
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், உடனே அனைவரின் மனதிலும் தோன்றுவது அவருக்குச் சொந்தமான 4777 என்ற எண் கொண்ட, ராமர் நிறத்திலுள்ள அம்பாஸிடர் கார்தான். நீண்ட தொலைவுக்கு முன்பே அந்தக் கார் வருவது தென்பட்டு விட்டால் ரசிகர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்கும், வான வேடிக்கைகளுக்கும் குறைவிருக்காது. மக்கள் திலகத்தைப் போன்றே அந்தக் காரும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது என்றே கூற வேண்டும்.
பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். செல்கிறார் என்றால், பெரும்பாலும் தனியாக அந்தக் காரில் பயணிக்க மாட்டார். யாராவது ஒருவரை தன்னோடு அந்தக் காரில் அழைத்துக்கொண்டு செல்வதுதான் வழக்கம். எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு இது. அப்படி எம்.ஜி.ஆரோடு அந்த அம்பாஸிடர் காரில் பயணம் செய்த புலவர் புலமைப்பித்தன், அந்த அம்பாஸிடர் 4777 கார் குறித்து கூறியபோது, “எம்.ஜி.ஆரிடம் பிளைமவுத், ஜப்பான் தயாரிப்பான ஹயாத் போன்ற பல கார்கள் இருந்தன. ஆனால், எம்.ஜி.ஆர். மிகவும் விரும்பிப் பயணிப்பது இந்தக் காரில்தான். தமிழகத்தின் மிகப் பிரபலமான கார் நம்பர் அது. அவரது இனிஷியலைக் குறிப்பது போல் இருக்கும் அந்தக் காரின் முதல் ஆங்கில எழுத்தான ‘எம்’ என்பதைப் பலரும் மெட்ராஸ் என்றே நினைத்திருப்பார்கள். ஆனால், அதுதான் இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தை குறிப்பது அந்த, ‘எம்’ என்ற எழுத்து. சரத்பவார் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது எம்.ஜி.ஆருக்கென்றே அந்த எண்ணை வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான, பொருத்தமான எண் என்றல் அது 7 என்ற எண்ணைத்தான் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை சுருக்கமாக ஏழு என்ற எண்ணில் சொல்லிவிடலாம். எம்.ஜி.ஆர். பிறந்தது 1917. அவர் நாடகக் கம்பெனியில் சேர்ந்தது 1927. சினிமா துறைக்கு அவர் வந்தது 1937. பெரிய கதாநாயகனாக அவர் ஜொலிக்கத் தொடங்கிய வருடம் 1947. எம்.ஜி.ஆர் அவர்கள் அரசியல் பிரவேசம் செய்த ஆண்டு 1957. தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது 1967. தமிழ் நாட்டின் முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றது 1977. அதைத் தொடர்ந்து அவர் 1987 வரை தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பிலேயே இருந்து சிறப்பான ஆட்சி செய்தார் என்பது வரலாறு. எம்.ஜி.ஆர். கடைசி வரை பயன்படுத்திய அந்த 4777 அம்பாஸிடர் கார் எண்ணின் கூட்டுத் தொகையும் 7 என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆருக்கும் 7க்கும்தான் என்னே பொருத்தம்!