காவிரி ஆற்றுப் பாலத்தில் ஆடிப் பாடிய எங்கள் ஹீரோ!

காவிரி ஆற்றுப் பாலத்தில் ஆடிப் பாடிய எங்கள் ஹீரோ!

1971..ஆம் ஆண்டு ரிக்க்ஷாக்காரன் 

படம் வெளிவந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தது. அப்போது, நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஈரோட்டில்தான் குடும்பத்தோடு படம் பார்க்கச் சென்றோம். அடுத்த நாள் முழுதும் , பள்ளியில் படம் பார்த்தவர்கள் எல்லோரும் ‘அழகிய தமிழ் மகள்’ பாட்டு, மஞ்சுளாவின் வசீகரம் என படத்தைப் பற்றித்தான் பேச்சு..

படம் 100 நாட்களுக்கு மேலே ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு விழா எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விதமாக,  படம் ஓடிக்கொண்டு இருக்கும்  முத்துக்குமார் தியேட்டருக்கு எம்.ஜி.ஆர், மஞ்சுளா மற்றும் சிலர்  ஈரோடு வருவதற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

சென்னையில் இருந்து, சேலம் வழியாக ஈரோடு செல்கிறார்கள் என்று அறிந்ததும், ரசிகர்கள் எல்லோரும் சாலை முழுவதும் மணிக்கணக்கில் , எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்க்கும் ஆர்வத்தில்

கால் கடுக்க நின்று கொண்டு இருந்தனர். அப்போது என் 

பள்ளித்தோழி, அவளது அண்ணாவுடன் எங்கள் வீட்டிற்கு வாந்தாள். கூட்டம் மிக அதிகமாக இருப்பதால், தோழியை எங்கள் வீட்டில் விட்டுவிட்டு அவர் மட்டும் சென்றுவிட்டார்.

நானும், தோழியும்  வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது, ஒரு சில கார்கள் எங்கள் வீதியில் சென்றன. புதுப்புது கார்கள் செல்கிறதே என யோசிக்கும் போது, மெதுவாக வந்த பெரிய கார் ஒன்றில்  எம்.ஜி.ஆர். அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். எங்களையும் அறியாமல் ,"  ஏய். .எம்.ஜி ஆர்...பா"  என்று நாங்கள் கத்த, அவரும் எங்களைப் பார்த்து கை அசைத்தார். எங்களால் நம்பவே முடியவில்லை. மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனோம்.

படம் பிள்ளை
படம் பிள்ளை

சுமார் அரைமணி நேரம் கழித்து தோழியின் அண்ணன் வந்தார். நாங்கள் எங்களது மகிழ்ச்சியைக் கூறவே,  மெயின் ரோட்டில் ஏதோ வேலை நடப்பதால், குறுக்குவழியாக எங்கள் வீதியில் சென்ற விவரத்தைச் சொன்னதோடு, உங்களுக்கு அதிர்ஷ்டம் என்றும் கூறினார். 

மேலும், எங்கள் ஊர் பள்ளிபாளையத்திற்கும், ஈரோடுக்கும் நடுவில் காவேரி ஆறு ஓடும். அந்த பாலத்தின் அருகே ரசிகர்கள் கூட்டமாக நின்று கொண்டு , பாலத்தின் மேல் நடந்து கொண்டே," கடலோரம் வாங்கிய காற்று" என்ற ரிக்க்ஷாக்காரன் படப்பாடலை பாடும்படி அன்புக்கட்டளையிட,  தட்டாமல் அவரும் சில அடி தூரம் நடந்து கொண்டே பாடிக்காட்டிவிட்டு, பின் காரில் ஏறிச்  சென்றுவிட்டார் என அண்ணா விவரித்ததும் ஆச்சரியப்பட்டு போனோம் நாங்கள்.

இன்றளவும் ரசிகர்கள் மனதில் அவருக்கு நீங்கா இடம் இருப்பதற்கு காரணம், இதுபோன்ற அவரது அன்பான செயல்களே!  இப்போதும்   இந்தப் பாடலைக் கேட்டால் எனக்கு காவேரி ஆற்றுப் பாலம் தான் நினைவுக்கு வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com