காமராஜர் கண்ணீர்விட்ட 3 தருணங்கள் தெரியுமா?

காமராஜர் கண்ணீர்விட்ட 3 தருணங்கள் தெரியுமா?

அக்டோபர் 2-காமராஜர் நினைவு தினம்!

காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே, அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

கட்சி சுற்றுப்பயனத்தின்போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.

காமராஜர் பிறரிடம் பேசும்போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார். நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும்போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் பேசுவாராம்.

காமராஜருக்கு கோபம் வந்துவிட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால், அந்தக் கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்துவிடும்..

தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களைத் துல்லியமாகச் சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.

காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்தக் காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.

தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்துகொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்றுமுதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

காமராஜருக்கு மலர் மாலைகள் என்றால் அலர்ஜி. எனவே, கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக் கொள்வார். கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிகமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்துவிடுவார்.

பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால் பெரிய கேக் கொண்டு வந்து வெட்டச் சொன்னால், "என்னய்யா... இது?'' என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் ‘கேக்' வெட்டுவார்.

தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்வார்.

காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசிவிட்டால் போதும். அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாகச் சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபக சக்தி.

ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த
234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார். சட்டத்தைக் காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலதிட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. "மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.

காமராஜர் எப்போதும் ‘முக்கால் கை' வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.

காமராஜர் மணிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்துபோட வேண்டும் என்றால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார்.

காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதியஉணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார்.

காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக்கொள்வார். தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வார்.

பாரதி பக்தர் காமராஜர். எப்போதும் தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.

காமராஜர் ரஷியப் பயணத்தின்போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர், பாரதியின் ‘ஆகாவென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற பாடலைப் பாடி ரஷிய மக்களின் பாராட்டுகளைப் பெற்றார்.

காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசுவார். அவர் பேசும்போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.

சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல்முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.

காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களைக் கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போனதுமில்லை.

காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவார்.

காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்' என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.

காமராஜர் விருதுநகரில் இருந்து சென்னைக்கு கொண்டுவந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டிதான்.

பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கருதாமல், நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.

1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.

காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்டபோது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின்போது, 3).நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்தபோது.

காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக எதுவும் குறிப்புகள் எடுத்துக்கொள்வதில்லை. எதையும்நினைவில் வைத்துகொண்டு அவற்றை மிக எளிமையாகப் பேசுவார்.

காமராஜர் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்தபோது அனைவரது பார்வையும் காமராஜர் பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி, முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.

காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடைய பணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான். தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், `அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து! சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம் முடிந்து விட்டது என்று அர்த்தம். தன்னால் முடியாவிட்டால்` முடியாது போ' என்று முகத்துக்கு நேராகவே சொல்லி அனுப்பி விடுவார் காமராஜர்.

எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அவர்கள் சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவன செய்வார்.

சராசரிக் குடிமகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார் வேண்டுமானாலும் அவரிடம் நேரில் சென்று விண்ணப்பங்களைக் கொடுக்க முடிந்தது.

ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காது அவருக்கு. சொற்களை வீணாகச் செலவழிக்கமாட்டார். ரொம்பச் சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவே அனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com