கடந்த ஆகஸ்ட் 24, வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங் களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்த ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை போன்ற தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காமல் போனது அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பெருமைமிக்க தேசிய விருதுகள் குறித்து நாம் அறிய வேண்டியது அவசியமாகும்.
பிரம்மாண்ட வெள்ளித்திரையில் கனவுகளை உயிர்ப்பிக்கும் இந்திய சினிமாவின் சிறப்பு மிக்க உலகில், திரைத் துறையினரின் அர்ப்பணிப்பு, திறமை, படைப்பாற்றலுக்கு சான்றாக இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. தொடக்கத்திலிருந்தே இந்த விருதுகள் இந்திய சினிமாவின் புத்திசாலித்தனத்தை அங்கீகரித்ததோடு மட்டுமின்றி, தேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தை வடிவமைப்பதிலும் முக்கிய பங்கு வகித்துவருகின்றன.
தேசிய திரைப்பட விருதின் தொடக்கம்:
1954ல் முதல் தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டபோது, இந்திய சினிமாவுக்கான அங்கீகாரத்தை முறையாக வழங்குவதற்கான விதைகள் விதைக்கப்பட்டன. திரைத் துறையினரின் பல்வேறு சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் கடந்த 69 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடக்க காலத்தில் பிமல் ராய், ராஜ்கபூர் மற்றும் மெஹபூப் கான் போன்ற பிரபலங்கள் முன்னோடிகளாகத் தோன்றி, அவர்களின் திரைத்துறை பங்களிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றனர்.
1960 மற்றும் 70களில் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சத்தியஜித் ரேயின் தலைசிறந்த படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதிலும் குறிப்பாக 1955-ல் வெளிவந்த 'பதேர் பாஞ்சாலி' என்ற திரைப்படம் தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது. இது உலக அரங்கில் இந்திய சினிமாவும் இடம்பெற வழி வகுத்தது.
பிராந்திய மொழி திரைப்படங்களுக்கும் அங்கீகாரம்:
1980 களில் தேசிய விருதில் பிராந்திய சினிமாக்களில் சிறந்து விளங்கும் திரைப்படங்களுக்கான விருதை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்த விருதுகள் அவற்றின் எல்லைகளைக் கடந்து இந்தியாவின் பிறமொழி திரைப்படங்களுக்கும் அங்கீகாரம் கிடைப்பதற்கான திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் இந்தி அல்லாத பிற மொழிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் கவனம் கிடைத்தது.
தேசிய திரைப்பட விருதுகள் பெரும்பாலும் சினிமா துறையின் அற்புதமான படைப்புகளை வெளிக் கொண்டுவரும் மேடையாக அமைந்தன. சிறந்த பொழுதுபோக்கை வழங்கும் பிரபலமான திரைப்படம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த திரைப்படம் போன்ற புதிய வகைகளின் அறிமுகத்தால், மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப அங்கீகாரம் வழங்கும் தன்மையும் மாறியது.
சமூகத் தாக்கத்தைக் கொண்டாடுதல்:
2003 இல் நடைபெற்ற 50 வது தேசிய திரைப்பட விருதுகள் யாராலும் மறக்க முடியாத ஒரு மைல்கல்லாக அமைந்தது. இதில் காலத்தால் அழியாத கிளாசிக் திரைப்படமான "ஷோலே" சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச் சென்றது. சமூகப் பொறுப்புடைய திரைப்படங்களை அங்கீகரிப்பதற்கு தேசிய திரைப்பட விருதுகள் தேவைப்படுகின்றன. கடந்த சில பல ஆண்டுகளாக இந்த விருதுகள் ஒதுக்கப்பட்ட சமூகங்கள், மனித உரிமைகள் மற்றும் சமூக அக்கறைகள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டும் திரைப்படங்களை கௌரவித்துள்ளது. இதனால் இந்த விருதுகள் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
தேசிய திரைப்பட விருதின் 69வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், இதற்கு அஸ்திவாரம் போட்ட முன்னோடிகள் மற்றும் இத்தனை ஆண்டு காலம் தொடர்ச்சியாக நடத்தி வருபவர்களைப் பாராட்ட வேண்டும். காலம் செல்லச் செல்ல பல சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்கள், இன்னும் கண்டுபிடிக்கப்படாத திறமைகள், வெள்ளித் திரையின் பல புதிய மாயாஜாலங்களை தேசிய விருதுகள் தொடர்ந்து கௌரவிக்கும் என உற்சாகத்துடன் எதிர்பார்க்கலாம்.