தேசிய விளையாட்டு தின கதாநாயகன் தயான் சந்த்!

ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினம்!
தேசிய விளையாட்டு தின கதாநாயகன் தயான் சந்த்!

1905 ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் ஜான்சியில் ஆகஸ்ட் 29 ம்தேதி பிறந்த இவர், இந்திய ஹாக்கி அணியில் பங்கேற்றவரை ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து தங்கம் வென்றது இந்தியா. 1928 ம் ஆண்டு முதல் 1956 வரை இந்தியா தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. அதில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வெல்ல காரணமாக இருந்தவர் ஹாக்கி வீரர் தயான் சந்த். ஹாக்கி உலகம் மறக்க முடியாத இந்திய ஹாக்கி அணியின் வீரர்.

        ஒரு முறை தயான் சந்த் தன் தந்தையுடன், ராணுவத்தில் உள்ள இரு பிரிவுகளுக்கு இடையே நடந்த ஹாக்கி போட்டியை பார்த்துக்கொண்டு இருந்தார். ஒரு அணி தோல்வியை தழுவிக்கொண்டு இருந்தது. அப்போது தயான் சந்த் தன் தந்தையிடம் "எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தோல்வியை சந்திக்கும் அணியை வெற்றி பெறச் செய்வேன்" என்றார்.  அவர் சொன்னதை ஏற்று அவருக்கு விளையாட அனுமதி வழங்கப்பட்டது.

     அந்த போட்டியில் 4 கோல்கள் போட்டு அந்த அணியை வெற்றி பெறச்செய்தார் தயான் சந்த். அதுவே அவர் தன் 16 வயதில் சிறுவர் ராணுவ ரெஜிமென்ட்டில் சேரவும் உதவியது.

     ராணுவ வீரர்கள் இரவில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும்போது தயான்  நிலவு ஒளியில் ஹாக்கி பயிற்சி எடுத்துக்கொண்டு இருப்பார். இதனை கவனித்த தயான் சந்தின் முதல் கோச் பங்கஜ் குப்தா, "தயான் சிங் ஒரு நாள் நீயும் இந்த நிலா போல ஹாக்கி உலகில் பிரகாசிப்பாய்" என்று வாழ்த்தினார். அதிலிருந்து தான் தயான் சிங் என்ற பெயர் தயான் சந்த் ஆனது. சந்த் என்றால் சந்திரன் என்று பொருள்.

      எந்த ராணுவ ஹாக்கி போட்டி என்றாலும் அதில் தயான் சந்த் புகழ் பரவியது. காரணம் அவர் கோல் போடும் லாவகம்.1925 ம் ஆண்டு முதன்முதலாக இந்திய ஹாக்கி அணி வெளிநாட்டில் ஆஸ்திரேலியாவில் விளையாடியது. அதில் தயான் சந்த்தும் கலந்துகொண்டார். அப்போது 21 மேட்ச் விளையாடியதில் 18 மேட்ச்களில் இந்தியா வென்றது. அதில் போடப்பட்ட கோல்கள் 192. தயான் சந்த் அடித்தது 100 கோல்கள்!

        1927ம் ஆண்டு இந்திய ஹாக்கி சம்மேளனம் தொடங்கப்பட்டது. அதில் சேர்ந்த தயான் சந்த் 1928 ம் ஆண்டு நடந்த  ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டிக்கு அழைத்துச்செல்லப்பட்டார் அதன் இறுதிப்போட்டியில் ஹாலந்து அணிக்கு எதிராக 3 கோல்கள் போட்டு இந்திய அணி முதன்முதலாக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. அதில் இரண்டு கோல்களை போட்டவர் தயான் சந்த். 1932ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் 23-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதில் தயான் சந்த் 12 கோல்களை போட்டார். நீண்ட நாள் வரை  முறியடிக்கப்படாத சாதனையாக இது இருந்தது.

       1936ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் ஃபைனலில் டிரஸ்ஸிங் ரூமில் தயான் சந்த் நமது நாட்டின் தேசியக்கொடியை அசைத்து காட்டி "வந்தே மாதரம் " பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அப்போது பிரிட்டிஷ் பாடல் பாடவேண்டும் என்பது விதி. அதே மேட்சில் காலில் ஷு இல்லாமல் தயான் சந்த் மற்றும் அவரது சகோதரரும் விளையாடினார்கள் .இதில் இந்திய அணி எப்படியும் வென்று விடும் என்று தெரிந்து ஜெர்மன் அணி ஆவேசமாக விளையாடி தயான் சந்த் பல்லை உடைத்தனர். சிகிச்சை பெற்று வந்த தயான் சந்த் மீண்டும் விளையாடி  இந்தியாவிற்கு தங்கம் வாங்கிக்கொடுத்தார்.

     1928 முதல் 1956 வரை இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 6 முறை தங்கம் வென்றது. 6 முறையும் தயான் சந்த் தான் அணியின் கேப்டன். 1932 ம் ஆண்டு ஒரே ஆண்டில் 123 கோல்களை போட்டவர் என்ற பெருமை பெற்றவர் தயான் சந்த். தன்னுடைய 22 வருட ஹாக்கி விளையாட்டில் இவர் அடித்த கோல்கள் மட்டுமே கிட்டத்தட்ட 1000 யை தாண்டும். இது வரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.

பிரிட்டிஷ் பத்திரிகையாளர்கள் தயான் சந்த்யை "ஹாக்கி மந்திரவாதி" என்றனர். ‘பெரிய பதவி தருகிறேன். தங்கள் நாட்டிற்கு விளையாடுங்கள்’ என ஹிட்லர் அழைத்தும் "தாய் நாட்டிற்கு மட்டுமே விளையாடுவேன்" என உறுதியாக கூறியவர். ஹாக்கி விளையாட்டில் 1000 கோல்கள் போட்டதால்  இவர் விளையாடுவது ஹாக்கியா இல்லை கிரிக்கெட்டா? என்று கேட்டார் கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன்.

தயான் சந்த் ஒரு பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன். மிகவும் எளிமையானவர். மைதானத்தில் எந்த சூழ்நிலையிலும் அவர் நிதானம் தவறாமல்தான் இருப்பார். அவரை எதிரணி வீரர்கள் கூட மிகவும் மரியாதையுடன்தான் பார்ப்பார்கள். ஆனால் களம் இறங்கி விட்டால் புயல்தான் அவர். இதனால் ஹாலண்டு, ஜப்பான் நாட்டின் அதிகாரிகள் அவருடைய ஹாக்கி மட்டையை உடைத்து உள்ளே காந்தம் ஏதாவது உள்ளதா என சோதித்தது கூட உண்டு.

இந்தியா சுதந்திர நாடாக மாறிய பிறகு தனது 42 வயதில் இந்திய ஹாக்கி அணியின் கிழக்கு ஆபிரிக்கா டூரில்  கலந்துகொண்டார் தயான் சந்த். அதில் 22 போட்டிகளில் கலந்து கொண்டு அவர் அடித்த கோல்கள் மொத்தம் 61 . இந்த சுற்று பயணத்திற்கு பிறகு ஹாக்கி விளையாட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். தன்னுடைய ஓய்வுக்கு பிறகு ஒரு முறை ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக 1948ல் ஒலிம்பிக் தங்கம் வென்ற அணியை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியை 50,000 பேர் பார்த்தனர்.

     தயான் சந்த் தின் பொழுதுபோக்கு வேட்டையாடுதல், மீன் பிடித்தல், சமையல் செய்தல், பில்லியர்ட்ஸ், கேரம் விளையாடுதல்... கிரிக்கெட் கூட விளையாடுவார் தயான் சந்த்! புகைப்பட கலையும் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

51 வயதில் ராணுவத்திலிருந்து மேஜராக பதவி வகித்து விலகினார். அதே ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்தது. தயான் சந்த் 1979 ம் ஆண்டு டிசம்பர் 3 ந்தேதி நுரையீரல் புற்றுநோய் காரணமாக காலமானார். ஜான்சியில் அவர் விளையாடி மகிழ்ந்த மைதானத்திலேயே அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்திய அரசு அவரின் தபால் தலை வெளியிட்டு அவரை கெளரவபடுத்தியது. டெல்லி ஹாக்கி மைதானத்திற்கு தயான் சந்த் பெயர் சூட்டப்பட்டது.

இவரை பெருமைப்படுத்தும் விதமாக இவரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ம்தேதியை தேசிய விளையாட்டு தினமாக இந்திய அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது. அந்நாளில்தான் விளையாட்டில் சாதனை படைத்தவர் களுக்கு கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய விளையாட்டு வீரர்களிலேயே வெளி நாட்டில் சிலை திறக்கப்பட்டது தயான் சந்த்க்குதான் என்பது கூடுதல் பெருமை! இவரின் சிலை ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com