நிலவில் தேனிலவு!

சிறுகதை!
நிலவில் தேனிலவு!

ஓவியம்: பிள்ளை

மாமா பஞ்சாபகேசனிடமிருந்து வந்த கைப்பேசி வாட்ஸ் அப் மெசேஜைப் படித்தபோது, புதுமணத் தம்பதியான வனமாலி – மாலினிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

வனமாலி-மாலினி தம்பதிக்கு,

இத்துடன் நிலவுக்கு தேனிலவு செல்வதற்கு 'கஜா கா தோஸ்த்' நிறுவனத்தின் தேனிலவு பாக்கேஜ் இரண்டு டிக்கெட்டுகள் அனுப்பியிருக்கேன். டிக்கெட் பத்திரம். கஜா கா தோஸ்த் நிறுவனம் டிக்கெட் இல்லாமல், நிலவுக்கு போகிற கேப்சூலில் (மாத்திரை இல்லை) ஏறுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். நிலாவுக்கு எப்படி தயாராகணும்னு அவங்க வைப்சைட்ல பாத்துக்க. கஜா கா தோஸ்த்கிட்ட, டைம் மிஷின் இருக்கு. அந்த மிஷின்ல, உங்கள நிலாவுக்கு கூட்டுகிட்டு போய்ட்டு வருவாங்க. கஜா நம்ம தோஸ்த் அதாவது நண்பன். உங்கள பத்திரமா பாத்துப்பான். கஜா கா தோஸ்த் கம்பெனில, ராத்திரி 12 மணிக்குதான், நிலாவுக்கு அனுப்பற சந்திர யோகம் இருக்கு. இரண்டு நாள்ல, செப்டம்பர் 25 அன்னிக்கு, ராத்திரி 12 மணிக்கு ஆஜராகிடுங்க. கஜாவுக்கு ரகசியம் முக்கியம். எனவே கப்-சிப் ப்ளீஸ். நிலாவுக்கு உலா போயிட்டு வந்து, மெசேஜ் அனுப்பவும்.

உங்களிடம் அன்புள்ள,

பஞ்சு மாமா என்கிற பஞ்சாபகேசன்

'மாலினி. பாத்தியா. யாரும் போகாத இடத்துக்கு ஹனிமூன் போகணும்னு நேத்திக்குத்தான் சொல்லிட்டிருந்த. உங்க மாமா நிலாக்கே நமக்கு டிக்கெட் வாங்கிட்டாரு. சந்திராயன் போய் ஒரு மாசம்தான் ஆச்சு. ஆனா, டைம் மிஷின், கேப்சூல்ன்னு என்னென்னமோ சொல்லறாரு' என்றான் வனமாலி.

'பஞ்சு மாமான்னா சும்மாவா. அவரு குழந்தையா இருந்தபோதே, இஸ்ரோவுக்கு டூர் போனவரு. அவரோட பிரெண்டு கஜாகிட்ட நம்மள ஒப்படச்சுருக்காரு. ஒண்ணும் கவலைப் பட வேண்டாம்' என்றாள் மாலினி.

வனமாலி கஜா கா தோஸ்த் இணையதளத்திற்கு சென்று, வாங்க வேண்டிய பொருட்களைப் பார்த்தான்.

ஸ்பேஸ் சூட் - திநகரில் ரெங்கநாதன் தெருவில் சந்துக் கடையில் கிடைக்கும்.

ஆக்ஸிஜன் சிலிண்டர் - வாயுபகவான் ஆக்ஸிஜன் சர்வீஸ், அம்பத்தூர் மற்றும் மிகப்பெரிய பட்டியலைப் பார்த்து, வனமாலி பிரமித்துப் போனான்.

நிலாவிற்கு போவதற்கு, இவ்வளவு பெரிய பட்டியலைப் பார்த்து நடுங்கினாலும், நிலாவில் தேனிலவு என்ற எண்ணம், அவனது காதில் பாரதியார் கூறியதைப் போல், இன்பத்தேனாக வந்து பாய்ந்தது.

குரோம்பேட்டையில், ஊரின் சத்தங்களிலிருந்து விலகி இருந்த, ஒரு தெருவின் கடைக் கோடியிலிருந்த கஜா கா தோஸ்த் கம்பெனியில், வனமாலியும், மாலினியும் நிலவுக்கான பிரத்யேக சூட்டில் தயாராக நின்றபோது, அருகிலேயே, இரண்டு தம்பதிகளும் வந்திருந்தனர். உள்ளேயிருந்து, முண்டா பனியனும், லுங்கியும் அணிந்த ஆசாமி வேகவேகமாக வந்து, இவர்களை பிடித்து தர தரவென உள்ளே அழைத்துச் சென்று, கதவை வெடுக்கென்று சாத்தினான்.

'கஜாவுக்கு ரகசியம் முக்கியம்' என்றான் அந்த லுங்கி ஆசாமி.

'உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கே' என்றான் வனமாலி.

'இவர் கதாநாயகன் படத்துல வர்ற கள்ளதோணி கஜா' என்றான் கார்மேகம். அவனை அவனது மனைவி மேகலா வெடுக்கென்று கையால் இடித்து, சத்தம் போடாதே என்றாள்.

'எங்க தாத்தா கஜாவை பத்தி தப்பா சொன்னா, உங்கள நிலாவுல தவிக்க விட்டுட்டு வந்துடுவேன். அவரோட பேர்ல மங்களகரமா மஞ்ச கலர்ல டைம் மிஷின் ரெடி பண்ணிருக்கேன். எங்க தாத்தா துபாய்க்கு கூட்டிக்கிட்டு போனாரு. நான் நிலாவுக்கு கூட்டிட்டு போறேன். என் பேரும் கஜாதான். எங்க குடும்ப பேர் கஜா' என்றான் கஜா ஜுனியர்.

வனமாலி- மாலினி, கார்மேகம் - மேகலா, கிருஷ்ணன் - ஜோதி என்று தம்பதிகள் ஒவ்வொருவராக அழைக்கப் பட்டனர். மொட்டை மாடியில், மெல்லிய வெளிச்சத்தில், முக்கோணமாக ஒரு கூடாரம் இருந்தது. அந்த கூடாரத்துக்கு தம்பதிகளை கஜா கூட்டிக்கொண்டு போனான்.

'தம்பி. இது கூடாரம்னு நினச்சுக்காத. இது டைம் மிஷின். கஜாவுக்கு ரகசியம் முக்கியம்' என்றான்.

மூவரும் அமர்ந்தவுடன், கஜாவும் லுங்கிக்கு மேலேயே ஒரு ஸ்பேஸ் சூட் அணிந்துக் கொண்டு, கூடாரத்தை மூடினான்; மன்னிக்க டைம் மிஷினை மூடினான். ஏதேதோ, பல பொத்தான்களை முன்பு அமிழ்த்தினான். அந்தக் கூடாரத்தில் பல்வேறு விளக்குகள் பளிச்சிட்டன. கூடாரம் டமாரம் போன்று பல்வேறு சத்தங்களை எழுப்பியது. வனமாலி பயந்துக்கொண்டு, மாலினியின் கையைப் பிடித்துக்கொண்டான். மாலினி தைரியமாக இதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். கூடாரம் கடகடவென ஆடியது. அப்போது கஜா எந்திரனைப் போல் பல்வேறு மந்திரங்களை உச்சரித்தான்.

டுத்த வினாடி, அந்த கூடாரம் இருண்டது. கஜா மறுபடி பல பொத்தான்களை அமிழ்த்துவது, ஓரளவிற்குத் தெரிந்தது. கஜா இப்போது, கதவைத் திறந்தான். வெளியே பார்த்தபோது, அங்கு மேடு பள்ளங்களாக இருந்தது.

'நிலா வந்தாச்சு.  இப்ப வருஷம் 2073. டிசம்பர் 28 ஆம் தேதி. நிலால ராத்திரி நேரம். அங்கங்க பள்ளமா இருக்கும். இருட்டா வேற இருக்கு. பாத்து நடங்க. நிலாவுல கீழ விழுந்து, விலா எலும்பு உடஞ்சா , கஜா கா தோஸ்த் கம்பெனி பொறுப்பு கிடையாது' என்றான் கஜா.

தம்பதிகள் மிகவும் ஜாக்கிரதையாக அடியெடுத்து வைத்தனர். கைகளை பற்றிக்கொண்டு நடக்க, கையுறைகள் வேறு இடைஞ்சலாக இருந்தன.

'நிலாவுல செல்போன் கிடையாது. காணாம போனா, கஜா கா தோஸ்த் கம்பெனின்னு சொல்லி, வழி கேளுங்க. நம்ப கம்பெனி இங்க ரொம்ப பிரபலம்' என்றான் கஜா.

ஜா இவர்களே நடத்திக்கொண்டு, ஒரு பாட்டிக்கு அருகே சென்றான்.

'பாட்டி. வடை சுட்டுக் கொடுங்க. எல்லாரும் புதுசா கல்யாணம் ஆனவங்க' என்றான் கஜா.

'தம்பி. எனக்கு ட்யூட்டி டைம் முடிஞ்சு போச்சு. அடுத்த பாட்டி மேக்கப் போட்டுக்கிட்டு இருக்காங்க. அவங்க வடை சுட்டுக் கொடுப்பாங்க' என்றார் அந்தப் பாட்டி.

'சே. நம்ம நாட்டுல பாட்டி வடை சுடறதுன்னு கதைய சொல்லி, சொல்லி, நிலாவுக்கு வர்றவங்க எல்லாரும் வடை வேணுங்கறாங்க. அடுத்த பாட்டி  வந்த உடனே வடை சாப்பிடலாம்' என்றான் கஜா

அடுத்த பாட்டி வந்து, சுடச்சுட வடை பண்ணித் தர, தம்பதிகள் சாப்பிட முயற்சிக்க, கஜா கத்தினான்.

'ஆக்சிஜன் மாஸ்க் கழட்டக் கூடாது.  அங்க இருக்கற ஆக்ஸிஜன் ரூமுக்கு போய் வடைய சாப்பிடுங்க' என்றான்.

க்ஸிஜன் ரூமுல, ஒரு பெரிய கூட்டம் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. தரையெல்லாம், எண்ணை சிந்தியிருந்தது. தம்பதிகள் ஜாக்கிரதையாக நடந்து, வடையை சாப்பிட்டு, கையை அலம்ப தண்ணிரைத் தேடினர்.

'நிலாவுல தண்ணி கிடையாது.  அவசரத்துக்கு மட்டும் உதவ நான் பூமிலேர்ந்து, ஒரு அண்டா தண்ணி கொண்டு வந்துருக்கேன். நம்ப கம்பெனி டைம் மிஷின் ல இருக்கு. இப்போதைக்கு டிஷ்யு பேப்பரை எடுத்துக்கோங்க' என்றான் கஜா

'எங்கயாவது பீச்சுக்கு போக முடியுமா' என்றாள் மேகலா.

'தண்ணியே கிடையாது. எங்க பீச்சுக்கு போகறது' என்றான் கஜா.

'சந்திராயன் இறங்கின இடத்துக்கு கூட்டிட்டு போங்க' என்றான் ஜோதி.

'அங்க பாருங்க. எதுத்தாப்ல, நம்ம சந்திராயன் முதன்முதலா இறங்கின இடம். அதுக்கப்பறம் நூத்துக்கணக்கான ரோவரை நாம அனுப்பியிருக்கோம். அங்க பாருங்க. பழைய ரோவர்லாம் நம்ம சர்தார்ஜி ரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்காரு' என்றான் கஜா.

அங்கு ஒரு சர்தார்ஜி நட்டு, போல்டுகளை ரோவருக்கு மாட்டிக்கொண்டிருந்தார்.

'ரொம்ப டயர்டா இருக்கு. கால் வலிக்குது.' என்றாள் மாலினி.

'இருங்க. நாயர் சூடா எல்லாருக்கும் 7 டீ போடுங்க' என்றான் கஜா.

லுங்கியுடன் கடைக்குள் இருந்த நாயர், உள்ளேயிருந்து கைக்காட்ட, தம்பதிகள் ஆக்ஸிஜன் கடைக்குள் சென்று டீ குடித்தனர்.

'ராத்திரி முடிஞ்சு பகல் வரப்போகுது. வெய்யில் பயங்கரமாக இருக்கும். சீக்கிரமா எல்லாரும் கஜா கம்பெனிக்கு வாங்க' என்றான் கஜா

ல்லாரும் ஜாக்கிரதையாக நடை போட்டு, டைம் மிஷின் கூடாரத்தில் ஏற, கஜா மறுபடி மந்திரங்களை ஜபிக்கும் எந்திரனான். கதவைச் சாத்தி பல பொத்தன்களை அமிழ்த்தினான். பல ஆட்டங்களைக் கொடுத்தப் பின்னர், கால இயந்திரம் அமைதியானது. கஜா கதவைத் திறந்தபோது, வெளியில் சூரியன் விடியும் நேரமாக இருந்தது.

'எல்லாரும் ஸ்பேஸ் சூட்டை கழட்டுங்க. கஜாவுக்கு ரகசியம் முக்கியம்' என்றான் கஜா.

 னமாலியும் மாலினியும் வீடு திரும்பினர்.

நிலாவிற்கு அழைத்துச் சென்றதற்காக பஞ்சு மாமாவிற்கு நன்றியை வாட்ஸ் அப்பில் பகிர்ந்து, கூடவே நிலாவில் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துக்கொண்டான் வனமாலி.

'டார்லிங்! எங்காவது ஹனிமூன் கூட்டிட்டு போங்க.  நிலா வேண்டாம். பூமியிலேயே.' என்றாள் மாலினி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com