இசைக்கலைஞர்களுக்கு கரம் கொடுக்கும் ஆதிசங்கரா ஃபைன் ஆர்ட்ஸ்

இசைக்கலைஞர்களுக்கு கரம் கொடுக்கும் ஆதிசங்கரா ஃபைன் ஆர்ட்ஸ்

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலை நிறுவனங்கள்

ஆற்றும் அற்புதப் பணி! ஓர் அறிமுகம்.

இசைக் கலைஞராகவும்,  குருவாகவும், ஆதிசங்கரா ஃபைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் நிறுவனராகவும் இருப்பவர் அமெரிக்காவில் வசிக்கும் அசோக் சுப்ரமணியன். இவர் கவிதைகளும் எழுதுவார். இந்த அறிமுகத் தொடரில் அடுத்து இவரைச் சந்திப்போமா?

இந்த சபாவை நீங்கள் எந்த நோக்கத்தோடு, எப்பொழுது ஆரம்பித்தீர்கள்?

உலகையே உலுக்கி, முடக்கிப் போட்ட கொரோனா கொடுந்தொற்று காலத்தில், எப்போது நம்மை அது பீடிக்குமோ என்ற பயம் ஒருபுறம். இதன் தாக்கம் எப்படி நம் பொருளாதாரத்தைக் குலைத்து, வாழ்வைப் பாதிக்குமோ என்கிற பயம் மறுபுறம்.  குறிப்பாக, இந்தியாவில் இசைத் துறையில் முழுவதுமாக ஈடுபட்ட இரண்டாம் நிலைக் கலைஞர்கள் பற்றிய கவலையில், சிலருடைய சிரமங்களைப் பற்றி அவர்களே கூறிக்கேட்டதும், பிறர் சொல்லிக் கேள்விப்பட்டதும் அடிமனதில் நெருடலையும், வேதனையையும் கொடுக்க, அவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தோன்றியதுதான் 'ஆதிசங்கரா' என்னும் தொண்டு அமைப்பு.

இந்த அமைப்பைத் தொடங்குவதற்கு உங்களுக்கு எந்தவிதமான உதவிகள் கிடைத்தன?
முதல்நிலைக் கலைஞர்களின் இணையக் கச்சேரிகளில் கிடைக்கும் இசை ரசிகர்களின் நன்கொடைகள் உதவியோடு இதைச் செய்யலாமென்று தோன்றியதும், இசையில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களே நிர்வாக உறுப்பினர்களாக அமர்ந்ததும் பெரும் அளவில் உதவிற்று.

உங்களுடைய நிகழ்ச்சி நிரல் எவ்வாறு அமைகிறது?

மாதம்தோறும் 2வது வெள்ளியன்று ஒரு கச்சேரியும், தவிர நவராத்திரி, மார்கழி மாதம், மற்றும் முக்கியப் பண்டிகை தினங்களில் இந்தியா மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இசைக் கலைஞர்கள் மற்றும் வளரும் கலைஞர்களைக் கொண்டு கச்சேரிகளும் நடக்கும். தவிர டிசம்பர் மாத இறுதியில் Lecdem series சென்னை வித்வான்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சிகளை வலைதளத்தில் ஒலிபரப்ப எவ்விதமான முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள்?

பெரும்பாலான நிகழ்ச்சிகளை வித்வான்களே அவர்களுக்கு வசதியான ஒலி/ஓளிப்பதிவு செய்துவிடுவர். மற்றவற்றை சென்னை ஆர்கே கன்வென்ஷன் மையத்தின் இராமகிருஷ்ணன் அவருடைய வளாகத்தில் பதிவு செய்து, யூ ட்யூபில் வெளியிடுகிறோம்.

உங்களுடைய இசை ஆர்வம் மற்றும் உங்களுடைய ஆசிரியர்களைப் பற்றிக் கூறுங்களேன்.

என்னுடைய ஸங்கீத ஆர்வத்திற்குக் காரணத்தைச் சொல்வதென்றால், எங்களுடைய குடும்பம் ஸங்கீத வித்வான்கள் நிறைந்தது. மறைந்த வித்வான்கள் கே.ஆர்.குமாரசாமி ஐயர் மற்றும் கே.ஆர். கேதாரநாதன் இவர்களின் இசை நிழலிலும், சிறிது காலம் திருவனந்தபுரம் அகாடமியில் படித்த என்னுடைய அம்மாவின் இசையுமே, என்னுடைய ஆரம்ப கால இசை ஊக்கிகள். தந்தைக்கு அரசாங்கத்தில் மாற்றலுக்குண்டான பணி என்பதால், நான் கல்லூரியில் படிக்க சென்னைக்கு வரும் நாள் வரை ஒரு நல்ல குருவுக்கான யோகமில்லாதிருந்தது,
சென்னைக்கு வந்த பிறகு இசை நண்பர்கள் அசோக் ரமணி, சங்கீத கலாநிதி நெய்வேலி சந்தான கோபாலன் தொடர்பினால் விதுஷி ருக்மணி ரமணி, சங்கீத கலாநிதி டி.என்.சேஷகோபாலன் போன்றோரிடம் ஓரளவுக்குக் கற்கும் வாய்ப்பும், மறைந்த செதிலபதி பாலசுப்ரமண்யம் அவர்களிடம் வெகு நாட்கள் கற்கும் வாய்ப்பும் கிடைத்தன. இதுவும் கூட வேலை நிமித்தமாக அமெரிக்காவுக்குப் பயணித்தபோது நின்றுபோனாலும், என்னுடைய மார்க்கதரிசியாக என்றும் இருப்பவர் டி.என்.சேஷகோபாலன் அவர்கள்தான்.

உங்களிடம் இசை பயிலும் மாணவர்களைப் பற்றி?

சென்னையில் வசிக்காததாலும், வேலை மற்றும் இதர பொறுப்புகளாலும், கச்சேரி வட்டங்களில் அதிகமாகப் புழங்கவில்லையென்றாலும், கச்சேரிகள் செய்யுமளவுக்கு இரண்டு மூன்று சிஷ்யர்களைத் தயார் செய்து இருக்கிறேன். அவர்கள் அமெரிக்காவிலும், சென்னையிலும் கச்சேரிகள் செய்திருக்கிறார்கள். 1998-லிருந்து வகுப்புகள் நடத்துவதால் ஏறக்குறைய 150  மாணவ/மாணவியராவது என்னிடம் கற்றிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் 1980 வருடங்களை ஒப்பிடும் பொழுது தற்போதைய சங்கீத சூழல் எப்படி உள்ளது?

1980களிலிருந்து,இன்று  வரை கர்நாடக சங்கீதத்தின் மீதான ஆர்வமும், அதன் காரணமாக சபாக்களும் பெருகிவிட்டன. முன்பெல்லாம் ஒரு சபாவில் மாதத்திற்கு ஒருமுறை கச்சேரி என்ற நிலை மாறி, வார இறுதிகளில் நாலைந்து இடங்களில் கச்சேரிகள் நடக்கின்றன.

உங்களுடைய மகள் ஒரு முன்னணி இசைக் கலைஞர். அவருடைய இசைப் பயணம் பற்றி கூறுங்கள்.

என்னுடைய மகள் அனன்யா அஷோக், கடந்த சில வருடங்களாக, இந்திய அளவில் பல அறியப்பட்ட இசையரங்குகளில் பாடி வருகிறாள். இறை மற்றும் குருவின் அருளும், அவளுடைய விடாமுயற்சியும், ஊக்கமும், பயிற்சியும், அவளை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால் இந்தத் துறையில் நீடித்திருக்க, தொடர்ந்து கற்றலும், கச்சேரி மேடைகளில் மேலும் மேலும் வெற்றிகள் பெறுவதும் அவசியம்.

மற்ற நாடுகளில் கர்நாடக இசையின் தற்போதய நிலைப் பற்றி உங்கள் கருத்து?
நம் சங்கீதம் கடல்தாண்டி அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஐரோப்பிய கண்டகளில் வெகுவாகக் கற்பிக்கப்பட்டும், மிகவும் ஊக்கமுள்ள மாணவ, மாணவியரால் கற்கப்பட்டு, அவர்களும் கச்சேரி மேடைகளில் பிரபலமாகி வந்தாலும், இந்தியாவில், அதுவும் குறிப்பாகச் சென்னை இசை வட்டத்துக்குள் இருந்தால் மட்டுமே நிறைய கச்சேரி வாய்ப்புகளும் அங்கீகாரமும் கிடைக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இதை ஒரு வருமானத்துக்குரிய தொழிலாகக் கொள்வது, அங்கிருப்பவர்களுக்குச் சற்றுக் கடினம். இங்குள்ள பெரும்பாலான இசைக்கலைஞர்களுக்கும் இது பொருந்தும்! ஆனால் இசையின் ஈர்ப்பு யாரைவிட்டது? ஆன்மிகப் பயணத்தில் ஈடுபடுபவர்கள் இருக்கும்வரை, இசைப் பயணங்கள் இன்பமாகத் தொடரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com