மகாத்மா காந்திஜி – முத்தான 10 தகவல்கள்!

அக்டோபர் 02 காந்தி ஜெயந்தி!
மகாத்மா காந்திஜி – முத்தான 10 தகவல்கள்!

காத்மா காந்தியை குறிப்பிடும்போது  மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்பர். இதில் காந்தி என்பது அவருடைய குடும்பப் பெயர். மோகன் தாஸ்தான் அவருடைய பெயர். கரம்சந் என்பது அவருடைய தந்தை பெயர்.

1969ஆம் ஆண்டு முதல், இந்திய ரூபாயில் காந்தியின் உருவப்படம் அச்சிடப்பட்டு வருகிறது. இது ஒரு பழைய புகைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது. 1946ம் ஆண்டில் இந்தியா மற்றும் பர்மாக்கான பிரிட்டிஷ் செயலாளர் பிரடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸுடன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம்.

காந்திஜிக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியும், இவர் ஒரு முறை இங்கிலாந்திற்காக இந்தியாவை எதிர்த்து விளையாடி இருக்கிறார். அப்போது அவர் எடுத்த ரன்கள் 27. அதில் அவர் 3 பவுண்டரிகளை அடித்துள்ளார்.

சுதேசியாகவே வாழ்ந்து மறைந்த காந்தியின் உருவம் இடம் பெற்ற இந்தியாவின் முதல் அஞ்சல் தலை இந்தியாவில் அச்சடிக்கப்படவில்லை.  சுவிட்சர்லாந்து நாட்டில்தான் அச்சடிக்கப்பட்டது. உலக நாடுகளில் காந்திஜிக்கு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் எண்ணிக்கை சுமார் 300. இது உலகில் எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத அரிய பெருமை.  1969ம் ஆண்டு மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தியா மட்டுமின்றி 141 உலக நாடுகள் அவரின் தபால் தலையை வெளியிட்டன.

காந்திஜிக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தை தேசிய கீத கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வழங்கியதாக சொல்வார்கள். ஆனால், அதற்கு 20 வருடங்களுக்கு முன்பே தென் ஆப்பிரிக்காவில் அவரை அப்படித்தான் அழைத்தார்களாம். காந்திஜியை ‘தேசப்பிதா’ என்று முதன்முதலாக அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

காந்திஜி தனது வாழ்நாளில் எப்போதும் விமானப்பயணம் மேற்கொண்டதில்லை. அவர் வெளிநாடுகளுக்கு சென்றதெல்லாம் கப்பல் போக்குவரத்துமூலம்தான். வாழ்நாள் முழுக்க ரயிலின் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார் காந்திஜி. அவர் மறைந்தபோது, முழுவதும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளால் ஆன சிறப்பு ரயில் ஒன்றில் அவருடைய அஸ்தியை கொண்டு சென்று கரைத்தனர்.

தமிழ்நாட்டில் 203 நாட்கள் காந்திஜி இருந்துள்ளார். அதில் 13 நாட்கள் திருச்சியில் இருந்துள்ளார். 1927ம் ஆண்டு செப்டம்பர் 17 ந்தேதி திருச்சியில் தன்னுடைய பெயரில் அமைந்த காந்தி மார்கெட்க்கு மகாத்மா காந்திஜியே அடிக்கல் நாட்டினார்.

காந்திஜி ஒரு நடைப் பிரியர். மகாத்மா காந்திஜி தன் வாழ்வில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 18 கி.மீ. தூரம் பயணம் செய்திருக்கிறார். இது கிட்டத்தட்ட இந்த உலகத்தை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம். பள்ளி காலத்திலிருந்தே அவருக்கு நீண்ட தூரம் நடப்பது பிடிக்கும். லண்டனில் அவர் சட்டம் படித்தபோதுகூட வீட்டிலிருந்து கல்லூரிக்கு நடந்தே செல்வார். இப்படி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடந்ததால்தான் 1930ல் உப்பு சட்டத்தை எதிர்த்து தண்டி யாத்திரையை மேற்கொண்டபோது, 78 பேருடன் 24 நாட்களில் 241 மைல்களை  தன் 62 வயதில் நடந்தே கடந்தார்.

காந்திஜிக்கு தாய்மொழிப்பற்று அதிகம். அதனால்தான் தன் சுயசரிதையான ‘சத்திய சோதனை’யை தனது தாய்மொழியான குஜராத்தி மொழியில் எழுதினார். அவருடைய செயலாளர் மகாதேவ் தேசாய் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ந்தார். ‘சத்திய சோதனை’ 1920ம் ஆண்டு வரை அவர் வாழ்வில் நடந்தவைகளை கொண்டது. அதன் பிறகு அவரது பொதுவாழ்க்கை திறந்த புத்தகம் என்பதால். எதையும் அவர் எழுதவில்லை. ‘சத்திய சோதனை’ 1927ம் ஆண்டு வெளிவந்து உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. அந்த நூல் கடந்த நூற்றாண்டின் முக்கியமான 100 புத்தகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 

காந்திஜிக்கு சினிமாவில் விருப்பம் இல்லை. சினிமா மூலம் தன்னுடைய கருத்துகளை பாமர மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்று அவர் நம்பவில்லை. அதனால் தன்னுடைய கருத்துகளை மக்களுக்கு சொல்ல வானொலியை மட்டுமே பயன்படுத்தினார். இதனால்தானோ என்னவோ காந்திஜியின் இறுதி ஊர்வலத்தை அகில இந்திய வானொலி தொடர்ந்து 7 மணி நேரம் வர்ணனை செய்தது.

தற்போது காந்திஜியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி பொது விடுமுறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் தனது பிறந்த நாளுக்கு விடுமுறை கூடாது என்று 1938ல் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் எழுதியவர் காந்திஜி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com