எங்கே ஆயிரம் ரூபாய்?

எங்கே ஆயிரம் ரூபாய்?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய நண்பர் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான முக்தா சீனிவான். இனிய நண்பர்கள் என்பதால் அவர்கள் இருவரும் எப்போதும் சாதாரணமாகவே பேசிக்கொள்வார்கள். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் மிகவும் பிரபலமாகிக்கொண்டிருந்த காலகட்டம் அது. படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று எம்.ஜி.ஆர். அவர்களை கதாநாயகனாக வைத்து படம் ஒன்றைத் தயாரிக்க அவரிடம் ஒப்பந்தம் செய்தார்கள்.

மூத்த தயாரிப்பாளர், நல்ல நண்பர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். அவர்கள் முக்தா சீனிவாசனிடம் அந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார். அதைக் கேட்ட முக்தா சீனிவாசன், ‘‘இந்த படத் தயாரிப்பு நிறுவனம் அப்படி ஒன்றும் பெரிய படங்களை எடுக்கவில்லையே. அதுமட்டுமல்ல, இந்த நிறுவனம் அழகாக சாகசம் செய்யும் பெண்களைக் காட்டி கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களை கவிழ்த்துவிடுவதில் வல்லவர்கள். நீங்களோ இப்போதுதான் திரைத் துறையில் நன்றாக வளர்ந்து வருகிறீர்கள். மற்றவர்களைக் கவிழ்ப்பது போல் உங்களையும் அவர்கள் கவிழ்த்துவிடப் போகிறார்கள். அதனால் எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக யோசித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

அதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., “அப்படி யாரும் என்னை எளிதாகக் கவிழ்த்துவிட முடியாது. நானும் எளிதாக ஏமாறக் கூடியவனில்லை. பந்தயம் வேண்டுமானலும் கட்டுகிறேன். எவ்வளவு பந்தயம்?” என்று கேட்டார்.

முக்தா சீனிவாசன்தான் இயக்குநராயிற்றே… தயாரிப்பாளர் வேறு. உடனே, “ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டுகிறேன். உங்களுக்கு சம்மதமா?” என்று கேட்டார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். அந்தப் பட நிறுவனத்தில் நடித்து, அந்தப் படமும் நன்றாக ஓடி விட்டது. நாட்கள் பலவும் சென்று விட்டன.

இந்தச் சம்பவம் நடைபெற்று, பல வருடங்கள் கழித்து ஒரே மேடையில் எம்.ஜி.ஆரும் முக்தா சீனிவாசனும் சந்தித்துக்கொள்ளும்படியான ஒரு நிகழ்வு நடைபெற்றது. எம்.ஜி.ஆருக்கு முன்பு பேசிய முக்தா சீனிவாசன், “எம்.ஜி.ஆர். மிகுந்த கட்டுப்பாடு உடையவர். அவரை யாரும் அவ்வளவு எளிதில் கவிழ்த்துவிட முடியாது” என்று பேசி முடித்தார்.

அதன் பின்பு பேச வந்த எம்.ஜி.ஆர். அவர்கள், “நான் மிகுந்த கட்டுப்பாடு உடையவன் என்று முக்தா சீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டார்கள்” என்று சொல்லி விட்டு அவரை ஆழமாக ஒரு பார்வை பார்த்தார்கள். அந்தப் பார்வையின் அர்த்தம் புரியாத முக்தா சீனிவாசன், “என்னண்ணே… இப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

உடன் எம்.ஜி.ஆர்., “எல்லாம் சரி, எங்கே அந்த ஆயிரம் ரூபாய்?” என்று கேட்டார். முக்தா சீனிவாசனைத் தவிர, விஷயம் தெரியாத அந்தக் கூட்டம், ‘என்னவாக இருக்கும்?’ என்று விழித்திருக்க, அதன் பின்பு நடந்த விஷயத்தை அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். விளக்கமாகக் கூற அந்தக் கூட்டமே வெடிச் சிரிப்பில் ஆழ்ந்தது.

சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் யாராவது எம்.ஜி.ஆரோடு போட்டி போட்டு ஜெயித்துவிட முடியுமா என்ன?

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com