எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர்.

நடிகைகளின் பாதுகாவலர் எம்.ஜி.ஆர்.!

நடிகை சச்சு நேர்காணல்

புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். இன்று (24.12.2022) அவரது 35வது நினைவு தினம். எம்.ஜி.ஆர். குறித்த நினைவலைகளை நமது கல்கி ஆன்லைன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி நடிகை சச்சுவிடம் கேட்டபோது…

 

எம்.ஜி.ஆர். உடனான உங்களது முதல் சந்திப்பு எங்கு நிகழ்ந்தது?

கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவில், ‘ராணி’ என்கிற படத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு சுமார் ஐந்து வயதிருக்கும். அதேசமயத்தில் அறிஞர் அண்ணாவின், ‘சொர்க்கவாசல்’ படத்திலும் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி. அந்தப் படத்தில் பத்மினி, அஞ்சலி தேவியும் கூட நடித்திருப்பார்கள். அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.காசிலிங்கம். அதே நேரத்தில் அந்த ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆர். அண்ணனும் ஜானகி அம்மாவும் இணைந்து, ‘நாம்’ என்ற ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் படப்பிடிப்பின்போது கலைஞரும் அங்கே இருந்தார். இந்தப் படத்தின் இயக்குநரும் ஏ.காசிலிங்கம்தான்.

‘சொர்க்கவாசல்’ படத்தின் கதை என்னை வைத்துத்தான் தொடங்கும். நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோதே மிகவும் துடிப்பாக இருப்பேன். அதனால் இயக்குநர் காசிலிங்கம் அவர்கள் எம்.ஜி.ஆர். அண்ணனிடம் என்னை அழைத்துச் சென்று, ‘அண்ணா அவர்களுக்கு இந்தக் குழந்தை மிகவும் பிடிக்கும். இதோட பெயர் சச்சு. ரொம்பவும் நன்றாக நடிக்கிறது’ என்று சொல்லி அறிமுகப்படுத்தினார். உடனே எம்.ஜி.ஆர். லேசாகச் சிரித்துவிட்டு, என்னைத் தூக்கி தனது மடியில் அமர்த்திக்கொண்டார். இப்படித்தான் எம்.ஜி.ஆர். அண்ணனோடு எனது முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

கலையரசி படத்தில் எம்.ஜி.ஆருடன்
கலையரசி படத்தில் எம்.ஜி.ஆருடன்

எம்.ஜி.ஆரோடு நீங்கள் நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம் எது?

கதாநாயகிகளின் குழந்தைப் பருவ பாத்திரத்திலேயே நான் அதிகம் நடித்து வந்ததால், அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு சுமார் பதினாலு வயதிருக்கும்போது, ‘கலையரசி’ படத்தில் புரட்சித் தலைவரின் தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல படங்களில் அவரோடு சேர்ந்து நடித்தேன். எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நான் கடைசியாக நடித்தது இயக்குநர் ஸ்ரீதரின், ‘மீனவ நண்பன்’ படத்தில்தான்.

உள்ளூர், வெளியூர் படப்பிடிப்புகளின்போது உடன் நடிக்கும் நடிகைகளுக்கு எம்.ஜி.ஆர். மிகுந்த பாதுகாப்பு தருவார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது பற்றி…

அந்தக் காலகட்டத்தில் இப்போது உள்ளதுபோல், ‘கேராவேன்’ வசதியெல்லாம் கிடையாது. உள்ளூர் படப்பிடிப்பு என்றால் நாங்கள் வீட்டிலேயே தயாராகி படப்பிடிப்புக்குச் சென்று விடுவோம். வெளியூர் படப்பிடிப்பு என்றால், டிராவலர்ஸ் பங்களா போன்றவற்றில் அறை கொடுத்து எங்களைத் தயாராகச் சொல்வார்கள். ஆனால், அதுவும் படப்பிடிப்பு தளத்துக்கு அருகில் இருக்காது. சில சமயத்தில் உடை மாற்றிக்கொண்டு வரச் சொல்வார்கள். அந்த மாதிரி சமயத்தில் நாங்கள் ரொம்ப தொலைவில் இருக்கும் அந்த பங்களாவுக்குச் சென்று வர முடியாது. ஆனால், படப்பிடிப்பு கிராமத்தில் நடைபெறுகிறது என்றால், எம்.ஜி.ஆர். அண்ணன் அங்கு உள்ள ஒரு வீட்டின் சொந்தக்காரரிடம் பேசி, நடிகைகள் அனைவரையும் அங்கு பாதுகாப்பாகத் தங்கிக்கொள்ளும்படியும், அந்த வீட்டைப் பயன்படுத்திக்கொள்ளும் படியும் ஏற்பாடு செய்துத் தருவார். கதாநாயகிகள் என்று மட்டுமில்லை, அந்தப் படத்தில் அவரோடு நடிக்கும் அம்மா, தங்கை என அனைத்துப் பாத்திர நடிகைகளுக்கும் பாதுகாப்பு தருவதில் அவர் மிகுந்த கவனமாக இருப்பார். ஆனால், அவரும் அவருடன் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் அங்கு ஏதாவது ஒரு மரத்தடியில்தான் அமர்ந்திருப்பார்கள். அந்த எளிமைதான் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது என்று சொல்லலாம். அதுமட்டுமின்றி, அவருக்கு அப்போதே பொதுமக்களை சந்திப்பதில் கொஞ்சம் கூட அச்சம் என்பதே கிடையாது.

நல்ல நேரம் படத்தில் எம்.ஜி.ஆருடன்
நல்ல நேரம் படத்தில் எம்.ஜி.ஆருடன்

எம்.ஜி.ஆர். - மறக்க முடியாத சம்பவம் ஒன்று கூறுங்களேன்…

‘மதுரை வீரன்’ படத்தின் நூறாவது நாள் விழா. ஏதாவது ஒரு தியேட்டரில் அந்த விழாவை வைக்கலாம் என்றால், எம்.ஜி.ஆர். போன்ற நடிகர்கள் விழாவுக்கு வருகை தருவதால் கூட்டத்தை சமாளிக்க முடியாது என்ற காரணத்தால் மதுரை தமுக்கம் மைதானத்தில் பெரிய மேடை போட்டு அந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார் கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார். ‘மதுரை வீரன்’ படத்தில் நடித்த அத்தனை நடிகர், நடிகைகளும் விழா மேடையில் தோன்றி மக்களைச் சந்தித்து நேரிடையாக நன்றி சொல்ல வேண்டும் என்பது அந்த விழாவின் ஏற்பாடு. நான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், நானும் அந்த விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். மிகப்பெரிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த மாதிரி ஒரு பெரிய விழா கூட்டத்தை இதுநாள் வரை நான் பார்க்கவில்லை. இன்று நினைத்தாலும் கனவு போல் உள்ளது.

விழாவுக்கு கார்களில் தொடர்ந்து நடிகர்களும், நடிகைகளும் வந்தவண்ணம் இருந்தனர். அந்தக் கூட்டத்தில் முதலில் எம்.ஜி.ஆர். கார் போனபோது, அருகில் புளிய மரத்தின் மீது அமர்ந்திருந்த நிறைய ரசிகர்கள் அப்படியே அவரது காருக்கு அருகில் குதித்துவிட்டனர். அதைப் பார்த்த போலீஸ்காரர்கள், உடனே அவர்களை அடிக்க லத்திகளை உயர்த்தினர். அப்போது எம்.ஜி.ஆர். போலீஸ்காரர்களின் கையை பிடித்துக்கொண்டு, ‘ரசிகர்கள் யாரையும் அடிக்கக் கூடாது. அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் பாதுகாப்புக்கு மட்டும் இருந்தால்போதும்’ என்று கூறினார்.

அதோடு, தன்னைத் தொடர்ந்து லலிதா, பத்மினி, ராகினி போன்ற முன்னணி நடிகைகளும் வருகை தருவதால், ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர்., ‘‘நடிகர்கள், நடிகைகள் எல்லோரும் மேடைக்குப் போய் அமரட்டும். அதுவரை நான் உங்களோடுதான் இருப்பேன். அவர்கள் போவதற்கு வழி விடுங்கள்’’ என்று கூறினார். அதைக் கேட்ட ரசிகர்கள் அத்தனை பேரும், அந்த வார்த்தைக்குக் கட்டுப்பட்டு உடனே நூறு அடி தொலைவுக்குப் பின்னால் போய் நின்றார்கள். இது எனக்கு மனதில் பதிந்த மறக்க முடியாத ஓர் அனுபவம். ஒரு பெண் தைரியமாகப் பொது நிகழ்ச்சிகளுக்குப் போக முடியும் என்றால் அது எம்.ஜி.ஆரோடு மட்டும்தான் முடியும்.

தை விட ஒரு நெகிழ்ச்சிகரமான சம்பவம் இதே நிகழ்ச்சியின்போது நடைபெற்றது. விழாவை முடித்துவிட்டு நாங்கள் வரும் வழியில் சிலர் நிறைய கழுதைகளை பொதி மூட்டைகளோடு சாலையில் நிற்க வைத்து வழியை மறித்துக் கொண்டு நின்றிருந்தார்கள். போலீஸ்காரர்கள் அவர்களைக் கலைந்து செல்லும்படி கூறியும் அவர்கள் கேட்கவில்லை. வண்டிகள் சாலையில் நிற்பதற்கான காரணத்தை அறிய எம்.ஜி.ஆரும் காரிலிருந்து இறங்கி, அவர்களிடம் சென்று காரணத்தைக் கேட்டபோது அவர்கள், ‘‘தலைவரே, உங்களை தமுக்கம் மைதானத்தில் பார்க்க முடியவில்லை. வாத்தியாரே, உங்கள் பேச்சை எங்களால் கேட்க முடியவில்ல’’ என்று கூறினார்கள்.

அதைக்கேட்ட எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு, ‘‘இங்கு நான் மட்டும் இல்லை, கலைவாணர், பாலையா போன்றவர்களும் கூட இருக்கிறார்கள். நீங்கள் அனைவரையும் இப்போதே, இங்கேயே பார்க்கலாம்’’ என்று சொல்லிவிட்டு, அனைவரின் கார்களிலும் உள்ள லைட்டை போடும்படி கூறினார். அதன் பிறகு அவர்கள் அனைவரும் எங்கள் அத்தனை பேரையும் பார்த்துவிட்டு விடைகொடுத்து அனுப்பினர். அந்த நிகழ்ச்சியை நிச்சயமாக என்னால் மறக்கவே முடியாது.

குமரிக்கோட்டம் படத்தில் எம்.ஜி.ஆருடன்
குமரிக்கோட்டம் படத்தில் எம்.ஜி.ஆருடன்

எம்.ஜி.ஆரோடு ஜோடி சேர்ந்து நீங்கள் ஏன் நடிக்கவே இல்லை?

நான் கதாநாயகியான பிறகு ஏவி.எம். நிறுவனத்தில் மட்டுமே நடிப்பதாக இரண்டு வருட ஒப்பந்தத்தில் இருந்ததால், அவர்கள் வேறு பட நிறுவனத்தில் நடிக்கக் கூடாது என்று என்னிடம் சொல்லிவிட்டார்கள். அது ஒரு காரணம்.

அது தவிர, அப்போது எனக்கு பதினைந்து வயதுதான் இருக்கும். ஒரு நாள் எம்.ஜி.ஆரைப் பார்த்து, அவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கேட்டபோது அவர், ‘‘நீ இன்னும் ரொம்பவும் சின்ன பெண்ணாகவே இருக்கிறாய். இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும். பிறகு பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். எனக்கு அதில் கொஞ்சம் வருத்தம் அவர் மீது. ஏனென்றால், அப்போது என்னுடைய குடும்ப சூழ்நிலை அப்படி இருந்தது. அவர் சொன்னதைக் கேட்டு அங்கிருந்து சற்று கோபமாக எழுந்து வந்து காரில் அமர்ந்து கொண்டேன். அதன் பிறகு எனது பாட்டி, ‘‘பெரியவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது இப்படி பாதியில் எழுந்து வரக்கூடாது’’ என்று கண்டித்தார்கள்.

அதன் பிறகு, ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற படங்களில் நகைச்சுவை வேடங்களில் நான் நடிக்கப் போய்விட்டேன். ‘நல்ல நேரம், குமரிக்கோட்டம்’ போன்ற படங்களில் அவரோடு சேர்ந்து நடிக்கும்போது, என்னை அழைத்த எம்.ஜி.ஆர். அண்ணன், ‘‘நீ ரொம்பவும் அவசரப்பட்டுவிட்டாய். காமெடி வேடங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு நீ எப்படி கதாநாயகியாய் நடிக்க முடியும்? ரசிகர்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? ஆனாலும், அதை நீ பிரமாதமாய் செய்கிறாய். வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் உன்னை கதாநாயகியாய் நடிக்க வைக்க முயற்சி செய்கிறேன். உனக்கு எனது பாராட்டுக்கள்’’ என்று கூறினார்.

எம்.ஜி.ஆர். – அவரோடு நடித்த டாப் 5 கதாநாயகிகள்…

எம்.ஜி.ஆரோடு நடித்த அத்தனை கதாநாயகிகளும் டாப்தான். குறிப்பாகப் பார்க்கப்போனால், ஆரம்ப காலத்தில் அவரோடு ஜோடி சேர்ந்த பத்மினி, பானுமதியைச் சொல்லாம். பிறகு நடித்த சரோஜாதேவி, ஜெயலலிதா மேடம், அதன் பிறகு லதாவைச் சொல்லலாம்.

உங்கள் வீட்டு விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிறப்பித்த அனுபவம் ஏதேனும் உண்டா?

எனது அக்கா மாடி லட்சுமி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால்தான் அரசியலுக்கே வந்தார். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றபோதுகூட, எனது அக்கா எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக அ.தி.மு.க.வில் சேர்ந்து பணியாற்றினார். அடுத்த அக்கா சினிமாவில் இல்லை. அவங்களோட கல்யாணத்துக்குத்தான் எம்.ஜி.ஆரை அழைத்தோம். அன்று அவர் ஒரு முக்கியமான படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் அந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை. ஆனால், அவரது மைத்துனர் மூலம் பெரிய பரிசு பொருள் ஒன்றைக் கொடுத்து, வாழ்த்துக்களையும் சொல்லி அனுப்பி இருந்தார். அதேபோல், எனது வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கும் அவரால் வர முடியவில்லை. அது ஒரு பெரிய குறையாகவே இன்னமும் எனக்கு இருக்கிறது.

அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர். திரைத்துறைக்கு ஆற்றிய பங்கு குறித்து…

திரைத்துறைக்கு அவர் நிறைய பணிகள் செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தார். இப்போது நடப்பதுபோல் வேலை நிறுத்தம், போராட்டம் போன்ற பிரச்னைகள் அவர் இருந்தபோது இல்லையே. மேலும், திரைத் துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்று ஒரு காலனியை அமைத்து, அவர்கள் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று யோசித்தார். அதுவும் அது கோடம்பாக்கத்தை ஒட்டியே இருக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தினரோடு பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அப்போதிருந்த யாரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதற்கிடையில் அவரது உடல் நிலையும் சரியில்லாமல் போனதால், அவரால் அதைச் செய்ய முடியாமலே போய்விட்டது. அவர் முதலமைச்சராக இருந்தபோதும் சரி, இல்லாமல் இருந்தபோதும் சரி சினிமா துறைக்கு நிறைய பங்காற்றி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com