காதுகள் நன்றாகக் கேட்கணுமா?

செப்டம்பர்-24 உலக காது கேளாதோர் தினம்.
காதுகள் நன்றாகக் கேட்கணுமா?

வ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக காது கேளாதோர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மனித உணர்வுகளில் மிகவும் வேகமானது கேட்டல் உணர்வுதான். மனித காதுகளால் ஒரு சப்தத்தை 0.05 நொடிகளில் கேட்க முடியும் அந்தளவுக்கு காதுகள் மிகவும் சென்சிட்டிவானது. அந்த உணர்வு திறன் மிக்க உடல் பாகம் ஆரோக்கியமாக இருக்க சில உணவு வகைகளை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

இதயம், நுரையீரல், மூளை மற்றும் உடல் எடை பராமரிக்க என்று நாம் சாப்பிடும் அனைத்து சத்தான உணவுகளும் நமது காதுகள் நன்றாக கேட்க உதவுகின்றன என்பதை அமெரிக்க மருத்துவ ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அதேவேளையில் இதய நோய் பாதிப்பு, அதிக உடல் எடை மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு 67 சதவீதம் காது கேட்பதில் குறைபாடு ஏற்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

காதுகளில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் குறிப்பாக அதிலுள்ள மெல்லிய காது ரோம செல்களுக்கும் நல்ல ரத்த ஓட்டமும், ஆக்சிஜனும் தேவை அப்போதுதான் காதுகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.

மீன் உணவுகளில் உள்ள ஒமேகா 3 காது மந்தமாவதை தடுக்கும் ஆற்றல் உடையது. காதுகள் நன்றாக கேட்க வாரத்தில் இரண்டு முறை மீன் சாப்பிட பரிந்துரைக் கிறார்கள். ஒமேகா 3 சத்து உணவை அடிக்கடி எடுத்துக் கொள்ள காது மந்தமாகும் பிரச்சினையை 22 சதவீதம் குறைக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆரஞ்சு நிற உணவுகளான  ஆரஞ்சு, கேரட் போன்றவைகள் வைட்டமின் "ஏ"யாக மாற உதவும் கரோட்டின் அதிகமுள்ளன. இவைகள் காது மந்தமாவதை குறைக்கும். அதேவேளையில் கொட்டை உணவுகள் மற்றும் அவகோடா  பழத்தில் உள்ள வைட்டமின்" ஈ" போன்றவைகளும் காது கேட்பதில் ஏற்படும் குறைபாடு களை தவிர்க்க உதவுகிறது. காதுகளின்  இரத்தக் குழாய்களிலுள்ள அசுத்தங்களை சுத்தம் செய்ய வைட்டமின் ஈ உதவுகிறது.

காதுகள் தெளிவாக கேட்க வைட்டமின் சி சத்து நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, குடை மிளகாய் மற்றும் புரோக்கோலி போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பொட்டாசியம் அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள இரைச்சலால் ஏற்படும் பாதிப்பை தவிர்கலாம். வாழை, திராட்சை, பீன்ஸ், பசலைக்கீரை போன்றவைகளில் பொட்டாசியம் சத்து அதிகம்.

தேவையற்ற ஒலிகளிலிருந்து காதுகளை காக்கும் கவசம் மெக்னீசியம் சத்து. இது குறைவதால் காதுகளின் இரத்த குழாய்கள் சுருங்கி ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படும். முழு தானிய உணவுகள், பருப்பு வகைகளில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. அவகோடா, முந்திரி, பாதாம், அத்திப்பழம், பூசணி விதை, சுரைக்காய் போன்ற வற்றிலும்  மெக்னீசியம் சத்து அதிகமாக இருக்கும்.

காதுகளின் உட்புற பகுதிகளை பாதுகாக்கும் சத்து துத்தநாக சத்து. வயது காரணமாக ஏற்படும் காது கேளாமை பிரச்சனைகளை தவிர்க்கும் சத்து இது. கடல் உணவுகள், கொட்டை உணவில் அதிகம் உள்ளது.

திராட்சை பழத்தில் "ரெஸ்வெரட்ரால்" எனும் சத்து அதிகம் உள்ளது. இது காதின் நடுவில் ஏற்படும் நோய் தொற்றுக்கான ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது என்கிறார்கள்.

காதினுள் உள்ள ஒலி வாங்கி நல்ல நிலையில் இயங்க வேண்டுமெனில் அதற்கு சிலிக்கான் மற்றும் அயோடின் சத்து தேவை. இவை இரண்டும் முள்ளங்கியில் உள்ளது. குறிப்பாக அதன் தோல் பகுதியில் உள்ளது. எனவே முள்ளங்கி சமைக்கும் போது அதன் தோல்களுடனே சமைக்க வேண்டும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com