வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரம் தனது 384வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. வரலாற்று ஆய்வாளர் முத்தையா, பதிப்பாளர் வின்சென்ட் டி சோஸா உள்பட சென்னை வரலாறு குறித்து ஆர்வமிக்கவர்கள் பலர் இணைந்து 2004ல் முதன்முதலாக சென்னை நகரத்தின் பழமையைக் கொண்டாடவேண்டும், அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 'மெட்ராஸ் டே' நிகழ்ச்சியைத் தொடங்கினர்.
இதன் காரணமாக சென்னை நகரத்தின் பிறந்தநாள் என்று ஒரு நாளை குறிப்பிட வேண்டும் என்று எண்ணிய 'மெட்ராஸ் டே' குழுவினர், தற்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தின் ஒரு சிறுபகுதியை, அன்றைய விஜயநகர நாயக்கர்களின் வழிவந்த அய்யப்பன் நாயக்கர், வேங்கடப்பன் நாயக்கர் ஆகியோரிடமிருந்து 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி ஆங்கிலேயேர்களின் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் முறைப்படி வாங்கியதாகக் கூறப்படும் அந்நாளைச் சென்னை தினமாக அனுசரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
384வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னை
இந்த பின்னணியில் சென்னை மாநகரம் தன்னுடைய 384வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இந்நாளில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, சென்னை உயர் நீதிமன்றம், பாரிஸ் கார்னர், வடசென்னையில் உள்ள BINNY MILLS, ஜமாலியா, வண்ணாரப்பேட்டை, மைலாப்பூர் தெப்பக்குளம், திருவல்லிக்கேணி, கூவம் ஆற்றங்கரை, நேப்பியர் பாலம், கன்னிமாரா நூலகம், சென்னை பல்கலைக்கழகம் என பல பகுதிகளுக்கு பயணங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன இதுமட்டுமல்லாது சென்னை நகரத்தின் தொன்மை குறித்த கருத்தரங்கங்கள், புகைப்பட கண்காட்சிகள், மாணவர்களுக்கான போட்டிகள் என பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நகரத்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22ம் நாளில் மட்டும் நகரமே விழாக் கோலம் பூண்டு காணப்படும். அன்றைய தினத்தில் சென்னையின் பூர்வ குடிகளான மீனவர்கள், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முதல், வேலை நிமித்தமாகப் புலம்பெயர் தொழிலாளர்களாகச் சென்னைக்கு வந்தவர்கள் என இந்நகரத்தை தங்களின் தாய்வீடாக மாற்றிக்கொண்ட மக்கள் சாதி, மதம், இனம் மற்றும் மொழி கடந்து கொண்டாடும் மாபெரும் விழாவாக இன்றைக்கு சென்னை தினம் மாறியுள்ளது.
மனித சமூகத்தின் நாகரிக வளர்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மானுடவியலாளர்களும் தொல்லியல் அறிஞர்களும், மனித சமூக வளர்ச்சி நதிக்கரை நாகரிகத்தில் தொடங்கியது என்கிறார்கள். அப்படி இந்தியாவில் நதிகரை நாகரிகங்களாக குறிப்பிடப்படுவது வைகை நதிநாகரிகம், பொருநை நதிநாகரிகம் மற்றும் சிந்து சமவெளி நாகரிகங்கள் முக்கியமானதாகும். இந்த வரலாற்று பின்புலங்களுடன் பார்க்கும்போது நன்னீர் ஆறுகளும், கடலும் அமையப்பெற்ற தென்னிந்தியாவின் வாசல் என்றழைக்கப்படும் சென்னை நகரத்திற்கு நீண்டதொரு வரலாற்று பின்புலம் உள்ளது.
சென்னை என எப்படி பெயர் வந்தது!
சென்னை நகரத்தின் வரலாற்று சுவடுகளுக்குள் செல்வதற்கு முன்பு தற்போது சென்னை என்றழைக்கப்படும் இந்நகரத்திற்கான பெயர் வந்த காரணத்தை அறிந்துக்கொள்வது அவசியமாகும். 1639-ல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன் நாயக்கர், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கர் நினைவாக, கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் தமேரல்லா சென்னப்ப முத்திரிய நாயக்கரின் நிலங்கள் அவரின் பெயரில் முதிராசப்பட்டின என அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் 16ம் நூற்றாண்டில் சென்னை பகுதிக்கு வந்த போர்த்துகீசியர்கள் அவரிடமிருந்து நிலத்தை வாங்கி 1522ல் சாந்தோம் பகுதியில் துறைமுகத்தை நிறுவினார்கள். அப்போது அவர்கள் இந்நகரத்திற்கு முதிராப்பட்டினம் என பெயர் வைத்தார். பின்னாளில் முதிராசப்பட்டினம் எனும் இந்த பெயர் காலப்போக்கில் மருவி மாதராசபட்டினம் என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் 1688ல் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் மதராஸ் நகரை முதல் நகரசபையாக அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை மதராஸ் பெற்றது. ராபர்ட் கிளைவ் தனது ராணுவத் தளமாக மதராஸைத் தேர்ந்தெடுத்தபோது பிரிட்டிஷ் அரசின் இந்தியக் காலனி பகுதியில் இருந்த பம்பாய் மாகாணம், கொல்கத்தா மாகாணம், பர்மா மாகாணம் மற்றும் மதராஸ் மாகாணம் என நான்கு மாகாணங்களில் மதராஸ் மாகாணம் முக்கியமானதொரு மாகாணமாக இருந்தது.
1746ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் மதராஸ் மாகாணத்தையும் பிரெஞ்சு அரசு கைப்பற்றியது. மீண்டும் 1749ல் மதராஸை ஆங்கிலேயர் கைப்பற்றினர். அதனை அடுத்து திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் சென்னைப் பட்டினத்துடன் இணைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முக்கிய நகரங்கள் ரயில் மூலம் மதராஸ் மாகாணத்தில் இருந்த சென்னை பட்டினத்துடன் இணைக்கப்பட்டது. இப்படியாக ஐரோப்பியர்களின் வருகையால் பொருளாதாரத் தலைமைப் பீடமாக வளர்ந்தது மதராஸ்.
சென்னைக்கு தலைநகராக இருந்த காஞ்சி!
ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே இன்றைய சென்னை மாநகரத்திற்கு பல்லாண்டு கால வரலாற்றை கொண்ட தனிப்பெருமை உண்டு. தொண்டை மண்டல மாகாணத்தில் கடலூர் பெண்ணாறு நதிக்கும், நெல்லூர் பெண்ணாறு நதிக்குமிடையில் அமைந்துள்ளது சென்னை. இன்றைக்கு தமிழ்நாட்டின் தலைநகராக உள்ள சென்னையின் முற்கால தலைநகராக காஞ்சிபுரம் மாவட்டம் இருந்துள்ளது.
தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்ட சென்னையை கிமு 2வது நுாற்றாண்டில் காஞ்சிபுர சோழ வம்சத்தை சேர்ந்த தொண்டைமான் இளந்திரையன் ஆட்சி செய்துவந்துள்ளார். மேலும், இப்பகுதியானது குரும்பர் இன மக்களின் பூர்வீக வசிப்பிடத்தை உள்ளடக்கியது என தமிழக அரசின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னர் இளந்திரையனுக்குப் பிறகு தொண்டை மண்டல பகுதியானது சோழ இளவரசன் இளங்கிள்ளியின் வசமானதாக நம்பப்படுகிறது. இதற்கு பின்னர் வடக்கு பகுதியிலிருந்து ஊடுருவிய ஆந்திர சாதவாகன இனத்தின் இரண்டாம் புளூமாலி ஆதிக்கத்தால் தொண்டை மண்டல சோழ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
பல்லவர்கள் ஆட்சிக்காலம்
இவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை கண்காணிப்பதற்கு தலைமை பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செய்த பப்பசுவாமி என்பவர் இப்பகுதியை ஆண்ட முதல் பல்லவர் எனவும், இவர் காஞ்சிபுரம் எல்லையைக் கொண்ட சாதவாகனர்களின் தலைமைப் பிரதிநிதி எனவும் கருதப்படுகிறார்.
சாதவாகனர்களின் கீழ் இயங்கிய பல்லவ பிரதிநிதிகள், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தன்னிச்சையான அதிகாரம் படைத்த ஆட்சியாளர்களாக மாறினர். மூன்றாவது நுற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 9ம் நுற்றாண்டின் இறுதிவரை பல்லவர்கள் இப்பகுதியின்மீது ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இதன் இடைப்பட்ட காலத்தில் சிறிது காலம் தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட களப்பிரர்கள் ஆதிக்கமும் இருந்தது.
சோழர், பாண்டியன் மற்றும் சுல்தான்களின் ஆட்சிக்காலம்!
மீண்டும் பல்லவர்கள், முதலாம் ஆதித்திய சோழனின் தலைமையிலான சோழ அரசர்களால் தோற்கடிக்கப்பட்டு கிமு 879 ஆம் ஆண்டில் சோழர்களின் ஆதிக்கத்தின்கீழ் மீண்டும் சென்னையை உள்ளடக்கிய தொண்டை மண்டலம் கொண்டுவரப்பட்டது. பின்னர் கிமு 1264ம் ஆண்டில் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் தொண்டை மண்டலத்தில் சோழர்களின் அதிகாரத்திற்கு முடிவு கட்டியதாக கூறப்படுகிறது. பாண்டியர்களின் அரை நுாற்றாண்டு ஆட்சிக்கு பின்னர் டெல்லி சுல்தானின் ஆட்சியின் நீட்சியாக பாமினி அரசின் கில்ஜி வம்சத்தில் வந்த அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியின் கீழ் இப்பகுதி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
விஜயநகர மன்னர்களும் நாயக்கர்களும்
சோழர்கள், பல்லவர்கள், களப்பிரர்கள், டெல்லி சுல்தான்கள் மற்றும் பாண்டியர்கள் என பல அரசர்களின் ஆட்சி செய்து வந்த சென்னையை உள்ளடக்கிய தொண்டை மண்டலம், 14ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னரின் மகன்களான இரண்டாம் குமார கம்பண்ணா மற்றும் முதலாம் புக்கர் ஆகியோர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டது. விஜயநகர மன்னர்களர்களால் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளை சுதந்திரமாக ஆள்வதற்கு நாயக் என்றழைக்கப்படும் தலைமைப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.
அப்போதைய சென்னை நகரத்தின் பொறுப்பாளராக இருந்த மூன்றாம் வேங்கடா என்பவரின் தலைமையின்கீழ் இயங்கிய தமர்லா வேங்கடாபதி நாயக் ஒரு செல்வாக்குமிக்கத் தலைவராக இருந்தார். தொடர்ந்து நாயக்கர்களின் வசம் இருந்த இப்பகுதிக்குள் 16ம் நூற்றாண்டில் நுழைந்தனர் ஆங்கிலேயேர்கள். அப்போது சென்னையில் வணிகம் செய்ய கிழக்கிந்தியக் கம்பெனி விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் பிரான்சிஸ் டே.
சென்னைப்பட்டினமும் மதராசபட்டினமும்
இதன் பின் விஜயநகரப் பேரரசரின் ஒப்புதல் பெற்று கூவம் ஆறு, எழும்பூர் நதிகள் சங்கமிக்கும் நிலத்தின் மணல் பரப்பை ஆங்கிலேயர்களுக்கு தருவதாக ஒப்பந்தம் ஆனது. இவ்வாறு நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய பகுதியில் கிழக்கு இந்திய கம்பெனியைச் சேர்ந்தவர்கள் வணிக நோக்கங்களுக்காக புனித ஜார்ஜ் கோட்டையை 1639ம் ஆண்டில் கட்டினார்கள். பின்னர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றிய பகுதிகள் சென்னைப்பட்டினம் எனவும் வடக்கு பகுதி மதராசபட்டினமாகவும் அழைக்கப்பட்டு வந்தது.
ஆங்கிலேயேர்களின் குடியேற்றத்தின் அதிகாரப்பூர்வ மையமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நியமிக்கப்பட்ட போதிலும், ஆங்கிலேயர்கள் MADRAS PRESIDENCY என்ற பெயரையே ஒருங்கிணைந்த நகரத்தை அழைக்க பயன்படுத்தினர். இதன் காரணமாக தொண்டை மண்டலம் எனும் பெயர் கொண்ட பகுதி ஆங்கிலேயர்களால், மெட்ராஸ் எனும் பெயரிலேயே உலக வரைப்படத்தில் இடம்பெற்றது.