வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற 
ராஜ வாத்திய கலைஞர் 
செம்பனார்கோவில் ராஜண்ணா!

வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற ராஜ வாத்திய கலைஞர் செம்பனார்கோவில் ராஜண்ணா!

நேர்காணல்

காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 'செம்பனார்கோவில்' என்ற ஊர் பெயரைச் சொன்னாலே போதும் நாதஸ்வரத்தின் புகழ் கூறும். அவ்வூரில், இசைப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த ஆறாம் தலைமுறைக் கலைஞர் நாதஸ்வர வித்வான் செம்பனார்கோவில் எஸ் ஆர் ஜி ராஜண்ணா. சமீபத்தில் மும்பை சண்முகானந்த சபை இவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கௌரவித்தது. நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் 125 வது பிறந்த தினத்தையொட்டி, அவர் பெயரில், இந்த விருது வழங்கப்பட்டது. அவரை சந்தித்தபோது மிகுந்த பூரிப்போடு அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்களை 'கல்கி' இணையதள வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

அண்ணன் சம்பந்தம் உடன் ராஜண்ணா
அண்ணன் சம்பந்தம் உடன் ராஜண்ணா
Q

இளமைக்காலப் பயிற்சிகள்

A

ர்நாடக சங்கீதத்தை நீதி தவறாமல் கற்றுக் கொடுத்தார்கள் எங்கள் குருமார்கள். அதிகாலையிலேயே தொடங்கிவிடும் பயிற்சி. என்னுடைய தாய்மாமன்கள் வேணுகோபாலப் பிள்ளை, கோவிந்தசாமிப் பிள்ளை மற்றும் என்னுடைய தந்தை செம்பனார்கோவில் கோவிந்தசாமிப் பிள்ளை ஆகியோர்தான் எனக்கும், என்னைவிட 10 வயது மூத்தவரான என்னுடைய அண்ணன் சம்பந்தம் அவர்களுக்கும் குருமார்கள். முதலில் வாய்ப்பாட்டுப் பயிற்சி. அதனைத் தொடர்ந்து, நாதஸ்வரத்தில் குருமார்கள் வாசிப்பதை நாங்கள் அப்படியே வாசிக்க வேண்டும். சாஹித்தியம்தான் வாசிப்பார்கள். நாங்களாகவே ஸ்வரப்படுத்தி வாசிக்க வேண்டும். சரியாக வரும்வரை விடமாட்டார்கள். ஐந்து வருடங்கள் முறையான பயிற்சி. 'ஸ்வர சுத்தம்' மிக முக்கியம் என்பார்கள்.

குருமார்கள் கோவிந்தசாமிப் பிள்ளை மற்றும் தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை
குருமார்கள் கோவிந்தசாமிப் பிள்ளை மற்றும் தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை
Q

இசைப் பாரம்பரியமிக்க குடும்பம்

A

ங்கள் தாத்தா செம்பனார்கோவில் ராமசாமிப் பிள்ளை அவர்கள், அக்காலத்தில் 'தோசைக்கல் ரெக்கார்டு' வழங்கிய முதல் நாதஸ்வர வித்வான். அவருக்கு அப்போது 40 வயது. மைசூர் அரசவை வித்வானாக இருந்தவர். அவருடைய மகன்கள் செம்பனார்கோவில் சகோதரர்கள் எனப் போற்றப்பட்ட கோவிந்தசாமிப் பிள்ளை மற்றும் தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை. இருவரும் அன்னாளிலேயே வருமான வரி செலுத்தியவர்கள். தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் என 3 மடங்களுக்கும் ஆஸ்தான வித்வானாக இருந்தவர்கள். சகோதரர்கள் நாங்கள் இருவரும் ஆறாம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். நாங்களும் செம்பனார்கோவில் சகோதரர்கள் என்றே அழைக்கப்பட்டோம். வாசிக்காத கோவில்கள், சபாக்கள் இல்லை. நிறைய விருதுகள். ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் பயணித்திருக்கிறோம்.

Q

மறக்க முடியாத கச்சேரிகள்

A

குருவாயூர் க்ஷேத்திரத்தில் மூன்று முறை வாசித்திருக்கிறோம். கேரளாவில், திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி போன்ற பெரு நகரங்களில் கச்சேரிகளுக்கு வரும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மூச்சு விடும் சத்தம் கூடக் கேட்காத அளவிற்கு ஆனந்தமாக ரசிப்பார்கள். சென்னை கபாலீஸ்வரர் கோவில் உற்சவத்தில் இரவு பத்தரை மணிக்குத் தொடங்கி அதிகாலை வரை கச்சேரி தொடரும். விடிய விடிய கூட்டம் காத்திருந்து, இசையை ரசிக்கும்.  நான்கு மாடவீதிகளிலும் சுவாமி ஊர்வலத்தில் நாதஸ்வரம் இசைத்தது சுகமானதொரு அனுபவம்.

Q

மிகவும் ரசித்த இசைக் கலைஞர்கள்

A

நாங்கள் நாதஸ்வரம் வாசிக்கும் காலத்திலேயே காருக்குறிச்சி அருணாச்சலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், மதுரை என். சேதுராமன், பொன்னுசாமி, திருவிழிமிழலை கோவிந்தராஜன், தக்ஷிணாமூர்த்தி, நாச்சியார்கோவில் ராஜம், துரைக்கண்ணு, ஷேக் சின்ன மௌலானா, பந்தநல்லூர் தக்ஷிணாமூர்த்தி,  திருமெஞ்ஞானம் நடராஜசுந்தரம், திருவெண்காடு சுப்ரமணியப் பிள்ளை (எங்களுக்கு சீனியர்) என அனைவருமே மிகப் பிரபலமான, அற்புதமான கலைஞர்கள். எங்களுக்குள் எப்போதும் ஆரோக்கியமான போட்டி நிலவும்.

எம் எஸ் அம்மாவின் சங்கீதம் மனதிற்கு மிகவும் பிடிக்கும். செம்மங்குடி ஸ்ரீனிவாஸ ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், ஜிஎன்பி, எம்எல்வி, டிகேபட்டம்மாள் ஆகியோரின் சங்கீதத்தை ரசித்து மகிழ்வேன்.

Q

உடன் வாசித்த தவில் கலைஞர்கள்

A

ங்களுடன் 'செட்' ஆக இருந்து வாசித்தவர்கள், சமீபத்தில் மறைந்த திருப்பனந்தாள் மாரிமுத்து மற்றும் பந்தநல்லூர் டி ஆர் முத்தப்பன். 1980 ஆம் வருடம் எம்ஜி ராமச்சந்திரன் அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழக அரசு எங்களுக்கு வழங்கிய கௌரவம் 'கலைமாமணி'. எங்களுடன் அதே வருடத்தில் ஹரித்துவாரமங்கலம் ஏ கே பழனிவேல் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. எங்களுடன் இணைந்து பல கச்சேரிகளில் 'தனித்தவில்' இசைத்திருக்கிறார். திருவாளப்புத்தூர் கலியமூர்த்தி, திருச்சேறை முத்துக்குமாரசுவாமி, வடபாதிமங்கலம் தக்ஷிணாமூர்த்தி ஆகியோரும் தனித்தவில் இசைத்திருக்கிறார்கள்.

விருது வழங்கிய விழாவில்
விருது வழங்கிய விழாவில்
Q

பிடித்த ராகங்கள்,  கீர்த்தனைகள்

A

நுட்பங்கள் நிறைந்த தியாகராஜ ஸ்வாமி கிருதிகள் அதிகம் வாசிப்போம். கோபாலகிருஷ்ண பாரதி, பாபநாசம் சிவன் போன்றவர்கள் எழுதிய தமிழ் கீர்த்தனங்களும் வாசிப்போம். எல்லா ராகங்களும் மிகவும் பிடிக்கும் என்றாலும், எனக்கு மிகவும் பிடித்து வாசிக்கும் ராகங்கள் கானடா, பைரவி, கரஹரப்பிரியா போன்றவை.

Q

வாத்தியத்தினால் ஏற்பட்ட சவால்கள்

A

குளிர்ப் பிரதேசங்களில் நாதஸ்வரத்தை தொடர்ந்து பல மணி நேரம் வாசிக்கும் போது வாயில் ரத்தம் கூட வந்துவிடும்.

Q

பழைமை (Vs) புதுமை    

A

நாங்கள் பழமையில் ஊறிப் போனவர்கள். சிங்கப்பூர் ஸ்ரீனிவாச கோவில் ஆஸ்தான வித்வானாக நான்கு வருடங்கள் இருந்தேன். அப்போது, தவில், மிருதங்கம், மோர்சிங், புல்லாங்குழல், டோல்கி, தபலா எனப் பழக்கத்திற்கு இல்லாத வகையில் 'வாத்திய விருந்தா' வழங்க நேர்ந்தது. எனக்கு ஆரம்பத்தில் சற்று தயக்கம் இருந்தது. ஆனாலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது இந்நிகழ்ச்சி.

     

நாதஸ்வரக் கலைஞர்கள் கச்சேரி
நாதஸ்வரக் கலைஞர்கள் கச்சேரி
Q

சமீபத்தில் வழங்கப்பட்ட கெளரவம்

A

'நாதஸ்வர சக்கரவர்த்தி' எனப் போற்றப்பட்டவர் டி.என். ராஜரத்தினம் பிள்ளை அவர்கள். அவர் பெயரால் எனக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கியது எனக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய கௌரவம். இராஜ வாத்தியமான நாதஸ்வரத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்.

26 ஆம் தேதி அன்று மாலை, 60 நாதஸ்வரக் கலைஞர்கள் இணைந்து மேடையில் 2 மணி நேரம் கச்சேரி. 27 ஆம் தேதி காலை விருது வழங்கும் விழா. மேடையில் 9 மூத்த நாதஸ்வரக் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர். பொன்னாடை போர்த்தி, மிகப்பெரிய குத்து விளக்கு ஒன்று, தங்க முலாம் பூசிய நாதஸ்வரம், விருதுப் பத்திரம், சந்தன மாலை, இரண்டரை லட்சம் ரூபாய்க்கு காசோலை. அத்துடன் நான் மிகவும் நேசிக்கும் மரியாதைக்குரிய ஆசான், அவர்கள் பெயரால் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருது. மனதிற்கு மிகவும் நிறைவான தருணம்.

நாதஸ்வரம் பயிலும் 100 மாணவ மாணவியரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு, ரூபாய் ஒரு லட்சம் உதவித்தொகை வழங்கி இருக்கிறார்கள். மாணவர்கள் அனைவரும் என்னிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

சபைக்குச் செல்லும் வழி எங்கும் நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் கட் அவுட். நான் அமர்ந்து வாசிப்பது போல கட் அவுட். இதுவரை இந்த மாதிரி ஒரு விழா, அதுவும் நாதஸ்வர விழா நடத்தி நான் கண்டதில்லை. மிகவும் சிறப்பாக அமைந்தது.

Q

குடும்பத்தின் ஏழாம் தலைமுறை

A

ன்னுடைய சகோதரரின் மகன்கள் வசந்தகுமார் மற்றும் மோகன்தாஸ்  இருவரும் நாதஸ்வரம் இசைத்து வருகிறார்கள். என் மகன்கள் இசையில் நாட்டம் இருந்தாலும் இத்துறையில் ஈடுபடவில்லை. வாசித்தால் புகழ்பெற்று விளங்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமில்லை. என்னுடைய பேரன் கே. பார்த்தசாரதி, மிருதங்கம் இசைத்து வரும் கலைஞர்.

100 மாணவ மாணவியருக்கு உதவித் தொகை
100 மாணவ மாணவியருக்கு உதவித் தொகை
Q

தற்காலத் தலைமுறையினருக்கு அறிவுரை

A

பெரியவர்களின் வாசிப்பை நிறைய கேட்க வேண்டும். அவர்கள் வாசிப்பதைப் பார்த்து, அதிலிருந்து நிறைய நுணுக்கங்களைக் கற்க வேண்டும். வாசிப்பில் சாஹித்திய பாவம் நிறைந்திருக்க வேண்டும்.

பொன்னான தன் நினைவுகளை பரவசத்தோடு நம்முடன் பகிர்ந்துகொண்டு திருப்தியுடன் விடை அளித்தார் 91 வயது நிரம்பிய, ராஜ வாத்திய கலைஞர், வாழ்நாள் சாதனையாளர் ராஜண்ணா.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com