உலகில் மக்களாட்சி மலர்ந்து வளர்ந்தது எப்படி தெரியுமா..?

உலகில் மக்களாட்சி மலர்ந்து வளர்ந்தது எப்படி தெரியுமா..?

செப்டம்பர்-15 உலக மக்களாட்சி தினம்!

லகின்  பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பாடுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டடுள்ளது. ஜனநாயகம் எனும் மக்களாட்சி முறை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் உலகில் தோன்றியது.

உலகில் ஜனநாயகம் முதன்முதலாக துளிர் விட ஆரம்பித்தது கி. மு 600 ம் ஆண்டில் இந்தியாவிலும், மொசபெடாமியாவிலும் தான். 5 ம் நூற்றாண்டில் கிரேக்க ஏதென்ஸ் நகரில் ஜனநாயக உரிமைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. மக்களாட்சியின் பிறப்பிடம் கிரேக்கம் ஆகும். Democracy என்ற ஆங்கில சொல் Demos மற்றும் Cratia என்ற இரு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும்.

பழங்கால கிரேக்க ரோமானிய அரசுகளில் மக்களாட்சி கொள்கை பின்பற்றப்பட்டது. இடைக்காலத்தில் மக்களாட்சி முறையில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க சுதந்திரப்போர், பிரான்சியப் புரட்சி, ரஷ்யப் புரட்சி போன்றவை மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி என்ற புரட்சிக் கருத்திற்கு செயல்வடிவம் கொடுத்தன. அதனடிப்படையில் மக்களாட்சி முறை பல நாடுகளில் ஏற்பட்டது.

9 மற்றும் 10 ம் நூற்றாண்டில் முதன்முதலாக  ஐஸ்லாந்து நாட்டில் பாராளுமன்ற அமைப்பை போன்றதொரு அமைப்பு உருவாக்கப்பட்டது. உலகின் முதல் பாராளுமன்றம் ஐஸ்லாந்து நாட்டின் "ஆல்பிங்கி." கி.பி. 930ல் இப்பாராளுமன்றம்  செயல்பட்டுள்ளது. தற்போதைய ஓட்டெடுப்பு முறையிலான பாராளுமன்ற முறையை முதன்முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தியது இங்கிலாந்து தான். 1265 ம் ஆண்டு இம்முறையை அறிமுகப்படுத்தியது. பார்லிமென்ட் முறையை தோற்றுவித்தவர் பிரிட்டனின் சைமன் டீ மாண்ட்ரேக் போர்ட் என்பவர்.

மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன. நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். 20 ம் நூற்றாண்டில் பெரிய நாடுகளில் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப் படவில்லை. இதற்கு காரணம், மக்கள் தொகைப் பெருக்கமே ஆகும். எனவே மறைமுக மக்களாட்சி முறையில் மக்கள் அவர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகின்றனர். உலகின் பல நாடுகளில் இம்முறையே தற்போது பின்பற்றப்படுகிறது.

1848 ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நவீன முறையிலான பாராளுமன்ற விதிகளை உருவாக்கியது. உலகிலேயே முதல்முறையாக 1893 ம் ஆண்டு நியூசிலாந்து பெண்களையும் பாராளுமன்றத்திற்கு வர அனுமதித்தது.

1906 ம் ஆண்டு பின்லாந்து அரசு உலகிலேயே முதல்முறையாக இன பாகுபாடுமின்றி யார் வேண்டுமானாலும் அரசு அதிகாரத்திற்கு வாக்கெடுப்பு மூலம் வரலாம் என்பதை அறிமுகப்படுத்தியது. 1907 ம் ஆண்டு பின்லாந்து பாராளுமன்றத்தில் பெண் எம்பி ஒருவர் முதன்முதலாக இடம்பெற்றார் இலங்கையில் 1960 ஜுலை 21 ந் தேதி உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் தெரிவு செய்யப்பட்டார். 1971 இல் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 26 ஆவது அமர்வில் அவர் உரையாற்றினார்.

உலகிலேயே முதல்முறையாக பெண் மணி ஒருவரை ஜனாதிபதியாக பதவியில் அமர்த்தியது ஐஸ்லாந்து நாடு தான். 1980 ம் ஆண்டு விகோல்ஸ் என்ற பெண் ஜனாதிபதியாக இங்கே தேர்தெடுக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தில் ஆண்களைவிட அதிக பெண் எம். பிகளை கொண்ட நாடுகள் பல தற்போது உள்ளன. ருவாண்டா நாட்டின் மொத்த பார்லிமெண்ட் உறுப்பினர் களில் 61 சதவீதம் பேர் பெண்கள். கியூபா நாட்டின் பார்லிமெண்ட்டில் 53 சதவீதம் பேர் பெண்கள். ஐஸ்லாந்து நாட்டில் 52 சதவீதம் பேர் பெண் எம்.பிக்கள். நிகரகுவா நாட்டில் 51 சதவீதம் பேர் பெண் எம். பிகள். மெக்ஸிகோ நாட்டில் 50 சதவீதம் பேர் பெண் எம் பிக்கள்.

உலகளவில் 8 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் பெண் உறுப்பினர். இந்தியா இந்த வகையில் பெண் எம். பிக்கள் உள்ள நாடுகளில் 6வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com