மக்கள் திலகமும் மகாபெரியவரும்!

மக்கள் திலகமும் மகாபெரியவரும்!

புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் எனும் பல புகழ்ப் பெயர்களுக்குச் சொந்தக்காரர் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். இவரது 35ஆவது நினைவு தினம் 24.12.2022 அன்று கடைபிடிக்கப்பட உள்ளது. அவரது பெருமைகளை நினைவுகூரும் விதமாக, சென்னை பெசன்ட் நகரில் அமைந்த அறுபடை வீடு முருகன் கோயில் உருவான விதத்தைக் காண்போம்.

காஞ்சி சங்கர மடத்தின் முன்பு அந்த அம்பாசிடர் கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர் அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஒரு முதல்வர் ஒரு இடத்துக்கு வருகிறார் என்றால், அனைவருக்கும் வியப்பு ஏற்படுவது இயல்புதானே. அப்படித்தான் அங்கும் அந்தப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. என்ன செய்வது என்று தெரியாமல் மடத்தில் இருந்தவர்கள் அனைவரும் அங்குமிங்கும் ஓடி அலைபாய்ந்து கொண்டிருந்தனர். காரணம், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி மகாபெரியவர் அன்று அங்கு இல்லை.

ஒரு மாநிலத்தின் முதல்வர் வருகிறார் என்றால் அவருக்குப் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்க வேண்டும் அல்லவா? என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த மடத்தின் சிப்பந்திகளைக் கண்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., “ஏன், எதற்காக இந்தப் பரபரப்பு?” என்று கேட்கிறார். தயங்கித் தயங்கி அவர்கள் எம்.ஜி.ஆரிடம், “மகாபெரியவர் தற்போது மடத்தில் இல்லை… சற்றுத் தொலைவில் உள்ள ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்” என்று கூறுகின்றனர்.

அதைக் கேட்ட மக்கள் திலகம், “சரி… அதைக் கூற ஏன் இத்தனை தயக்கம்? நானே அங்கு போய் அவரை தரிசித்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு, கொஞ்சம் கூட மாற்றமில்லாத அந்த புன்சிரிப்போடு மீண்டும் காரில் ஏறி அமர்ந்துகொள்ள, கார் அவர்கள் சொன்ன அந்த குடிலை நோக்கிப் புறப்பட்டது.

காபெரியவர் தியானத்தில் இருந்த குடில், கார் செல்ல முடியாத ஒரு குறுகிய சந்தில் இருந்ததால், சற்றுத் தொலைவுக்கு முன்பே காரில் இருந்த இறங்கிக்கொண்ட அந்த பொன்மனச் செம்மல், எந்தவித பந்தாவும் இல்லாமல் நடந்தே அந்தக் குடிலை நோக்கிச் செல்கிறார்.

ஆள் அவரவம் கேட்டு கண் விழித்த மகாபெரியவர், முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களை வரவேற்று, “உன்னை உட்காரச் சொல்ல இங்கு ஒரு இருக்கை கூட கிடையாது” என்று கூறுகிறார். இந்த இடத்தில் அனைவரும் ஒரு விஷயத்தை அறிய வேண்டியது அவசியம். தனது மனதுக்கு மிகவும் பிடித்த ஒருசிலரைத்தான் மகாபெரியவர் ஒருமையில் அழைப்பதும் வழக்கம். அந்த ஒருசிலரில் எம்.ஜி.ஆரும் ஒருவர்!

அதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., “அதனால் என்ன… நாட்டுக்கு நான் முதல்வராக இருந்தாலும், இங்கு இந்த மடத்துக்கு நீங்கள்தானே முதல்வர்” என்று கூறியபடி, மகாபெரியவரின் முன்பு மண் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்கிறார் அந்த மக்கள் தலைவர்.

“சரி… என்ன விஷயத்துக்காக நீங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று அழைத்தீர்கள்” என்று எம்.ஜி.ஆர் அவர்கள் மகா பெரியவரிடம் கேட்கிறார்.

எம்.ஜி.ஆருக்கு முதலில் ஆசி வழங்கிய மகாபெரியவர், தமது உள்ளக்கிடக்கில் நீண்ட நாட்கள் கிடந்த ஆதங்கத்தை அவரிடம் வெளிப்படுத்துகிறார்!

"நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தணி… என்று ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியா போகவேண்டியிருக்கு! அதுக்கு தேக சிரமம், கால விரயம் ஆகறதோட, பணச் செலவும் ஆதிகம் ஆகிறது. அதனால, ஆறுபடை முருகன் கோயில்களையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணி தரிசிக்க வசதியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்” என்றார் மகாபெரியவர்.

“இவ்வளவுதானே, இந்த சிறிய விஷயத்துக்காகவா என்னை வரச் சொன்னீங்க? ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லியிருந்தா கூடப் போதுமே…” என்றார் அந்தப் பொன்மனச் செம்மல்.

உடனே மகாபெரியவர், “அந்தக் கோரிக்கை மட்டும் கிடையாது. உன்னையும் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை. நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா. அதனாலதான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து… நீ கிளம்பு" என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆசைகளை முற்றும் துறந்த ஞானி.

தைத் தொடர்ந்து சிறிது நாட்களில் உருவானதுதான் சென்னை, பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோயில்!

உடல் நலக்குறைவினால் எம்.ஜி.ஆர் அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, தனிப்பட்ட யாருக்காகவும் எதற்காகவும் பிரார்த்தனை செய்யும் வழக்கம் இல்லாத மகாபெரியவர், எம்.ஜி.ஆர். ஒருவருக்காக மட்டும் அவர் உடல் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்து வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது! யாருக்குக் வாய்க்கும் இந்த மகா பேறு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com