மலேசியாவிலிருந்து ஒரு மலையமாருதம்!

மலேசியாவிலிருந்து ஒரு மலையமாருதம்!

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலை நிறுவனங்கள்

ஆற்றும் அற்புதப் பணி! ஓர் அறிமுகம்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்த  வித்வான் திரு Chiu Sen Chong அந்நாட்டில்  ஒரு சர்வதேச நிறுவனத்தில்  மனித வளத்துறையில் மேலாளராகப் பணிபுரிந்தவர். தமது 12ஆம் வயதிலிருந்து  'சத்ய சாய்' பஜன் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பாடுவார். இதன் மூலம் கர்நாடக சங்கீதத்தின் மீது மையல் கொண்டு, ஆசிரியை  திருமதி. விஜயலக்ஷ்மி குலவீரசிங்கம் அவர்களிடம் இசை பயிலத் தொடங்கினார். 

இவரது குடும்பத்தின் முதல் கர்நாடக இசை கலைஞர் இவர்தான். தான் பார்த்து வந்த அலுவலகப் பணியை துறந்து விட்டு, இசைத்துறையில் முழுநேர வித்வானாகத் திகழ,  தனது  வாழ்க்கையின் இலட்சியப் பயணத்தை மேற்கொண்டு, சென்னை வந்து சேர்ந்தார்.

விதூஷி திருமதி. சாவித்ரி சத்யமூர்த்தி அவர்களிடம் வர்ணங்களைக் கற்றார். பேராசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி, வித்வான் மதுரை ஜி.எஸ்.மணி இருவரிடமும் கூடுதல் பயிற்சி பெற்றார். நடன ஆசிரியை திருமதி. உஷா ஸ்ரீநிவாசன் அவர்களிடம் பரத நாட்டியக் கலையையும் கற்றார். முதுபெரும் வீணை இசைக் கலைஞர் திருமதி. கல்பகம் ஸ்வாமிநாதன் அவர்களிடம் வீணை இசையைக் கற்றார். இந்த இரண்டு குருமார்களும் மிகவும் பொறுமையாக, அன்பாக தனக்கு நாட்டியம் மற்றும் வீணை இசையைப் போதித்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார்.

மேலும், இவர் மோர்சிங் வாத்தியத்தை வித்வான் திரு என். சுந்தரிடமும், ஜலதரங்கம் வாசிப்பதை விதூஷி சீதா துரைசாமியிடமும் பயின்றார்.


இவ்வாறு பல விதமான இசை வடிவங்களைக் கற்று  வந்தாலும், தன்னுடைய இசைப் பயணத்தை எப்படி வழிநடத்துவது என்ற ஒரு குழப்பம் மேலோங்கியிருந்தது.  விரக்தியால் ஒரு தருணத்தில் இசை பயில்வதையே விட்டு விடலாம் என்ற முடிவிற்கே வந்து விட்டார் என்பதே உண்மை.

எதேச்சையாக, பல இசைக் கலைஞர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் அடங்கிய புத்தகம் இவருக்குக்  கிடைத்திருக்கிறது. உடனடியாக இசை கற்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார். யாரிடம்? சங்கீத கலாநிதி திருமதி. டி.கே. பட்டம்மாள்!  பட்டம்மாள் அவருடைய வீட்டிற்கு வரும் வழியைச் சொல்லி, ராகு காலம் முடிந்தவுடன் பாடங்களைக் கற்பதற்கு வரச் சொன்னதைக் கேட்டவுடன் இவர் அடைந்த மகிழ்ச்சிற்கு எல்லையே இல்லை.


"நடன ஆசிரியை திருமதி. உஷா ஸ்ரீநிவாசனிடம்  இந்த செய்தியைத் தெரிவித்தவுடன் முதலில் அவர் அதை நம்பவில்லை. அவருக்கும் மிக்க மகிழ்ச்சி.
முதல் நாளன்று ஓரு வர்ணம், ஒரு கீர்த்தனம், சாய் பஜனை ஆகிய உருப்படிகளைப் பாடிக் காண்பித்தேன். பட்டம்மாள் அதைக் கேட்டு விட்டு அவருடைய மாணவனாக என்னை ஏற்றுக் கொண்டார்".

"திருமதி பட்டம்மாள் அவர்களுடன் இருக்கும் பொழுது என்னுடைய தாயுடன் இருப்பது போன்ற உணர்வு தான் வரும். அவர்  காட்டிய பரிவு, அளவு கடந்த அன்பு ஆகியவை என் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தன. நான் பாடுகின்ற ஒவ்வொரு இசை ஒலியையும் அவருடைய காலடியில் சமர்ப்பிக்கின்றேன்", என்று உணர்ச்சி பெருக்கில் நெகிழ்கிறார்.

திருமதி பட்டம்மாள் இவருக்கு 'சாய் மதன மோகன் குமார்' என்ற பட்டப் பெயர் சூட்டியதை மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இந்த பன்முகக் கலைஞர்.

பட்டம்மாளின் மறைவிற்கு பிறகு இசைப் பேரொளி வித்வான் திரு. விஜய் சிவா அவர்களிடம் கற்று வருகிறார்.

"திரு. எஸ்.வி. கிருஷ்ணனின் ஆதரவில், சென்னை ராக சுதா அரங்கத்தில் 2002ஆம் வருடம் நாத இன்பம் நிகழ்ச்சியில் நடந்தது என் முதல் அரங்கேற்றக் கச்சேரி.
அப்பொழுது எனக்கு 19 வயது. என் போன்ற இளம் வித்வானுக்கு வயலின் மேதை, குரு, வித்வான் திரு. ஆர். கே. ஸ்ரீராம் குமார், மிருதங்க வித்வான் திரு மனோஜ் சிவா இருவரும் பக்க வாத்தியம் வாசித்தது நான் செய்த பாக்யம் என்றே சொல்லலாம்".

மலேசியாவில் வாய்ப்பாட்டு நிகழச்சிகளை விட வாத்தியக் கருவிகள் இசைக்க வாய்ப்பு நிறைய கிடைக்கிறது என்கிறார். அங்கு தற்பொழுது கர்நாடக இசையைப் பல மாணவர்களுக்குக் கற்றும் கொடுத்து வருகிறார்.

சென்னைக்கு விஜயம் செய்யும் போதெல்லாம், திரு க்ளீவ்லாண்ட் சுந்தரம் தம்பதியர் கொடுத்து வரும் ஆதரவையும் அன்பபையும் நன்றி பாராட்டுகிறார் இவர்.

இசை என்பது ஓரு பெரிய கடல். இசையைக் கற்பது என்பது வாழ்நாள் முழுவதும், தினமும் நடக்க வேண்டிய ஒரு செயல் என்னும் இவருக்கு சென்னையில் பிடித்தது, அதன் அன்பான மக்கள், ருசியான உணவு, அதன் கலை மற்றும்  கலாச்சாரம்.

இசை என்பது அனைவருக்கும் புரிந்த ஒரு மொழி. அதைக் கற்கத் தேவைப்படுவது தீராத ஆர்வம் மற்றும் தீராத ஆர்வம் மட்டுமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com