கானாம்ருதா அகடமி

கானாம்ருதா அகடமி

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலை நிறுவனங்கள்

ஆற்றும் அற்புத பணி! ஓர் அறிமுகம்.

2012ஆம் வருடம் திருமணம் முடிந்து கணவருடன் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தார் மைத்ரேயி. சென்னை சட்டக் கல்லூரியில் (School of Excellence in Law) சட்டம் பயின்றவர். அங்கு போன சில நாட்களுக்குக் கண்ணை மூடிக் காட்டில் விட்டாற் போலிருந்திருக்கிறது. நல்ல பாட்டு, உயர்ந்த படிப்பு. சும்மா இருக்க யாருக்குத்தான் மனம் வரும்? தான் கற்ற சங்கீதத்தை மறக்கவோ, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவோ மனம் வரவில்லை மைத்ரேயிக்கு. அப்போது Staten தீவிலுள்ள ராமர் கோவிலில், ராமநவமி உற்சவத்தில் கலந்து கொண்டு கச்சேரி செய்யும் வாய்ப்பு கிட்டியது. அதனைத் தொடர்ந்து வீட்டின் அருகாமையில் உள்ள குழந்தைகளுக்குச் சங்கீதம் கற்பிக்கத் தொடங்கி, மெதுமெதுவாக எண்ணிக்கை உயர்ந்து, விரைவிலேயே நியூஜெர்சியில் ஓர் இசைப் பள்ளி அமைத்தார் மைத்திரேயி.

அப்போதுதான் அவர் எதிர்பாராத ஒரு திருப்பம் அவருடைய கணவரின் வேலை மாற்றத்தின் மூலம் வந்தது. New Jerseyயிலிருந்து North Carolinaவிற்கு மாறவேண்டும் என்ற முடிவு, நன்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவருடைய இசைப்பள்ளியை என்ன செய்வது என்ற குழப்பத்தில் கொண்டுவிட்டது. 

இன்று உலகமே virtualஆகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு, அப்போதே, அத்துணை மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் இவர் மேல் வைத்த நம்பிக்கையால், தொலைதூர இசைக் கல்விக்குத் தயாரானார்கள்.

இறைவனின் திருவிளையாடலை நாம் யார் கேள்வி கேட்க? நார்த் கரோலினாவில் உள்ள விநாயகர், வெங்கடேஸ்வரர் திருக்கோவிலும் கச்சேரி. கச்சேரி நடந்து முடிந்த அடுத்த நாளே கோவிலின் கலாச்சாரக் குழுவின் தலைவர் இவரைத் தொடர்பு கொண்டு, அங்கிருக்கும் குழந்தைகளுக்கு சங்கீதம் கற்பிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். 'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்பதுபோல், உடனே ஒப்புக்கொண்டார் மைத்ரேயி. பல பெற்றோர்கள் நேரடியாகவும் தொடர்புகொண்டு, இளம் பருவத்தில் உள்ள தங்களுடைய பிள்ளைகளைச் சேர்க்க முன்வந்தனர்.  எதிர்பாராத இந்த வரவேற்பினால் திக்குமுக்காடிப் போனாராம் மைத்ரேயி.

பத்து வருடங்களுக்குப் பிறகு இன்று, 'கானாம்ருதா அகடமி' என்ற இவரது இசைப்பள்ளியில், அமெரிக்காவின் பல மூலைகளில் இருந்தும் கனடாவிலிருந்தும் சங்கீதம் பயின்று கொண்டிருக்கிறார்கள் பலர். தமது குருமார்களின் ஆசியால் மட்டுமே இது சாத்தியமாகியது என்கிறார் மைத்ரேயி.

பத்மபூஷன் பி.எஸ். நாராயணசுவாமி மற்றும் சங்கீத கலா ஆச்சார்யா டாக்டர் ருக்மணி ரமணி ஆகியோரின் சீடரான மைத்ரேயி, ராக, சாகித்ய, பக்தி பாவத்துடன் தான் கற்றுக்கொண்ட ஏராளமான கீர்த்தனங்களைத் தன் சீடர்களுக்குப் போதித்து வருகிறார்.

இந்தியாவில் உள்ள இசை ஆர்வம் மிக்க பல குழந்தைகள் போல, அங்கும், அதே அளவோ அல்லது அதற்கும் மேலான ஆர்வத்துடனும் இசை பயிலும் மாணவர்கள் ஏராளம். ஆனால், இவர்களுக்கு  மொழி ஒரு சிறு தடையாக இருப்பது உண்மைதான். தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் கீர்த்தனைகளைக் கற்றுத்தரும் போது சரியான விளக்கம் தந்து அப்பாடல்களுக்கான புரிதலை எளிதாக்குகிறார் இந்த இளம் ஆசிரியர். எந்த சந்தேகத்திற்கும் விஞ்ஞானப் பூர்வமான விளக்கங்களை எதிர்பார்க்கும் அவ்வூர் குழந்தைகளுக்குத் தொழில்நுட்பம், கணிதம், அறிவியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, கற்றலை ஆனந்த அனுபவமாக மாற்றி இருக்கிறார் இவர். சமீபத்தில் மலேசியாவில் நடந்த சர்வதேச கர்நாடக சங்கீத விழாவில், இசைப் போட்டிகளில் கலந்துகொண்டு இவருடைய மாணவர்கள் பல நிலைகளில் பரிசுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

சங்கீத கலாநிதி, அமரர் டி கே ஜெயராமன் அவர்களின் சிஷ்யரானவார் மைத்ரேயியின் தந்தை. தன் தந்தை பாடக் கேட்டு, முறையான இசை வகுப்பில் சேர்வதற்கு முன்னரே தன் கேள்வி ஞானத்தின் வாயிலாகவே சில கீர்த்தனங்களைத் தம் முதல் குரு மதுராம்பாள் அவர்களிடம் பாடிக் காட்டி அசத்தியவர் மைத்ரேயி. S.A.K.துர்கா அவர்களிடம் குரல் பயிற்சியும் மேற்கொண்டவர்.

இளம் வயதில் இந்தியாவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளை வென்ற இவரிடம் இசை பயிலும் மாணவர்கள், இன்று, அங்கு நடத்தப்படும் இசைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று தங்கள் குருவைப் பெருமிதம் கொள்ளச்செய்கிறார்கள்.

இளம் வயதிலேயே தாய் தந்தையரை விட்டுப் பல மைல்களுக்கு அப்பால் சென்றாலும், இசை மீது கொண்ட தீராத காதல், கணவருடைய ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம், கடின உழைப்பு, நூற்றுக்கணக்கான தன் இசைச் செல்வங்களுடன் அவருடைய குழந்தைகள் ஜான்வி, சாம்பவி இருவரும்  இசையின் மேல் காட்டும் ஆர்வம் ஆகியவை பத்துவருடங்கள் என்ன, தன் ஆயுள் முடியும் வரை பாரம்பரியம் மிக்க நம் சங்கீதத்தைப் பரப்புவதற்குத் தூண்டுகோலாக இருக்க உதவும் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளார் மைத்ரேயி. இதையே தனது இலட்சியமாகவும் மனதில் கொண்டு இயங்கி வருகிறார், தான் படித்த சட்டக்கல்வியை விட்டு சங்கீதத்தை முன்னிறுத்தியிருக்கும், இந்த இளம் இசை ஆசிரியர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com