கொலு வைக்க வாரீகளா!

கொலு வைக்க வாரீகளா!

ஓவியம்: பிரபு ராம்

"இந்த வருஷம் நீங்க ரிடையர் ஆகி வர்ற மொதல் நவராத்திரி!" என்றாள் சீதா சிரித்துக்கொண்டே.

"அட! ஆமாம்! வீட்டிலேயே இருக்கிறதுனால காலையில் பாயசம் சூடாகச் சாப்பிடலாம்.  சாயந்திரம் சுண்டல் நைவேத்யம் ஆன உடனேயே சாப்பிடலாம்" என்றார் கிருஷ்ணனும் சிரித்துக்கொண்டே.

"கொஞ்சம் அந்த ஏணியை எடுத்துக்கிட்டு வர்றீங்களா?"

மனதிற்குள் எச்சரிக்கை மணியடிக்க, "எதுக்குடீ?" என்றார் கிருஷ்ணன்.

"அட! இப்பத்தானே நவராத்திரியைப் பத்திப் பேசினோம்? கொலு வைக்க வேண்டாமா?  பொம்மையெல்லாம்  பரண்லதானே இருக்கு? நீங்கதானே வந்து இறக்கிக் கொடுக்கணும்!" என்றாள் சீதா நைச்சியமாக.

"ஏன்? உன் அருமைப் புள்ளையாண்டான் எங்கே போனான்?  அவர் இந்த வேலையெல்லாம் செய்ய மாட்டாரோ?" என்றார் கிருஷ்ணன் எரிச்சலோடு.

"ஒங்களை மாதிரி பொறுமையா காரியம் செய்யவெல்லாம் அவனுக்குத் தெரியாதே?" அவருக்கும் ஐஸ் வச்சு பிள்ளையையும் விட்டுக் கொடுக்காம பேசினாள் சீதா.

“சுத்த தொல்லை புடிச்ச வேலையா இருக்கும்போல இருக்கே!" சலித்துக்கொண்டே ஏணியில் ஏறினார் கிருஷ்ணன். பரணிலிருந்து கொலு பொம்மைகள் எடுத்துதானே ஆக வேண்டும்?  ரெண்டு நாட்களில் கொலு ஆரம்பம்.

"வருஷத்துக்கு ஒரே தடவைதானே? அப்புறம் எப்படி தொல்லை பிடிச்ச வேலையாகும்?" என்றாள் கீழே ஏணியைப் பிடித்துக்கொண்டு, நின்றுகொண்டிருந்த சீதா முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு.

"பார்த்து...பார்த்து...கோவத்துல ஏணியை எங்கேயாவது விட்டுடாதே.  கை கால் ஒடஞ்சி போச்சுன்னா,  அப்புறம் இந்த முறை பொம்மை கொலுவுக்கு பதிலாக புருஷனைத்தான்...".

'வாயில ஒரு நல்ல வார்த்தை வராதே' கிருஷ்ணனை மேற்கொண்டு பேச விடாமல் தடுத்த சீதா, "போன வருஷம் கொலு முடிஞ்சு திரும்ப பொம்மைகளை எடுத்து வெக்கறச்சே நல்லா உள்ளே தள்ளி வச்ச நெனைப்பு" என்றாள் அவர் பரண் முனையில் இருக்கும் சாமான்களில் தேடுவதைப் பார்த்து.

"இதுவா?" என்று ஒரு பிடியில்லாத சூட்கேஸை இழுத்து எடுத்தார்.

"டேய்!" என்று உள்பக்கம் பார்த்து குரல் கொடுத்தாள் சீதா.  "இங்க வந்து அப்பா எடுத்துக் கொடுக்கிற பையை வாங்குடா ஸ்ரீராம்!"

"போம்மா! உங்களுக்கெல்லாம் வேற வேலையேயில்லை. சண்டேயும் அதுவுமா.  காலங்கார்த்தால......எனக்கு ஃப்ரெண்ட்ஸ் காத்திண்டிருப்பாங்க.  ஷட்டில் ஆடப் போகணும்!"  என்றான் ஸ்ரீராம் சிணுங்கலாக.

அதற்குள் சீதாவே முக்கி முனகி அந்தப் பையை வாங்கிக்கொள்ள ஸ்ரீராம் ஏணியைப் பிடித்துக்கொண்டான்.  அது திரேதா யுகத்து ஏணி.  எப்போ யார் காலை வாரி விடும்னே சொல்லமுடியாது.  யாராவது பிடித்துக்கொள்வதாக உறுதிமொழி அளித்தால்தான் அதில் ஏறவே முடியும்.

"இதிலே பாதி பொம்மைங்கதான் இருக்கு.  இன்னொரு பை இருக்கும் பாருங்கோ.  கொஞ்சம் வர்ணம் போன பொம்மைங்களை வர்ணம் பூசணும்னு தனியா எடுத்து வச்சிருந்தேனே!"

"இது வேறயா? இந்தா! இதுவா பாரு!  என்ன இது? இவ்வளவு கனமா இருக்கு.  மண் பொம்மைங்கதானே?  ஸ்ரீராம்! நீ வாங்குடா!" கிருஷ்ணன் எடுத்துக் கொடுத்த பையைக் கீழே வைத்துப் பிரித்தபோது அதில் கார்த்திகை விளக்குகள் இருந்தன.

"எதுக்கு இவ்ளோ விளக்குகள் கனம் கனமா, இறக்கவே முடியாம, கொஞ்சமா வச்சிண்டா போறாதா?" கிருஷ்ணனுக்குக் கோபம் கொப்பளித்தது.

"கார்த்திகை தீபத்தன்னிக்கு ஏத்தறச்சே வீடே ஜகஜ்ஜோதியா இருக்குன்னு நீங்கதானே வீட்டுக்கு வந்த ஒங்க ஃப்ரெண்ட்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தீங்க? அவர் கூட ரொம்ப நேரம் உக்காந்து பேசி பொரி அப்பம் எல்லாம் தின்னாரே?  அப்புறம் அவர் வீட்டுக்கும் கட்டி கொடுக்கச் சொன்னீங்களே?  மறந்து போச்சா எல்லாம்?"

"சரி! சரி! நீ விளக்கேத்தினா ஜகஜ்ஜோதியா, லட்சுமி கடாட்சமா இல்லாம வேற எப்படியிருக்கும் சொல்லு!" என்று ஏணியை விட்டு இறங்காமல், பேச்சில் இறங்கி வந்தார் கிருஷ்ணன்.

"இப்போ எடுத்த பைக்குப் பக்கத்திலேயே இன்னொரு பை இருக்கும் பாருங்கோ.  இவ்வளவு கனமா இருக்காது"

ஒருவழியாக வர்ணம் போன பொம்மைகள் வைத்திருந்த பையை கண்டு பிடிச்சு எடுத்துக் கொடுத்தவுடன் கிருஷ்ணன் கீழே இறங்க முற்பட்டார்.

"அடாடா! அதுக்குள்ளே இறங்கறேளே!  பார்க் சாமான்கள், கோயில் சாமான்கள் எல்லாம் இன்னொரு சின்ன சூட்கேஸ்ல வச்சிருந்தேனே.  அது வரலியே?"

"எப்போ ரிடையர் ஆவேன்னு காத்திண்டிருந்தியா?  இன்னிக்கு நாள் முழுக்க என்னை ஏணியில நிக்க வச்சு வேடிக்கைப் பார்க்கிறதுன்னு தீர்மானம் பண்ணியாச்சாக்கும்!" கிருஷ்ணன் கோபமாக சீதா பக்கம் திரும்பினார்.

திடீரென்று ஏதோ நினைவுக்கு வர, "ஆமாம்! கருப்பு கலர்ல தனி நீள சைஸ்ல உங்கம்மா வீட்டு சீதனமா ஒரு  ட்ரங்க் பெட்டி வச்சிருப்பியே?  முன்னெல்லாம் அதுலதானே கொலு பொம்மைங்க மொத்தமா வச்சிருப்ப?  இப்போ அது என்ன ஆச்சு?" அவர் சொல்வது சட்டென்று புரியாமல் சீதா விழிக்க,

"அதாண்டீ.  எலிஸபெத் மஹாராணி இறந்தப்போ ஒரு பொட்டியில அவங்களை வச்சாங்களே, டீவியில கூட காட்டினாங்களே,  அசப்பில அந்த மாதிரி இருக்குமே?" என்றார் கிருஷ்ணன் நமுட்டு சிரிப்புடன்.

"அது சவப்பெட்டியில்ல?" என்றாள் சீதா குழப்பத்துடன்.

ஏணியைப் பிடித்துக்கொண்டிருந்த ஸ்ரீராமுக்கு சிரிப்புத் தாங்கவில்லை.  "அப்பா அதை தாம்மா சொல்றார்" என்றான்.

சீதாவுக்கு முகம் ஜிவு ஜிவு என்று சிவந்தது.

"எங்கப்பா என் கல்யாணத்துக்குக் கொடுத்த பெட்டி ஒங்களுக்கு எலிஸபெத் ராணியைப் போட்ட பெட்டி மாதிரி இருக்கோ?"

"நா அந்த அர்த்தத்தில சொல்லலே சீதா!  ரொம்ப வருஷத்துக்கு முன்னால இருந்த பழைய பொட்டியாச்சே.  நீ மறந்திட்டியோன்னு உனக்கு நினைவு படுத்தறதுக்காக அப்படி சொன்னேன்"  என்றபடி ஸ்ரீராமைப் பார்க்க, அவனும் அவரும்  மௌனமாக ஒரு சிரிப்பைப் பகிர்ந்துகொண்டார்கள்.

ஒரு வழியாக எல்லா சாமான்களும் இறக்கி கிருஷ்ணனும் ஏணியை விட்டு கீழே இறங்கினார்.

அப்பா கீழே இறங்கியதுமே ஏணியைப் பிடித்துக்கொண்டிருந்த ஸ்ரீராம் ஷட்டில் 'பேட்' டுடன் 'எஸ்கேப்' ஆகிவிட, சீதா எல்லா பொம்மைகளையும் ஹாலில் பரத்தி வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"இதுல எங்கம்மா நா மொதல்மொதல்ல கொலு வச்சப்போ வாங்கிக் கொடுத்த பிள்ளையார் பொம்மையில்லையே?" என்று கவலையுடன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டாள்.

"மொத மொதல்லன்னா 35 வருஷத்துக்கு முன்னால நடந்தது சொல்றியா?" என்றார் கிருஷ்ணன். அப்புறம் அவரே, "இதோ இருக்கே?" என்று வர்ணம் போன பொம்மைகள் குரூப்பிலிருந்து ஒரு பிள்ளையார் பொம்மையை எடுத்து நீட்டினார்.

"இது இல்லேங்க.  இது எங்க மாமியார் வாங்கிக் கொடுத்தது" என்றாள் சீதா.

"யூ மீன் எங்கம்மா?  அதனாலென்ன? ரெண்டு பேரும் அம்மாதானே?  யாராவது ஒருத்தர் வாங்கிக் கொடுத்தது கெடச்சா போறாதா?" சாமர்த்தியமா பேசி சீதாவை சமாதானப்படுத்தியதாக நினைத்துக்கொண்டு கிருஷ்ணன் அந்த இடத்தை விட்டு நகர முயற்சிக்க, சீதாவிடமிருந்து அடுத்த அபயக்குரல்.

"எங்கே போறீங்க? கொலுப்படி அந்த பெட் ரூம் பரண்ல இருக்கு.  ஏணிய அங்க எடுத்துக்கிட்டு வாங்க.  அதை இறக்கி பொருத்திக் கொடுத்திட்டீங்கன்னா வேலை ஆச்சு!"

"அதெல்லாம் முடியாது. ரிடையர் ஆகிட்டேங்கிறதுக்காக நீ சொல்றபடியெல்லாம் ஆட முடியாது. ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் ஏணியில ஏறுவேன்" என்றார் கிருஷ்ணன் கோபத்துடன்.

"பாதகமில்லை. அதை நாளைக்கு எடுத்துக்கலாம்.  இப்போ நம்ப மெடிகல் ஷாப் பக்கத்துல ஒரு சின்னக் கடை இருக்குமே?  ஃபோட்டோக்கெல்லாம் கூட  ஃப்ரேம் போட்டுத் தருவானே ஒரு பையன், அவன் வர்ணம் போன பொம்மையெல்லாம் கொண்டாங்க.  வர்ணம் பூசி புதுசாட்டம் செஞ்சு கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கான்.  கையோட கொண்டுபோய் கொடுத்து நாளைக்கே வேணும்னு கண்டிப்பா சொல்லிட்டு வாங்க.  அப்பதான் நாளை மறுநாள் கொலு வைக்கும்போது எல்லா பொம்மைகளும் ரெடியா இருக்கும்." என்றாள் சீதா.

அவர் தன்னை 'உர்' ரென்று முறைப்பதைப் பார்த்தும்,  "இத்தனை நாள் நாந்தான் பண்டிகைன்னா கடை கண்ணிக்கு ஓடிக்கிட்டிருந்தேன். இனிமே நீங்கதான் ரிடயர் ஆகிட்டீங்களே, நீங்க அதையெல்லாம் பார்த்துப்பீங்களாம்.  நான் வீட்டுக்குள்ள இருக்கற வேலையைப் பார்த்துப்பேனாம்!" என்று சொல்லிக் கொண்டே பொம்மைகளை  வரிசையாக சுவரோரமாக எடுத்து வைத்தாள்.

கொலு ஆரம்பித்ததும் காலை சாப்பாட்டுடன்  தினமும் சூடாக ஒரு பாயசம் சாப்பிடலாம் என்பதை நினைத்துப் பார்த்து,  ஓரளவு மனதை சமாதானப்படுத்திக்கொண்டு, வர்ணம் பூச வேண்டிய பொம்மைகள் அடங்கிய பையுடன் பெருமூச்சு விட்டபடி கடைக்குக் கிளம்பினார் கிருஷ்ணன்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com