கலைஞர் கருணாநிதி குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசுவின் நினைவலைகள்! | கலைஞர் 100

கலைஞர் கருணாநிதி குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசுவின் நினைவலைகள்! | கலைஞர் 100

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் மாண்புமிகு திரு.தங்கம்.தென்னரசு (வயது 57) புள்ளியியல், தொல்லியல் துறைகளும் கூட இவர் பொறுப்பில்தான் உள்ளன.

2006 முதல் 2011 வரையில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஓர் பொறியியல் பட்டதாரி. இவர் ஐந்து முறை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கல்கி ஆன்லைனில் "கலைஞர் 100" பகுதிக்காக அமைச்சர் தங்கம். தென்னரசுவை பேட்டி காண்பதற்காக சென்னை கோட்டையில் உள்ள அமைச்சரது அலுவலகத்தில் நமது நிருபர் எஸ். சந்திர மௌலிக்குப் பேட்டி அளித்தார்.

தான் ஒரு சிறுவனாக கலைஞரிடம் அறிமுகப்படுத்தப்பட்ட தருணம் முதல் அவரது இருதி நாட்கள் வரையிலான கலைஞருடனான தனது நெடிய பயணத்தை நெகிழ்ச்சியோடு இந்தப் பேட்டியில் நினைவு கூர்ந்தார் அமைச்சர். மேலும், பேட்டிக்காக, தனது தலைவருடனான அரிய புகைப்படங்களையும் கல்கியுடன் பகிர்ந்துகொண்டார்.

பேட்டியின் முக்கியமான ஒரு பகுதி இதோ:

“கலைஞரை நீங்கள் முதல் முதலாக எப்போது சந்தித்தீர்கள்?”

“நான் பிறந்தபோதே எங்கள் அப்பா தங்கப்பாண்டியன், தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். எனவே, ரொம்ப சிறு வயதிலேயே கழகத்த்தின் மூத்த தலைவர்கள் எங்கள் வீட்டுக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன். நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கோண்டிஉர்ந்தபோது, மதுரையில் நடந்த ஒரு மகளிர் மாநாட்டுக்காக முதலமைச்சர் கலைஞர் வந்திருந்தார். என் அம்மா, என்னை அந்த மாநாட்டுக்கு அழைத்துக் கொண்டு போயிருந்தார். அப்போது மேடையில் முதல்வர் கலைஞரை முதல் முறையாகப் பார்த்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

அதன் பின் நான் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த சமயம், ஒரு முறை விருதுநகரில் மாரியம்மன் கோவில் திடலில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு முதல்வர் கலைஞர் வந்திருந்தார். மேடையில் அவருடன் எனது பெரியப்பா தென்னரசுவும் அமர்ந்திருந்தார். கூட்டத்துக்குச்சென்றிருந்த சிறுவனான என்னை, அவர் அழைத்து மேடையில் தன் பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டார். அப்போது தலைவரிடம், “ இவன் தங்கப்பாண்டியன் பையன்! இவன் என்ன சொல்கிறான் என கேளுங்களேன்!” என்று சொல்ல, தலைவர், “ என்ன! சொல்லு!” என்று கேட்க, நான், “இந்தக் கட்சியில எல்லாரும் ஜெயிலுக்குப் போயிருக்காங்க! எங்க அப்பா

மட்டும் ஏன் ஜெயிலுக்குப் போகலை?” என்று கேட்டது எனக்கு இன்னமும் மிகப் பசுமையாக நினைவில் இருக்கிறது. இப்படி நான் கேட்டதும், தலைவர் உடனே சிரித்துவிட்டார். நான் கேட்ட நேரமோ, என்னமோ, அடுத்த ஓராண்டில், மிசா கைதியாக, மதுரை சிறைக்குச் சென்றார் எங்கள் அப்பா!

“பன்முக ஆளுமை கொண்ட கலைஞரின் எந்த முகம் உங்களை மிகவும் கவர்ந்தது?”

“கலைஞர் ஒரு வெல்லப் பிள்ளையார். வெல்லத்தில் செய்த பிள்ளையாரின் எந்தப் பகுதி மிகவும் இனிப்பாக இருக்கும் என்று கேட்டால் எப்படிச் சொல்ல முடியும்? அவரது ஆளுமை ஒவ்வொன்றையும் பற்றி மணிக்கணக்கில் பேசலாம்!”

“இப்போது, அவரை, எந்த விஷயத்தில் மிஸ் பண்ணுவதாக நீங்கள் நினைக்கிறார்கள்?

“ஆவருக்கும் எனக்கும் இடையிலான வயது இடைவெளி மிக அதிகம் என்றாலும், அந்த வித்தியாசம் பார்க்காமல் அவர் பேசுவார். அவருடனான உரையாடல் ஒரு சுகமான அரிய அனுபவம். ஒவ்வொரு முரையும் அவருடன் உரையாடிவிட்டுப் புறப்படும்போது, அவர் மீதான பிரமிப்பு பலமடங்கு ஆகும்! அந்த உரையாடல்களை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்”

“அவருடைய நிர்வாகத்திறன், ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களிலும் யோசித்துப் பார்த்து, சட்டென்று முடிவெடுக்கும் திறன் அபாரமானது. அதனை ஓர் அமைச்சர் என்ற முறையில் அருகிருந்து நேரில் கண்டிருப்பீர்களே! அந்த அனுபவத்தை நினைவு கூற முடியுமா?

“அவருடைய நிர்வாகத்திறன், சமயோஜித அறிவு, முடிவெடுக்கும் திறன் எல்லாம் அற்புதமானவை. ஓர் அமைச்சராக அவருக்கு அருகில் இருந்து பார்த்து நான் பிரமித்திருக்கிறேன். ஊரக வளர்ச்சித் துறையின் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சுமார் 12000 ஊராட்சிகளில் நூல்நிலையம் துவக்க வேண்டும் என்பது திட்டம். ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள நூஅலக ஆணைக் குழுவின் கீழ் ஏற்கனவே பல ஊர்களில் கிளை நூலகங்கள் இயங்கி வருகின்றன. இது குறித்த விவாதத்தின்போது ஒரே ஊரில் இரண்டு நூல்நிலையங்கள் தேவையா?’ கூடுதல் நிதிசுமையும் ஏற்படுமே? என்ற கேள்வி அதிகாரிகள் மத்தியில் எழுந்தது. அவர்களது கேல்விகளை அமைதியுடன் கேட்டுக் கொண்ட முதல்வர் கலைஞர் “ஒரு கிராமத்துல இரண்டு கோவில்கள் இருக்கும்போது, இரண்டு நூல் நிலையம் இருந்தால் என்ன தப்பு?” என்று கேட்டார். அதிகாரிகள் வாயடைத்துப் போனார்கள். அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

“எத்தகைய டென்ஷனான அரசியல் சூழ்நிலையிலும் கூட கலைஞருடன் எப்போதும் சேர்ந்தே இருப்பது அவரது நகைச்சுவை உணர்வு. அது அவருக்கு எப்படி சாத்தியமானது?”

யாரும் எதிர்பாராத நிலையில் ஸ்பான்டேனியசாக வெளிப்படுவதுதான் கலைஞரது நகைச்சுவையின் சிறப்பு, சட்டமன்றம், அமைச்சரவை, அதிகாரிகளகூட்டம், பொதுக்கூட்டம், தனிப்பட்ட உரையாடல் என எங்கேயானாலும், அவரது நகைச்சுவை சட்டென்று மிகக் கூர்மையாக வெளிப்பட்டு, அங்கே சிரிப்பலைகளை ஏற்படுத்தும். அவரது நகைச்சுவை உணர்வை எடுத்துச் சொல்லும்படியாக ஏராளமான பதிவுகள் நமக்கு கிடைக்கின்றன. எனக்கே கூட அப்படிச் சில அனுபவங்கள் உண்டு. தமிழக புதிய சட்டமன்றத்துக்காகக் கட்டப்பட்ட வளாகத்தில் இப்போது ஓமந்தூரார் அரசு மருத்துவ மனை இயங்கி வருகிறது. அது கட்டப்பட்டபோது, அந்தப் பொறுப்பினைக் கலைஞர் என்னிடம் ஒப்படைத்திருந்தார். திறப்பு விழாவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் சூழ்நிலையில் கலைஞர் அதைப் பார்வையிட விரும்பினார்.

புதிய கட்டிடத்தில் வார்னிஷ் பூசப்பட்ட நிலையில் நிறைய ஈக்கள் காணப்பட்டன. முதல்வரது வருகைக்காக, ஆங்காங்கே மறைவாக ஈ பிடிக்கும் இயந்திரங்களை வைத்து, ஈக்களைப் பெருமளவு கட்டுப்படுத்திவிட்டோம். கலைஞர் சுற்றிப் பார்த்து முடித்தபோது அவரது முகத்தில் காணப்பட்ட திருப்தியைக் கண்டு, எனக்கு உள்ளூர பெரும் நிம்மதியாக இருந்தது. புறப்படும்போது, என்னை அருகில் அழைத்து “ தென்னரசு! புதிய சட்ட மன்ற வளாகத்தில் எம்.எல்.ஏ.க்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். எம்.எல்.ஈக்களும் கூட இருப்பார்கள் போலிருக்கிறதே!” என்று சொன்னபோது அவரது நுட்பமான பார்வையின் கூர்மையான நகைச்சுவை உணர்வும் ஒருசேர வெளிப்பட்டது.

  • திருவள்ளுவருக்காக சென்னையில் வள்ளுவர் கோட்டம் கட்டியவர் கலைஞர்; கன்யாகுமரியில் சிலை வைத்தவர் கலைஞர். அத்துடன் இல்லாமல், குறளோவியம் என்ற இலக்கிய விருந்து படைத்தவர் அவர் திருவள்ளுவர்பால் அவருக்கு அப்படி ஓர் ஈர்ப்பு இருந்ததன் காரணம் என்ன?

  • தேசிய அரசியலில் அவரது பங்களிப்பு இன்னும் பெரிய அளவில் இருந்திருக்கலாம் என நினைக்கிறீர்களா?

  • கலைஞரது முதுமைக் காலத்திலும் அவரது ஓயாத உழைப்பு பிரமிக்க வைக்கும் ஒரு விஷயம். அப்படி உழைக்க அவருக்கு உந்துதலாக இருந்தது எது?

  • அவரது இறுதி நாட்களில் ஆஸ்பத்திரியில் சென்று சந்தித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

இப்படிக் கலைஞர் குறித்த பல கேள்விகளுக்கும் அமைச்சர் தங்கம்.தென்னரசு அசத்தலான பதில்கள் அளித்தார்.

பேட்டியின் முழுமையான வீடியோவைக் காண:

பேட்டி : எஸ். சந்திர மௌலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com