
நகரம் நரகம் என்று சொல்லியே
நகரம் வர மறுத்துவிடுவார்
செல்லையா தாத்தா.
பேரனைக் காண எப்போதாவது
வந்து செல்வார்.
ஞாயிற்றுக்கிழமையொன்றில்
பேரனோடு காய்கறி வாங்கி
திரும்பும்போது
அடுத்து வெட்டக் காத்திருக்கும்
ஆடு ஒன்றுக்கு
கீரையைத் தின்னக் கொடுத்து
உடல் வருடி முத்தமிட்டு
திரும்பித் திரும்பிப்
பார்த்துக்கொண்டே வரும்
பேரனின் கண்களில்
தன் ஆதித் தகப்பனை
கண்டு கொண்ட மகிழ்வில்
கூத்தாடத் தொடங்குகிறார்
செல்லையா தாத்தா -
நடு வீதியென்றும் பாராமல்.
-கடங்கநேரியான், மதுரை