இன்னொரு அம்மா! கதை : ராஜேஷ்குமார், முடிவு: ஆ.சந்திரவதனா

இன்னொரு அம்மா! கதை : ராஜேஷ்குமார், முடிவு: ஆ.சந்திரவதனா

‘சுபயோகம் திருமண தகவல் மையம்,’ என்று பெயர்ப்பலகை சொன்ன அந்த சிறிய கட்டிடத்துக்கு முன்னால் ஸ்கூட்டியை நிறுத்திய ஹரிணி, ஒரு நிழலான இடம்பார்த்து பார்க் செய்துவிட்டு உள்ளே போனாள்.

ஹாலின் முன்புறம் சிறியதாக இருந்த வரவேற்பறையில் கண்ணாடி தடுப்புக்கு பின்புறம் உட்கார்ந்து, கம்ப்யூட்டர் திரையை உற்றுப் பார்த்தபடி வலதுகையால் மவுஸை நகர்த்திக் கொண்டிருந்த அந்தப் பெண் ஹரிணியை ஏறிட்டு ‘என்ன’ என்பது போல் புருவங்களை உயர்த்தினாள்.

“குருநாதன் ஸாரைப் பார்க்கணும்.”

“நீங்கதான் ஹரிணியா?”

“ஆமா…”

“ஒரு நிமிஷம்” என்று சொன்ன அந்தப்பெண் இண்டர்காம் ரிஸீவரை எடுத்து, மெலிதான குரலில் பேசிவிட்டு ஹரிணியிடம் திரும்பினான்.

“முதல் மாடி, ரெண்டாவது ரூம்…”

“தேங்க் யூ” சொன்ன ஹரிணி பக்கத்திலிருந்த லிஃப்ட்டை உபயோகப்படுத்தாமல், மாடிப்படிகளில் ஏறி முதல் மாடிக்கு வந்து, வராந்தாவில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் காத்திருந்த, நான்கைந்து பேர்களைக் கடந்து இரண்டாவது அறைக்கு முன்பாய் நின்று கதவை மெல்லத் தட்டினாள்.

அறையினின்றும் குரல் வெளிப்பட்டது.

“உள்ளே வாம்மா…”

ஹரிணி நுழைந்தாள்.

சற்றே பெரிய அறை இதமான ஏ.ஸி. குளிரில் உறைந்து போயிருக்க, சுவரோரமாய் போடப்பட்டிருந்த அரைவட்ட மேஜைக்குப் பின்னால் அந்த அறுபது வயது குருநாதன் மொட மொடப்பான கதர் சர்ட், வேஷ்டியில் பார்வைக்குத் தட்டுப்பட்டார். நெற்றியில் கவனமாய்த் தீற்றபட்ட விபூதிக் கீற்றுக்கு மேலே குங்குமப்பொட்டு அடர் சிவப்பில் தெரித்தது.

“வணக்கம் ஸார்.”

“வாம்மா… உட்கார்.”

ஹரிணி உட்கார்ந்து கொண்டே சொன்னாள்.

“ஸாரி… ஸார்… கொஞ்சம் லேட்டாயிடுச்சு.”

“பரவாயில்லேம்மா… அப்பா உன் கூட வரலையா?”

“இல்ல ஸார்… வீட்டை விட்டுப் புறப்படும்போது பக்கத்து வீட்டுக்காரர் ஒருத்தர்க்கு உடம்பு சரியில்லாமே போயிடுச்சு. அவரை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண கூட்டிட்டுப் போயிருக்கார். இன்னிக்கு காலையில் பத்துமணியிலிருந்து பனிரெண்டு மணி வரைக்கும் நல்ல நேரமாய் இருக்கிறதால நான் மட்டும் மொதல்ல உங்களைப் பார்க்க வந்துட்டேன். அப்பா இன்னும் அரைமணி நேரத்துக்குள்ளே இங்கே வந்துடுவார்.”

குருநாதன் மெலிதாய் ஒரு சிரிப்பை சிந்திவிட்டு சொன்னார்.

“நல்லநேரம், கெட்ட நேரம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லேம்மா. நாம நல்லவங்களாயிருந்தா எல்லா நேரமும் நல்ல நேரம்தான். நான் இந்த ‘சுபயோகம்’ திருமணத் தகவல் மையம் மூலமாய் இதுவரைக்கும் பத்தாயிரம் கல்யாணங்களுக்கு மேல நடத்தியிருக்கேன். எல்லாமே நேரம் காலம் பார்த்து, ஜாதகம் பார்த்து, பொருத்தங்கள் பார்த்து நடந்த கல்யாணங்கள்தான். அதுல எனக்குத் தெரிஞ்சு நூத்துக்கும் மேற்பட்ட ஜோடிகள் இப்ப பிரிஞ்சு வாழறாங்க. ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்கிறது வாழ்க்கை இல்லேம்மா… கல்யாணம் ஆன பின்னாடி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு, விட்டுக் குடுத்து வாழறதுதான் வாழ்க்கை.”

நிதானமான குரலில் பேசிக் கொண்டே போன குருநாதன் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு “ஸாரிம்மா… நான் பேச ஆரம்பிச்சா இப்படித்தான் பேசிகிட்டே போவேன். இப்ப உன்னோட விஷயத்துக்கு வருவோம். என்னோட ஃப்ரண்ட் பார்த்தசாரதி உன்னைப் பத்தியும், உன்னோட அப்பா வித்யாசங்கரைப் பத்தியும் நேத்திக்கு ராத்திரியே விளக்கமா எடுத்துச் சொல்லிட்டார்… உனக்கு இந்த விஷயத்துல எந்த அளவுக்கு உதவி பண்ண முடியுமோ, அந்த அளவுக்கு உதவி பண்ண நான் தயாராயிருக்கேன்” என்றார்.

“தேங்க் யூ ஸார்.”

“உன்னோட அப்பா வந்த பின்னாடி பேசிக்கலாமா… இல்லை இப்பவே பேச ஆரம்பிச்சுடலாமா?”

“இப்பவே பேசிடலாம் ஸார்.”

“ஓ.கே! மொதல்ல என்னோட வாழ்த்துக்கள் உனக்கு.”

“எதுக்கு ஸார்?”

“பொதுவா அப்பாக்கள்தான் தன்னோட பொண்ணுக்கோ, மகனுக்கோ வரன் கேட்டுட்டு வருவாங்க. ஆனா என்னோட இந்த இருபது வருஷ மேட்ரிமோனியல் சர்வீஸ்ல முதல் தடவையாய் ஒரு மகள் தன்னோட அப்பாவுக்கு பெண் பார்க்க வந்திருக்கிறதை நினைச்சு என்னால ஆச்சர்யப்படாமே இருக்க முடியலை…”

ஹரிணி பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு சொன்னாள்.. “ஸார்… இதுல ஆச்சர்யப்படறதுக்கு ஒண்ணுமேயில்லை. அப்பாவுக்கு எப்பவோ கல்யாணம் நடந்து முடிஞ்சிருக்கணும். அப்பா ‘வேண்டாம்’ன்னு சொன்னதாலத்தான்,அது தள்ளித் தள்ளிப் போய் இப்போ ஒரு முடிவுக்கு வந்திருக்கு.”

“அப்பாவோட லேட்டஸ்ட் போட்டோ இருக்காம்மா?”

“நேத்தைக்கு எடுத்த போட்டோவே இருக்கு ஸார்.”

சொன்ன ஹரிணி தான் கொண்டு போயிருந்த லெதர் பேக்கைப் பிரித்து,போஸ்ட் கார்டு சைஸ் போட்டோ ஒன்றையும், ஒரு சிறிய நோட்புக்கையும் எடுத்து குருநாதனிடம் நீட்ட அவர் கேட்டார்.

“இந்த நோட்புக் எதுக்கு?”

“இதுல அப்பாவோட ஜாதகம் இருக்கு… ஸார். எப்படியும் பொண்ணு வீட்டுக்காரங்க கேப்பாங்களே”

குருநாதன் போட்டோவைப் பார்த்துவிட்டு தன்னுடைய விழிகளை வியப்பால் விரித்தார்.

“என்னம்மாஅப்பா இவ்வளவு இளமையா இருக்கார்? அவர்க்கு என்ன வயசு?”

“நாப்பத்தஞ்சு ஸார்… கல்யாணமாகும்போது அப்பாவுக்கு 24 வயசு. அம்மாவுக்கு 21 வயசு. கல்யாணமான அடுத்த வருஷமே நான் பொறந்துட்டேன். எனக்கு இப்ப இருபது வயசு ஸார்.”

“உன்னோட அம்மா எப்படி தவறினாங்க… உடம்புக்கு ஏதாவது முடியலையா?”

“இல்ல ஸார்… ஆக்ஸிடண்ட். எனக்கு அஞ்சு வயசாய் இருக்கும்போது என்னை ஸ்கூல்ல விட்டுட்டு அம்மாவும் அப்பாவும் ஒரு நண்பரோட வீட்டு கிரகப்பிரவேச விசேஷத்துக்கு ஸ்கூட்டர்ல போயிருக்காங்க. ஆவடிக்கு பக்கத்துல வேகமா வந்த ஒரு லாரி மோதி அம்மா ஸ்பாட்லயே இறந்துட்டாங்க. அப்பா எகிறிப்போய் விழுந்ததில் கை எலும்பு முறிவுகளோடு தெய்வாதீனமாய் தப்பிச்சுட்டார். அம்மாவோட இழப்பைத் தாங்கிக்க முடியாத அப்பா ஒரு வருஷம் வரைக்கும் பித்து பிடிச்சவர் மாதிரி இருந்திருக்கார். அதுக்கப்புறம் என்னை வளர்க்கிறதுக்காக மனசைத் தேத்திகிட்டு இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியிருக்கார்.”

“அந்த சமயத்திலேயே அவர்க்கு வேற ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணத்தை செஞ்சு வெச்சிருக்கலாமே?”

“சொந்தக்காரங்களெல்லாம் அப்பாவை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியிருக்காங்க...ஸார். ஆனா வர்ற பொண்ணு என்னை எப்படி நடத்துவாளோங்கிற பயத்திலேயும், தயக்கத்திலேயும் பிடிவாதமா மறுத்துட்டார்… இப்ப கூட அவர்க்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணுங்கிற விஷயத்துல அவ்வளவாய் விருப்பமில்லை. அவரை கன்வின்ஸ் பண்றதுக்குள்ளே எனக்கு போதும் போதும்ன்னு ஆயிடுச்சு.”

“ம்… என்னோட ஃப்ரண்ட் பார்த்தசாரதி நேத்திக்கு ராத்திரி செல்போன்ல பேசும்போது இதைப் பத்தியும் என்கிட்ட சொன்னார். இப்ப அவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க சம்மதம் கொடுத்ததுக்கு காரணம் நீ போட்ட ஒரு நிபந்தனைதான்னும் சொன்னார்.”

“அது உண்மைதான் ஸார். நான் அடுத்த மூணு மாசத்துக்குள்ளே ஆஸ்திரேலியா போய், எம்.பி.ஏ யில் ஒரு முக்கியமான படிப்பைப் படிக்க வேண்டியிருக்கு… ரெண்டு வருஷ கோர்ஸ். நடுவுல லீவு எடுத்துகிட்டு இந்தியா வந்து அப்பாவைப் பார்க்க முடியாது. நான் கோர்ஸை முடிச்சுட்டு வர்ற வரைக்கும் அப்பாவைப் பார்த்துக்க யாருமில்லை. எனக்கு வெளிநாட்டு படிப்பு வேண்டாம்ன்னு சொன்னாலும், நான் படிச்சேயாகணும்ங்கிற விஷயத்துல பிடிவாதமாய் இருக்கார். அதே பிடிவாதத்தைதான் நானும் கையில் எடுத்துகிட்டேன். அவர் கல்யாணம் பண்ணிகிட்டாத்தான் நான் வெளிநாட்டுக்குப் போய் படிப்பேன்னு கண்டிப்பா சொல்லிட்டதால வேற வழியில்லாமே அப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டார்…”

குருநாதன் புன்முறுவல் ஒன்றை சிந்தியபடியே சொன்னார். “ரியலி யூ ஆர் க்ரேட்.. பின்னாடி வரக்கூடிய விளைவுகளை முன்கூட்டியே யூகம் பண்ணி சில முடிவுகளை எடுக்கக்கூடிய புத்திசாலித்தனம் ஒரு சிலர்க்குத்தான் இருக்கும்.. அந்த புத்திசாலித்தனம் உன்கிட்ட இருக்கு. உன்னோட அப்பாவுக்கு நாப்பத்தஞ்சு வயசுதான். தாராளமா கல்யாணம் பண்ணிகிட்டு ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கலாம். நாளைக்கே உனக்கு கல்யாணமாகி நீ ஒருத்தர் வீட்டுக்கு மருமகளா போயிட்டாலும், அப்பாவுக்கு ஒரு துணை கண்டிப்பாய் வேணும்… அந்தத் துணையை இப்பவே செலக்ட் பண்ணிடறது நல்லது… ஆனா இதுல ஒரு சின்ன பிரச்னை இருக்கும்மா.”

“என்ன பிரச்னை ஸார்?”

“அப்பாவுக்கு சின்ன வயசு பொண்ணா பார்க்க முடியாது. முப்பத்தஞ்சு வயசிலிருந்து நாப்பது வயசுக்குள்ளே இருக்கிற மாதிரியான ஒரு பொண்ணைத்தான் பார்க்க முடியும்.”

“அப்படித்தானே பார்க்க முடியும்…? அதுதானே நியாயம் கூட?... அந்த ஏஜ் க்ரூப்லயே பாருங்க… எனக்கு சித்தியா வரப் போறவங்க ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவங்களாய் இருந்தா போதும்.”

“அப்படீன்னா இப்பவே பேசி முடிச்சுடலாமா?”

ஹரிணி திகைத்தாள்.

“இப்பவேவா… எப்படி ஸார்?”

“நீ என்னைப் பார்க்க வரும்போது வராந்தாவில் ஒரு வயசான கணவன் மனைவி உட்கார்ந்திருந்தாங்க… கவனிச்சியாம்மா?”

“இல்ல… ஸார் நாலைஞ்சு பேர் இருந்ததைப் பார்த்தேன். அதுல யார்ன்னு எனக்குத் தெரியலை…”

“நேத்து ராத்திரி என்னோட ஃப்ரண்ட் உன்னோட அப்பாவைப் பத்தி சொன்னதுமே, நான் போன்லே அவங்களுக்கு தகவல் குடுத்து வரச் சொல்லிட்டேன். அவர் பேரு மாசிலாமணி, அந்த அம்மாவோட பேரு ருக்மணி. அவங்களுக்கு ஒரே பொண்ணு. ஸ்கூல் படிப்பை முடிச்சுட்டு ஒரு டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் வேலை பார்த்துட்டிருக்கு. பொண்ணு பேரு மணிமேகலை. மாநிறம். களையான முகம். சுத்தமான ஜாதகம். ஒரளவுக்கு வசதியான குடும்பமும் கூட. இருந்தாலும் என்ன காரணத்தினாலேயோ மணிமேகலைக்கு வரன் அமையலை… வயசு முப்பத்தாறு முடிஞ்சு இப்ப முப்பதேழு நடக்குது. நானும் ஆன வரைக்கும் முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். ஏதோ ஒரு காரணத்தால அந்தப் பொண்ணுக்கு வரன் அமையலை…” என்று சொன்ன குருநாதன் தன்னுடைய மேஜையின் இழுப்பறையைத் திறந்து ஒரு போட்டோவை எடுத்து நீட்டினார்.

“இதுதான் மணிமேகலையோட போட்டோ. எப்படியிருக்குன்னு பார்த்துச் சொல்லம்மா…”

ஹரிணி வாங்கிப் பார்த்துவிட்டு ஒரு புன்னகையுடன் தலையாட்டினாள்.

“நல்லா இருக்காங்க… முப்பத்தேழு வயசு மாதிரியே தெரியலை. இது ரீஸண்ட் போட்டோதானே ஸார்?”

“ஆமாம்மா… போன மாசம் எடுத்த போட்டோ… பின்னாடி தேதி கூட போட்டிருக்கும் பாரு.”

“பொண்ணோட அம்மாவையும், அப்பாவையும் வரவழைச்சு பேசிடலாமா ஸார்?”

“உன்னோட அப்பா மணிமேகலையோட போட்டோவைப் பார்த்துட்டு அவரோட அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டாமா?”

“வேண்டியதில்லை ஸார்… அப்பாவுக்கு ஏற்ற மாதிரியான பெண்ணைப் பார்த்து நான் ஓ.கே சொன்னாலேபோதும்…”

“அப்படீன்னா சரி” தலையாட்டிய குருநாதன் பக்கத்து அறையை எட்டிப்பார்த்து, கம்ப்யூட்டர்க்கு முன்பாய் உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணைக் கூப்பிட்டார்.

“அம்மா பூர்ணிமா!”

அந்த பூர்ணிமா எழுந்து வந்தாள்.

குருநாதன் கேட்டார்.

“இன்னிக்கு எத்தனை பேர்க்கு அப்பாய்ன்ட்மெண்ட் கொடுத்திருக்கோம்?”

“பதினோரு பேர்க்கு.”

“சரி… மொதல்ல மாசிலாமணியையும், அவரோட ஒய்ஃப்பையும் உள்ளே அனுப்பி வை…”

பூர்ணிமா தலையாட்டிவிட்டு அறையினின்றும் வெளியேற அந்த நிமிடம் முடிவதற்குள், அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த அந்த மாசிலாமணியும், அவருடைய மனைவியும் உள்ளே நுழைந்தார்கள். காலியாக இருந்த இருக்கைகளில் அவர்கள் உட்கார்ந்ததும் குருநாதன் ஒரு மூன்று நிமிட நேரத்தை செலவழித்து ஹரிணியைப் பற்றியும், அவளுடைய அப்பா வித்யாசங்கரைப் பற்றியும் நிதானமான குரலில் சொல்லி முடித்தார்.

எல்லாவற்றையும் மௌனமாய் கேட்டுக் கொண்ட மாசிலாமணி ஹரிணியை புன்னகை ததும்பும் முகத்தோடு பார்த்தார்.

“உன்னைச் நினைச்சா எனக்கு பெருமையா இருக்கம்மா. பெத்த அப்பா ஒரு துணையோடும், பாதுகாப்போடும் இருக்கணும்ங்கிறதுக்காக அவர்க்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறது ஒரு உன்னதமான விஷயம். அப்பாவோட போட்டோவையும் பார்த்தோம். நாப்பத்தஞ்சு வயசுன்னு சொல்லவே முடியாது… எங்களுக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு நேர்ல ஒரு தடவை எம் பொண்ணும், மாப்பிள்ளையும் பார்த்துக்கட்டும். அதுக்கப்புறமா நாம குருநாதன் ஸார்க்கு முன்னாடி உட்கார்ந்து பேசி ஒரு நல்ல நாள் பார்த்து…”

மாசிலாமணி பேசிக் கொண்டிருக்கும்போதே அவருடைய மனைவி ருக்மணி இடைமறித்து குரல் கொடுத்தாள்.

“ஒரு நிமிஷம்”

என்ன என்பது போல் அந்த அம்மாவைப் பார்த்தாள் ஹரிணி. அவள் இறுகிய முகத்தோடு குரலைத் தாழ்த்தினாள்.

இறுகிய முகத்துடன் ருக்மணி அம்மா தொடர்ந்தார்.

"என் பொண்ணுக்கு ரொம்ப நாளா கல்யாணம் ஆகாம இருக்கிறது எவ்வளவு பெரிய வலின்னு எங்கள மாதிரி பொண்ண பெத்தவங்களுக்கு தான் தெரியும். ஏதோ இந்த ஜோசியர் கூப்பிட்டார்ன்னு சந்தோஷமா வந்தேன்.

ஆனா என் பொண்ணுக்கு ரெண்டாந்தாரமா போக தான் வாய்ப்பு இருக்குன்னு சொல்றத கேட்கும் போது என்னால ஜீரணிக்க முடியவில்லை .நானும் ஒரு தாய் தானே.... எனக்குள்ளேயும் அவ பிறந்ததிலிருந்து அவளோட கல்யாணத்தையும்  திருமண வாழ்க்கையையும் நினைச்சு எவ்வளவோ கனவுகள் இருக்கும்?"

லேசான விசும்பல் அவரிடம் இருந்து வெளிப்பட்டது.

"இரண்டாம் தாரமா போறவ ஒரு சின்ன குழந்தைக்கு தாயாக போனா கூட எனக்கு மனசு ஆறிடும். ஆனா நீயே கல்யாண வயசுல இருக்கியேம்மா உன்னோட அப்பாவ அவ கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தா அது சரியா வருமா....?"

"ஆன்ட்டி , நீங்க இப்படியெல்லாம் பீல் பண்ணாதீங்க. உங்க பொண்ண விட எங்க அப்பா ஏழு எட்டு வயசுதான் மூத்தவர். முதல் திருமணமே இதை விட அதிக வயசு வித்தியாசத்தில் நடக்குது....நானே முழு மனசோட எங்க அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் . உங்களுக்கு எங்க அப்பாவ பிடிக்கா விட்டாலும் ஒ நான் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேற முயற்சி எடுத்துக்கிட்டு தான் இருப்பேன்.

‌நானும் மூணு மாசத்துல வெளிநாட்டுக்கு படிக்க போயிருவேன்.

என்னோட படிப்பு, என்னோட கேரியர் அப்படின்னு எனக்கு ஒரு புது வாழ்க்கை தொடங்கிடும். சில வருஷங்களுக்கு பின்னாடி எனக்கும் திருமணம் ஆயிடும்.

என் அப்பாவோட வாழ்க்கையை விட்டு நான் வெகு தூரம் பிரிஞ்சு போயிடுவேனோன்னு என மனசுல ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கு.... என் கூட பிறந்த சகோதர சகோதரிகளும் இல்லை அப்பாவைப் பார்த்துக்கறதுக்கு ....அதனால எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல துணை வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சின்ன வயசுல அப்பா துணையை இழந்துட்டாலும் ரொம்பவும் சாத்வீகமாக அவருடைய வாழ்க்கையை எனக்காகவே வாழ்ந்திட்டார்."

இளமையில் துணை தேவைப்படா விட்டாலும் முதுமையில் கண்டிப்பாக ஒரு துணை தேவைங்கறத புரிஞ்சிக்கிற வயசும் வெளி உலக அனுபவமும் எனக்கும் வந்துருச்சு. அதனால நான் அப்பாவை கஷ்டப்பட்டு கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்திருக்கிறேன்.

உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் எங்க அப்பாவை பிடிச்சிருந்தா கூடிய சீக்கிரமே அவங்களுக்கு நாம கல்யாணம் செய்து வைத்து விடலாம்"

இறுகி இருந்த ருக்மணி அம்மாவின் முகம் சற்று மலர்ந்தது.

பெரிய மனுஷியை போல் பேசிய ஹரிணியை பார்த்த அவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.அந்தக் கண்ணீரில் ஒரு திருப்தி தெரிந்தது.

என் பொண்ணு  உனக்கு இன்னொரு அம்மாவாக இருப்பாளா என்று எனக்கு தெரியாது.... ஆனால் நீ உனது அப்பாவிற்கு இன்னொரு அம்மா. ரொம்ப நல்ல அம்மா.

ஒரு அம்மா தான் தன் பிள்ளைக்கு என்ன தேவை, பிற்காலத்தில் எது பாதுகாப்பு..? அப்படிங்கிறத புரிஞ்சுகிட்டு ஒரு நல்ல முடிவு எடுப்பாங்க. நீயும் நல்ல முடிவா தான் எடுத்து இருக்க.

நீ நல்லா இருக்கணும்மா என்று ஹரிணியை வாயார வாழ்த்தினார் ருக்மணி அம்மா.

"நாளைக்கு நானும் எங்க அப்பாவும் பொண்ண பார்க்க வரலாமா ஆன்ட்டி."

"ஆன்ட்டி என்ன ஆன்ட்டி....? வாய் நிறைய எங்கள பாட்டி, தாத்தான்னு கூப்பிடு. நாங்க உன்னைய மனசார எங்க பேத்தியா ஏத்துக்கிட்டோம்" என்று அந்த அம்மா சொன்ன போது சொர்க்கத்தில் மீண்டும் ஒரு திருமணம் நிச்சயக்கப்பட்டது.

 ***************************************************************

கதை இங்கே ? முடிவு எங்கே ?

ராஜேஷ்குமாரின் கதை 2 - நாளை 13.01.2023 வெள்ளிக்கிழமை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com