் ஞான சம்பந்தன் மற்றும் புலவர் ராமலிங்கம் ஆகிய இருவருக்கும் அளிக்கப்பட்டது. இவ்வருடம் (2023) கலை சேவைகளுக்காக, திருமதி. சந்தோஷ் ராஜனுக்கு இவ்விருது அளிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com