பசுமை முதலீடுகள்!

உலக சுற்றுலா தினம் 2023
பசுமை முதலீடுகள்!

லக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு சுற்றுலாவால் ஏற்படும் மகத்தான கலாசாரம், பொருளாதாரம் மற்றும் சமூக நன்மைகளைப் பற்றி சிந்திக்க இந்த நாள் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 

Tourism & Green Investments என்ற கருப்பொருள் ஏன்? 

ந்த ஆண்டு கொண்டாடப்படும் உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் (Tourism & Green Investments) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலா துறையில் நிலையான நடைமுறைகளைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்த கருப்பொருள் அமைகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைத்து உள்ளூர் சமூகங்களுக்கு பாதுகாப்பை அளிப்பதற்கான பொறுப்பு இதனால் புலப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த உட்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மறுசுழற்சி முதலீடு என இவற்றுக்கான முயற்சிகளில் நிறுவனங்களை இறங்கச் செய்ய வைக்கும் நோக்கிலும் இந்த கருப்பொருள் அமைகிறது. 

உலக சுற்றுலா தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன? 

லக சுற்றுலா தினம், 1980 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பால் (UNWTO) உருவாக்கப்பட்டதாகும். இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் சுற்றுலாவின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுலாவால் அந்நாட்டு சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் ஒரு தளமாக இந்த நாள் செயல்படுகிறது. 

சுற்றுலா, உலகளாவிய புரிதலையும் அமைதியையும் எவ்வாறு மேம்படுத்துகிறது?

ல்வேறு மக்களின் கலாசாரங்கள், மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையை ஆராய சுற்றுலா ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலமாக மனிதர்களின் சகிப்புத்தன்மை, மக்களிடையே இருக்கக்கூடிய மதிப்பு – மரியாதை போன்றவை மேன்மை படுத்தப்பட்டு, அவர்களை சிறப்பானவர்களாக மாற்ற வழி வகுக்கிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அவர்கள் செல்லும் ஊரின் உள்ளூர் சமூகங்களுடன் பழகுவதால், அவர்களின் எல்லையை தாண்டி தனிப்பட்ட தொடர்புகளை உருவாக்கி, அமைதியான உலகம் அமைய பங்களிக்கின்றனர். 

சுற்றுலாவால் ஏற்படும் பொருளாதார நன்மைகள் என்ன? 

ல நாடுகளில் சுற்றுலா ஒரு முக்கிய பொருளாதார மையமாக இருந்து வருகிறது. பல வேலைகளை ஏற்படுத்தி, முதலீட்டைத் தூண்டி, வருவாயை உருவாக்குகிறது. சுற்றுலாத்துறையால் உணவு, போக்குவரத்து போன்ற பல தொழில்கள் விரிவடைகின்றன. இவை அனைத்துமே ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. குறிப்பாக, குறைந்த வளர்ச்சியடைந்த பகுதிகளில், சிறு வணிகங்களின் வளர்ச்சியை சுற்றுலாவால் ஊக்குவிக்க முடியும். 

நிலையான சுற்றுலா சுற்றுச்சூழலுக்கு எவ்வாறு பயனளிக்கும்? 

நிலையான சுற்றுலாவால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இயற்கை மற்றும் கலாசார பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது. ஒரு பாரம்பரியமான இடத்தில் சுற்றுலா பயணிகளின் பங்களிப்பு இல்லை என்றால், முறையான பராமரிப்பின்றி அந்த பாரம்பரிய இடங்கள் அழிய வாய்ப்புள்ளது. மேலும், நிலையான சுற்றுலாவால், நம் எதிர்கால சந்ததியினரும் உலகின் இயற்கை அதிசயங்களை அனுபவிப்பதை உறுதி செய்ய முடியும். 

நவீன உலகில் சுற்றுலாத்துறை எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

சுற்றுலாவால் பல நன்மைகள் வந்தாலும், அது பல்வேறு வகையான சவால்களையும் எதிர்கொள்கிறது. ஒரு இடத்திற்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருவதால் அங்கே சுற்றுச்சூழல் சீரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்துடன் கோவிட்-19 நோய்த்தொற்று போன்றவையும் சுற்றுலாத்துறைக்கு பெறும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுற்றுலா செல்லும் ஒரு தனி நபரின் பொறுப்பு எத்தகையதாக இருக்க வேண்டும்?

பொறுப்புள்ள சுற்றுலாவை செயல்படுத்துவதில் ஒவ்வொரு தனிநபருக்கும் முக்கிய பங்கு உண்டு. சுற்றுலா செல்பவர்கள் தாங்கள் செல்லும் இடத்தின் கலாசாரம், சுற்றுச்சூழல் பற்றி நன்கு தெரிந்துகொண்டு, உள்ளூர் பழக்கவழக்கங்களை மதித்து நடக்க வேண்டும். அத்துடன் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதகமும் ஏற்படுத்தாமல் இருக்கணும். மேலும் உள்ளூர் வணிகங்களை ஆதரித்தல், வளங்களை பாதுகாத்தல் மற்றும் சமூகம் சார்ந்த சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவைகூட ஒரு தனி நபரின் பொறுப்புகள்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை நாம் நினைவு கூறும்போதும், சுற்றுலா மூலமாக உலக மக்கள் அனைவருமே ஒன்றாக இணைந்து, பிரிவினை இல்லாத ஒரு நல்ல எதிர்காலத்தையும், அமைதியான உலகத்தையும் உருவாக்க முடியும் என நம்புவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com