மனித மனங்களை இணைக்கும் கருவி, இசை

மனித மனங்களை இணைக்கும் கருவி, இசை

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலை நிறுவனங்கள்

ஆற்றும் அற்புதப் பணி! ஓர் அறிமுகம்.

இசைக்கு மொழி கிடையாது.  அதனால், இசையை ஒரு பாலமாகக் கொண்டு நாம் உலகத்தில் உள்ள அனைவரிடமும் நட்பு பாராட்ட முடியும் என்று, தான் நம்புவதை உறுதி செய்யும் வகையில் தன் இசைப்பயணத்தை   மேற்கொண்டிருக்கும் இளம் கம்போஸர் சுருதி ராஜசேகர். BBC magazine வழங்கிய 2020 ஆம் ஆண்டுக்கான ' Rising Star' விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவர், ஒரு கம்போஸராக, இசைக் கலைஞராகச் சாதிக்க விரும்புகிறார்.

 அவரைச் சந்திப்போமா?

 "இசையில் என் முதல் மொழி கர்நாடக சங்கீதம் தான். என் தாயின் வயிற்றில் கருவாக இருந்த போதே சங்கீதம் என் காதுகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். வீணை இசைக் கலைஞர் திருமதி. நிர்மலா ராஜசேகர் என் தாய். என தாயைக் குருவாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் பயிலத் தொடங்கிய நான், சிறு குழந்தையாகவும், வளரும் பருவத்திலும் என் தாயின் அத்தனைக் ஒத்திகைகளிலும் கச்சேரிகளிலும் தவறாமல் கலந்து கொள்வேன்.

 அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த எனக்கு, இயற்கையாக மேற்கத்திய இசையிலும் நாட்டம் ஏற்பட்டது. மேற்கத்திய சங்கீதத்திலும் எனக்கு வெகு விரைவிலேயே பயிற்சி தரப்பட்டது. பியானோ இசைப்பது, மேற்கத்திய குழு இசை (choir) இரண்டும் எனக்குப் பிடித்த விஷயங்கள். இன்று வரை, நம் சங்கீதத்தில் நான் பெற்ற ஸ்வர ஞானத்தை அடித்தளமாகக் கொண்டு மேற்கத்திய இசையின் நொட்டேஷன்களை நான் புரிந்து கொள்கிறேன்.

என் தாயைக் குருவாகப் பெற்றதை மிகப் பெரிய அதிர்ஷ்டமாக நான் கருதுகிறேன். எனக்கு இதனால் என்ன பலன் என்பதை உணரத் தொடங்கும் முன்பிருந்தே என் தாயின் இசை வாழ்க்கையில் நானும் ஒரு அங்கமாகி விட்டேன். என் தாயுடன் காரில் எங்காவது பயணிக்கும் போது கூட பலப் பல சங்கீத விற்பனர்களின் இசையை ஒலிநாடாவில் ஓடவிட்டு, அவர்கள் கல்பனாஸ்வரங்களை எவ்வகையில் கட்டமைக்கிறார்கள் என்பதை எனக்கு விளக்குவார். எங்கள் வீட்டுக்கு வந்து தங்கும் இசை அறிஞர்களின் மேம்பட்ட வகுப்புகள் என் இசை அறிவைப் பட்டை தீட்டியிருக்கின்றன. மறைந்த B.சீதாராம சர்மா அவர்கள் நாளொன்றுக்கு ஒரு கீர்த்தனை கற்றுக் கொடுத்து நாள் முழுதும் நான் பயிற்சி மேற்கொண்டு அடுத்த வகுப்பில் அதை அவரிடம் பாடி காண்பிப்பேன். இசை ஆராய்ச்சியாளர் B.M.சுந்தரம் அவர்களின் வழிகாட்டுதல், லயத்தில் தஞ்சாவூர் முருகபூபதி அவர்கள் வழங்கிய பாடங்கள் என ஒவ்வொரு நிலையிலும் பல வித்வான்கள் எனக்கு வழிகாட்டிகளாக இருந்து என் இசை வளர உதவுகிறார்கள்.

 சங்கீதத்தைப் பொறுத்தவரை நான் இன்னும் தொடக்கத்தில் தான் இருக்கிறேன். ஆனால் என் தாய் 'ஹேண்ட் ஷேக்ஸ் வித் அதர் கல்ச்சுரல் ட்ரடிஷன்' என்று கூறுவார். செல்லோ, கிளாரினெட், சைனா நாட்டின் ஒரு வாத்தியம் என்று பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் வழங்க எப்போதும் விரும்புவார்.  அவர்களுக்கு நம் கர்நாடக சங்கீதத்தை, அதன் நுணுக்கங்களை விளக்கி, அதே போல் அவர்களுடைய இசையில் உள்ள சிறப்பைத் தான் கற்று, இவ்வகையில் மேற்கத்திய இசைக் கலைஞர்களுடன் இணைந்து அவர் பணியாற்றிய அந்தத் தருணங்கள் என் பார்வையை விசாலப்படுத்தியிருக்கின்றன. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் என்னுடைய இளநிலைப் பட்டத்தை முடித்து, 'மார்ஷல்ஸ் ஸ்காலர்ஷிப்' பெற்று U.K. யில் ethnomusicologyயில் முதுகலைப் பட்டம் முடித்தேன்.

இசை எனக்கு ஒரு அடையாளத்தைத் தந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். சிறு வயது முதலே என் குரு அனைத்து மாணவர்களுக்குள்ளும் கிரியேட்டிவிடியை ஊக்கப்படுத்தி இருக்கிறார். சங்கீதத்தின் பால பாடமான 'சரளி வரிசையில்' 14 வரிசைகள் உள்ளன. 15 ஆவதாக ஒரு வரிசையை மாணவர்களை அவர்களே உருவாக்கும்படி கூறுவார். இதைத் தொடர்ந்து எந்த வகையில் அமையலாம் என்று எங்களை ஆரம்ப நிலையிலேயே சிந்திக்கத் தூண்டுவார். 

கற்றல், கச்சேரி வழங்குதல் இவற்றோடு 'படைப்பாற்றலில்' சிறந்து விளங்க வேண்டும் என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர் என் தாய். ஒரு விஞ்ஞானி ஆய்வுக்கூடத்தில் பலவித வேதிப்பொருட்களின் சேர்க்கையில் ஆராய்ச்சி மேற்கொள்வது போல சிறு வயது முதலே பியானோ மற்றும் சில வாத்தியங்களில் என் இரு விரல்களைக் கொண்டு புதிதாக என்ன செய்யலாம் என்று ஏதாவது  புதிய முயற்சியில் ஈடுபடுவேன். நான் முதல் வகுப்பு படிக்கும் போது எனக்குத் தெரிந்த ஒரே ஹிந்தி வரி 'ஆப் கா நாம் க்யா ஹை?', அதாவது 'உங்கள் பெயர் என்ன?' இதை, நான் உருவாக்கிய ஒரு குறும்படத்திற்கு தீம் பாடலாகக் கொண்டு அதற்கு இசையமைத்தேன். உலகப் போரில் ஈடுபட்டிருந்தாலும் இசை மூலம் அவர்கள் இணையலாம் என்பதுதான் என்னுடைய அந்த முயற்சி.  அவர்கள் ஒருவரையொருவர் 'உங்கள் பெயர் என்ன, உங்கள் பெயர் என்ன?,  என்று கேட்டபடி இசை வழி பேசுகிறார்கள். அவ்வகையில், தங்களுடைய ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு நட்புக் கரம் நீட்டுகிறார்கள். இசைக்கு இத்தகைய சக்தி இருக்கிறது. இசை மூலம் நேர்மறையான எண்ணங்களைச் செயல்படுத்த முடியும்.

 மத, இன, மொழி, தேசங்களும் அப்பாற்பட்டு மனங்களின் ஒற்றுமையைக் காண வகை செய்தது. பலதரப்பட்ட புத்தகங்களைப் படிக்கும் பழக்கமுடையவள் நான். அவற்றிலிருந்து பெற்ற inspiration, என்னை பல்வேறு தலைப்புகளில் எழுதத் தூண்டியது. அவ்வகையில் நான் இயற்றி இசையமைத்த பல காம்போசிஷன்கள் உலக அரங்கில் குரலிசை, வாத்திய இசை, பேண்ட் (band ensembles) மற்றும் சேம்பர் இசைக் குழுக்களால் சமீப காலங்களில் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.

 பிரிட்டிஷ் இந்திய வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதிய 'சரோஜினி நாயுடு', ஸ்ரீ கிருஷ்ணர், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட 'தி ஸ்டார் ஆஃப் ரோகிணி', மக்கள் தங்களுக்காகத் தாங்களே குரல் கொடுக்கும் வண்ணம், தங்களுடைய முக்கியத்துவத்தை உணரும் வகையில் 19ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட மூன்று நாவல்களை அடிப்படையாகக் கொண்டு என் பார்வையில்,  21 ஆம் நூற்றாண்டிலும் பொருத்தி வரும் வகையில் நான் பெண்ணியத்தை உணரும் வகையில் உருவாக்கிய படைப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவற்றில் இந்திய ஸ்வரங்கள், ராகங்களைப் பயன்படுத்தி, மேற்கத்திய இசையோடு எவ்வகையில் இணைக்கலாம் என்று, இரு வேறு இசை வடிவங்களுக்கான தொடர்பைப் பார்க்க முயற்சிக்கிறேன்.

 இசையை ஒரு பாலமாக அமைத்து பல்வேறு முக்கியப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று ஆணித்தரமாக நான் நம்புகிறேன். இசைக் கலைஞர்களுக்கு இந்த அதிகாரமும், கூடவே பொறுப்பும்  இருக்கிறது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இசையை ஒரு கருவியாக நான் பயன்படுத்தப் பார்க்கிறேன்.

சிறு வயதில் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். ஆனாலும், என் தாயின் வயிற்றில் கருவாக இருந்த நாள் முதல் என்னை ஆட்கொண்ட இசையும், ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னை வழிகாட்டி நடத்திச் சென்ற பல்வேறு குருமார்களும் அளவிட முடியாத இசையின் ஆழத்தில் என்னை முங்கி எழச் செய்கிறார்கள். இதனால் நான் பெறும் மகிழ்ச்சியை உலகெங்கிலுமுள்ள இசை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்", என்று முடிக்கிறார் இந்தச் சாதனை மங்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com