விளையாடாப் பிள்ளை கிருஷ்ணமூர்த்தி! (சுந்தா எழுதிய ‘பொன்னியின் புதல்வர்’ அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து…)

செப்டம்பர் 09 அமரர் கல்கி பிறந்த நாள்!
விளையாடாப் பிள்ளை கிருஷ்ணமூர்த்தி! (சுந்தா எழுதிய ‘பொன்னியின் புதல்வர்’ அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து…)

"சுத்த விளையாட்டுப் பிள்ளை" என்று பல பையன்கள் பெயரெடுப்பதுண்டு. கிருஷ்ணமூர்த்தியோ "சுத்தமாய் விளையாடாப் பிள்ளை" என்று பெயரெடுத்தான். விளையாட வேண்டிய பருவத்தில் விளையாடாவிட்டால் அது சாதாரண நிலை இல்லைதான். சிறு பிள்ளையாய் இருக்கையில் தாம் விளையாடாமல் இருந்துவிட்டதை அடிக்கடி கல்கி வருத்தத்துடன் பின்பு நினைத்துக் கொள்வதுண்டு.

புத்தமங்கலம் கிராமத்தில் கல்கி பிறந்த வீடும், சென்னை அடையாறு வீட்டில் கல்கி பயன்படுத்திய மேஜையும்.

கிட்டத்தட்ட நாற்பது வயதாகியிருந்தபோது, அப்படி ஒரு சமயம் நினைத்துக் கொண்டதை அவர் எழுத்திலேயே தெரிவித்தார். அப்போது பாலாற்றின் கரையில் மாசிலாமணி முதலியார் குருகுலம் அமைத்துச் சில ஆண்டுகள் ஆகியிருந்தன. அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு எழுதிய நீண்டதொரு கட்டுரையின் மத்தியில் அவர் சொல்கிறார்;

எதிரில் மாணாக்கர் கோஷ்டிகள் சில வந்து நின்றன. உடனே கஸரத் வேலைகள் ஆரம்பமாயின. கஸரத்து என்றால் ஒரு தினுசு அல்ல; பல விதங்கள். முதலில் சாதாரண டிரில்; அப்புறம் தண்டால் பஸ்கி தினுசுகள்; அப்புறம் யோகாசனங்கள்; பிறகு தாண்டுதல், எழும்பிக் குதித்தல்,

இன்னும் சிலம்பம், குஸ்தி, கத்தி விளையாட்டு முதலியன. அப்படியே பிரமித்துப் போய்விட்டோம் நாங்கள். முக்கியமாக நான் அங்கேயே பகற் கனவு காண ஆரம்பித்து விட்டேன். மறுபடியும் சிறு பிள்ளையாகி அந்தப் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படிக்கும் பாக்கியம் கிடைக்காதா என்றே தோன்றிவிட்டது.

இராஜாஜி - கல்கி
இராஜாஜி - கல்கி

நான் பள்ளிக்கூடத்தில் படித்த இலட்சணம் அப்போது ஞாபகம் வந்தது. நான் படித்த நாளில், ஹைஸ்கூல் பிள்ளைகளைச் சாதாரணமாய் இரண்டு பிரிவாகப் பிரித்து விடுவது வழக்கம். ஒன்று படிக்கிற பிள்ளைகள், இரண்டு விளையாடுகிற பிள்ளைகள் என்று. படிக்கிற பிள்ளைகள் விளையாடப் போக மாட்டார்கள். விளையாடுகிற பிள்ளைகளுக்குப் படிப்பு வராது! அவர்கள் உபாத்தியாயருடைய தயவில் ஆறாவது பாரம் வரையில் தூக்கிப் போடப்படுவார்கள். பிறகு, ஆறாவது பாரத்திலேயே வருஷக் கணக்காய் இருப்பார்கள். அவர்கள் வேறு பள்ளிக்கூடங்களுக்குப் போய்விடா வண்ணம், உபாத்தியாயர்களும் அவர்களைத் தாஜா பண்ணி வைத்திருப்பார்கள். படிக்கிற பிள்ளைகளுக்கு-நல்ல மார்க்கு வாங்குகிற பிள்ளைகளுக்கு -வேறுவிதச் சலுகை உண்டு. அவர்கள் டிரில் கிளாஸுக்குப் போக வேண்டியதில்லை!

ஆகவே, நான் ஹைஸ்கூலில் படித்த நாளில் செய்த தேகாப்பியாசம் ஒன்றே ஒன்றுதான். சில சமயம், 'புட்பால்' விளையாட்டு நடக்கும் மைதானங்களுக்கு வேடிக்கை பார்க்கப் போவதுண்டு. அப்போது, விளையாடுகிறவர்கள் பந்தை வேகமாய் உதைக்கும்போது, நாங்கள் வேடிக்கை பார்க்கிற உற்சாகத்தில் சில சமயம் காலை வெறுந் தரையில் உதைப்போம்! (ஆ.வி. கட்டுரை-16-1-'38)

திருச்சியில் படிக்கையில் இப்படி. அதற்கு முன்னால் மாயூரத்தில் படிக்கையிலும், அதற்கும் முன்னால் கிராமத்தில் இருக்கையிலும் இப்படித்தான்.

பட்டணத்துக் குழந்தைகளைவிடக் கிராமத்துக் குழந்தைகள் அதிகமாய் விளையாடுவார்கள்-நேரமும் இட வசதியும் கூடுதலாய் உள்ள காரணத்தால். சாதனம் ஏதும் இல்லாமலே, ஆற்று மணலில் சடுகுடு விளையாடலாம்; ஓடிப் பிடித்து விளையாடலாம். ஓர் ஓட்டுச் சல்லி இருந்தால் போதும், பாண்டி விளையாட. கிட்டிப்புள் விளையாடவோ, கல்லா மண்ணா விளையாடவோ வேண்டிய குச்சிகளை ஒடித்துக் கொள்ள எத்தனையோ மரங்கள். வானத்துச் சந்திரன்போதும், நிலா ஆட்டத்துக்கு; வெறும் இருட்டுப் போதும், கள்ளன் விளையாட்டுக்கு. காற்றடிக்கும் காலத்தில் பட்டம் பறக்க விடலாம்; காற்றாடி செய்து சுழல விடலாம். இன்னும் எத்தனையோ எளிதான. இன்பமான விளையாட்டுக்கள்.

டி.கே.சி - கல்கி
டி.கே.சி - கல்கி

புத்தமங்கலம் சிறுவர்கள் இவற்றில் ஈடுபட்டிருக்கையில், கிருஷ்ணமூர்த்தி மட்டும் எதிலும் கலந்துகொள்ள மாட்டான். "இப்படி நோஞ்சானாய் இருக்கிறாயே, விளையாடினால்தானே உடம்பு தேறும்" என்று பெரியவர்கள் சொன்னால், "முதலில் உடம்பு தேறட்டும்; அப்புறம் விளையாடுகிறேன்" என்பான். அண்ணனோ, வேறு பையன்களோ பிடித்திழுத்து விளையாடச் செய்தால், ஒப்புக்குக் கொஞ்சம் ஓடியாடி விட்டு விலகிக் கொள்வான்; அல்லது, அவன் சரியாய் விளையாடாததைக் கண்டு, அவனுடைய கட்சிப் பையன்களே அவனை விலக்கி விடுவார்கள்.

விளையாட்டில் அவன் விருப்பம் கொள்ளாததற்குக் காரணம் என்ன? தன் வயதுப் பையன்கள் எல்லாம் தன்னைவிட உயரமாயும் பருமனாயும் இருப்பதைக் கண்டு அவன் ஒதுங்கி இருந்திருக்கக்கூடும். தன் சிறு உருவத்தை எண்ணி எண்ணி, உருவத்தினால் அல்லாமல் வேறு விதங்களினால், தன்னை ஊரார் மெச்சும்படி செய்ய வேண்டும் என்றும் கிருஷ்ண மூர்த்திக்குத் தோன்றியிருக்கலாம். அதனாலேயே, அவன் பின்னர், பாட்டினாலும், பேச்சினாலும், எழுத்தினாலும் களிப்பும் வியப்பும் ஊட்டிப் பலருடைய பாராட்டைப் பெற வேண்டும் என்று தீர்மானித்திருக்கலாம்.

கிருஷ்ணமூர்த்திக்கு விளையாடப் பிடிக்காவிட்டாலும், விளையாட்டைப் பார்க்கப் பிடிக்கும். பங்கு கொள்ளாமல் பார்ப்பதில் ஓர் ஆனந்தம், ஒரே சமயத்தில் மானசீகமாகக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பலருக்குள் புகுந்து விளையாடலாம் அல்லவா? பிள்ளைப் பருவத்தில் அவன் பழகிய இந்த "மாய வித்தை" பிற்காலத்தில் கதை மாந்தரின் மனத்துக்குள் புகுவதற்கும், அரசியல் ஓட்டசாட்டத் தாச்சி ஆட்டங்களை, ஒரு பார்வையாளனாய்க் கவனிப்பதற்கும் உதவியாய் இருந்தது எனலாம்.

கல்கி - சதாசிவம்
கல்கி - சதாசிவம்

விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக் கையில், "ஓடு, பிடி, விடாதே" என்றெல்லாம் கிருஷ்ணமூர்த்தி கூவி, தனக்கு வேண்டிய பையன்களுக்கு ஊக்கம் ஊட்டுவான். அந்தப் பையன்கள் ஜயித்தால், "பலே! பலே!" என்று பாராட்டித் தட்டிக் கொடுப்பான்; தானே வெற்றி அடைந்ததுபோல் மகிழ்வான். தான் ஆதரித்த பையன்கள் தோற்றுப் போனாலோ, தானே தோல்வியுற்றதாக எண்ணி வருத்தப்படுவான்.

சில சமயம் சிறுவன் விலகித் தனிமையை நாடிச் செல்வான். பெருமாள் கோவிலுக்குப் பின்னே மறைந்து மனோரதப் பம்பரத்தைச் சழலவிடுவான். இன்னும் தள்ளி வெட்ட வெளியை அடைந்து, கற்பனைப் பட்டத்தைப் பறக்க விடுவான். பொழுது சாய நேரம் இருந்தால், சாலை வழியே பாடிக்கொண்டே இராஜன் வாய்க்காலுக்குச் செல்வான். அதன் கரையில் நிற்கும் மரங்களில் ஒன்றில் ஏறி, வாய்ப்பான கிளை ஒன்றில் உட்கார்ந்து ஏதேதோ முனகிக் கொண்டு சொல் விளையாட்டில் ஈடுபடுவான். குடியானவ ஆண்களும் பெண்களும் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் நடமாடுவதைக் கவனிப்பான். ஆண்களின் உடற்கட்டையும், பெண்களின் இயற்கை அழகையும் ரசிப்பான்.

இருட்டுவதற்கு இன்னும் செல்லும் என்றால், கொள்ளிடக் கரைக்கு ஓடுவான். ஆடு மாடுகள் மேய்ந்து விட்டுத் திரும்புவதைப் பார்ப்பான். மாட்டின் கொம்புகளுக்கும் குளம்புகள் எழுப்பும் புழுதிக்கும் பயந்து சற்றே ஒதுங்குவான்.

ஒதுங்கிய இடத்தில் செடிக்குச் செடி பறக்கும் பட்டுப் பூச்சிகளைக் கண்டு மகிழ்வான். லயன் கரையில் நின்றபடி, வயல்களிலிருந்து கொக்குகள் பறந்து செல்வதைப் பார்ப்பான். குயிலின் குரல் கேட்டு, அது எங்கே ஒளிந்திருக்கிறது என்று அண்ணாந்து தேடிப் பார்ப்பான். கிருஷ்ணமூர்த்திக்கு இருட்டுப் பயம் கிடையாதாகையால் சில நாட்கள் அந்திப் பொழுதுக்குப் பிறகும் லயன் கரையில் உலாத்துவான். வானத்து மீன்களையும், வேலிப்புறத்து மின் மினிகளையும் பார்த்துக்கொண்டே நடப்பான்.

ஒருநாள் இருட்டி வெகு நேரமாகியும் தம்பி வீடு திரும்பாததைக் கண்டு, அவனைத் தேடிக்கொண்டு அண்ணன் சென்றான். "அப்படி என்னைப் பற்றிக் கவலை என்றால், நீயும் கூட வா" என்று தம்பி சொல்லி, அடுத்த சில நாட்களில் அண்ணனுடன் கைகோத்துக்கொண்டு, நெடுகிலும் சுற்றினான். அங்கங்கேதான் கண்டுபிடித்த அதிசயங்களை மூத்தவனுக்குக் காட்டினான். சாலையின் ஓரங்களிலும் தோட்டங்களின் மத்தியிலும் குடிசைகளில் வசிப்பவர்களைப் பற்றிக் கதை அளந்தான். இருட்டில் அசையும் உருவங்களைப் பற்றியும், கேட்கும் அரவங்களைப் பற்றியும் பிசாசுக் கதைகளைப் புனைந்து சொன்னான்....

வேறு எந்த ஆட்டம் கிருஷ்ணமூர்த்திக்குப் பிடிக்காவிட்டா லும், ஊஞ்சல் ஆட்டம் பிடிக்கும். பழியாய்ப் பிடிக்கும். மேலும் கீழும் வீசி ஆடுகையில் உண்டாகும் பித்தக் கிறுகிறுப்பு, தீவிர யோசனைக்கும், கற்பனைப் பெருக்குக்கும் உதவியானது அல்லவா? அந்தக் கிறுகிறுப்பு ஆட்டம் வாழ்க்கை நெடுகிலும் தொடர்ந்தது.

எத்தனையோ நாட்களில் தம்பியும் அண்ணனும் சேர்ந்து ஊஞ்சல் ஆடுவார்கள். ஆளுக்கொரு கம்பியைப் பிடித்துக் கொண்டு மணிக்கணக்கில் ஆடுவார்கள். ஆடிக் கொண்டே பாடுவார்கள். இடையிடையே தம்பி தன்னுடைய கீச்சுக் குரலைப் பற்றிக் குறைப்பட்டுக் கொள்வான். கீச்சுக் குரலானாலும் கேட்க நன்றாய்த்தான் இருப்பதாக அண்ணன் சொல்லித் தேற்றுவான். அதைக் கேட்டுத் தன் குறையை மறந்து மீண்டும் பாடுவான் கிருஷ்ணமூர்த்தி. பாட்டுடன் ஆட்டம், ஆட்டம், ஒரே ஆட்டம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com