அரசியல் நையாண்டி நாயகர் – ‘சோ’

அக்டோபர் 5 ‘சோ’ ராமஸ்வாமி பிறந்த நாள்!
அரசியல் நையாண்டி நாயகர் – ‘சோ’

ரசியல் நையாண்டியில் முத்திரை பதித்த, பன்முகத் தன்மையாளர் ‘சோ’ ராமஸ்வாமி அவர்களின் பிறந்த நாள் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி. சென்னையில் பிறந்து, வளர்ந்து, சட்டம் படித்த ‘சோ’ சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக இருந்தார். பின்னர், தனியார் கம்பெனி ஒன்றில் சட்ட ஆலோசகராகப் பணிபுரிந்தார்.

நாடக நடிகர், சினிமா நடிகர், கதை வசனகர்த்தா, கட்டுரையாளர், பத்திரிகையாளர், கிரிக்கெட் வர்ணனையாளர், பேச்சாளர், ஆன்மீக எழுத்தாளர், அரசியல் விமர்சகர், ராஜ்யசபை உறுப்பினர், என்று பலதரப்பட்ட முகங்கள் அவருக்கு. சுமார் 23 நாடகங்களை மேடையேற்றிய ‘சோ’ அதன் மூலமாக அரசியல் அவலங்களை சுட்டிக் காட்டத் தவறவில்லை. இந்தியாவில் சட்டசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவல் அதிகமாக இருந்த போது ‘முகம்மது பின் துக்ளக்’ நாடகம் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது. இந்தியாவின் அன்றைய நிலை பற்றிய ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ மற்றுமொரு சிந்திக்க வைத்த அரசியல் நாடகம். சமூகச் சிந்தனை நாடகங்களில் ‘உண்மையே உன் விலை என்ன’, ‘சாத்திரம் சொன்னதில்லை’ நாடகங்கள் சிறப்பானவை.

200க்கும் மேற்பட்ட படங்களில் நகைசுவை வேடத்தில் நடித்த ‘சோ’, 14 படங்களுக்கு கதை வசனம் எழுதினார். நான்கு படங்கள் இயக்கினார். கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் என்று பல பத்திரிகைகளில் எழுதிய ‘சோ’, 1970ஆம் ஆண்டு துக்ளக் பத்திரிகையைத் துவக்கினார். துக்ளக் பத்திரிகையின் முதல் இதழின் அட்டையில் ‘இரண்டு கழுதைகளுடன் கார்ட்டூன்’ போட்டு வித்தியாசமான ஆரம்பம். அரசியல் அலசல்,  நையாண்டி என்று இன்று வரை இந்த வார இதழ் வெற்றிகரமாக நடந்து வருகிறது. துக்ளக் பத்திரிகையின் தலையங்கம், மற்றும் ஆசிரியரின் கேள்வி பதில் பகுதி ஆகியவற்றிற்காகவே பத்திரிகை வாங்கும் கூட்டம் உண்டு.

தேசியத் தலைவர்களை பேட்டியெடுத்து எழுதிய ‘இவர்களைச் சந்தித்தேன்’ அன்றைய அரசியல் தலைவர்களைப் பற்றியும், அவர்கள் எண்ணங்கள் பற்றியும் அறிய உதவியது என்றால், ‘மை டியர் பிரம்மதேவா’ சமூகத்தில் புரையோடியுள்ள பந்தா, படாடோபம் ஆகியவற்றை தோலுரித்துக் காட்டியது.

ஆன்மீகம் பற்றி பாமரர்களும் அறிய  ‘சோ’ செய்த சேவை மகத்தானது எனக் கூறலாம். ‘இந்து மகா சமுத்திரம்’ என்ற தொடர் கட்டுரையின் வாயிலாக, வேதங்கள், உபநிஷத்துக்கள், புராணங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள் என்று பல விஷயங்களை எழுதினார். இதைத் தவிர எளிய தமிழ் நடையில் ‘மகாபாரதம் பேசுகிறது’ . ‘வால்மீகி ராமாயணம்’ எழுதினார். வால்மீகி ராமாயணத்தை மையமாக வைத்து எழுதினாலும், துளசி ராமயணம் மற்றும் கம்ப ராமாயணம் ஆகியவற்றுடன் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை சுட்டிக் காட்டத் தவறவில்லை. இதைப் போன்ற முயற்சி வேறு எவரும் செய்ததில்லை.  மற்றுமொரு புதுமை உத்தர காண்டம் பகுதிகளை பொருத்தமான இடங்களில் நடுவே நுழைத்து விளக்கம் அளிப்பது. ஆங்காங்கே கம்பரசத்தையும் தெளிக்கத் தவறவில்லை ஆசிரியர்.

பிறப்பு - 05-10-1934, மறைவு – 07-12-2016.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com