சந்திர கிரகணம்

சந்திர கிரகணம்

கதை ­இங்கே…! முடிவு எங்கே…? (போட்டி)

கதை எண் - 3

கோர்ட்டுக்குப் புறப்பட்டுப் போகும் அவசரத்தில் இருந்த அந்த ஐம்பது வயதான தேவகி, தன்னுடைய செல்போன் வைபரேஷனில் அதிர்வதை உணர்ந்ததும், அதை எடுத்து இடது காதுக்கு ஒற்றியபடி மெல்ல குரல் கொடுத்தாள்.

“எஸ்.”

“லாயர் தேவகி மேடம் இருக்காங்களா…?” ஒரு ஆண்குரல் கேட்டது.

“நான் தேவகிதான் பேசறேன். நீங்க யாரு?”

“மேடம்… என் பேரு ஜெயக்குமார்.”

“என்ன விஷயம் சொல்லுங்க.”

“உங்ககிட்ட ஒரு கேஸ் விஷயமா பேசணும்…”

“சாயந்தரம் ஒரு அஞ்சுமணிக்கு மேல வாங்க… நான் இப்போ கோர்ட்டுக்கு புறப்பட்டுகிட்டு இருக்கேன்.”

“மேடம்… உங்ககிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசினா போதும்… கொஞ்சம் ஜன்னல் வழியா பாருங்க… நான் உங்க வீட்டு வாசல்லதான் நின்னுட்டிருக்கேன்…”

தேவகி பக்கவாட்டு ஜன்னல் வழியாக வீட்டு வாசலைப் பார்க்க, அந்த இளைஞன் நின்றிருந்தான். வயது முப்பது இருக்கலாம். நிறம் மாநிறத்துக்கு கீழே இருந்தாலும், தலைமுடியை படிய வாரி களையான முகத்தோடு தெரிந்தான்.

தேவகிக்கு லேசாய் கோபம் பீறிட்டாலும் அதை அடக்கிக்கொண்டு கேட்டாள்.

“என்கிட்ட என்ன பேசப் போறீங்க?”

“பர்மிஷன் குடுங்க மேடம்… வந்து சொல்றேன்.”

“சரி… உள்ளே வாங்க…”

தேவகி செல்போனை அணைத்து, இடது உள்ளங்கையில் அதக்கிக்கொண்டு பெருமூச்சொன்றை விட்டபடி சோபாவுக்கு சாய்ந்தாள்.

அடுத்த சில விநாடிகளில் அந்த இளைஞன் ஜெயக்குமார் தயக்கநடை போட்டபடி அறைக்குள் நுழைந்தான்.

“வணக்கம் மேடம்…”

தேவகி பதிலுக்கு வணக்கம் சொல்லாமல் எரிச்சலுடன் தனக்கு எதிரேயிருந்த நாற்காலியைக் காட்டினாள்.

“உட்கார்ங்க.”

அவன் நுனி நாற்காலியில் அவஸ்தையாய் உட்கார்ந்தான்.

“என்ன விஷயம் சொல்லுங்க.”

அவன் சில விநாடிகள் தலைகுனிந்தபடி இருந்துவிட்டு மெலிதான குரலில் கேட்டான்.

“சந்திராவுக்கு எப்போ டைவர்ஸ் கிடைக்கும் மேடம்?”

தேவகியின் புருவங்கள் தன்னிச்சையாய் உயர்ந்தன.

“சந்திராவா… யாரது…?”

“அதான் மேடம், பாப்பநாய்க்கன்பாளையத்திலிருந்து ஒரு பொண்ணு கடந்த ஆறுமாச காலமாய் தன் புருஷன்கிட்டயிருந்து டைவோர்ஸ் வேணும்ன்னு கேட்டு உங்க மூலமாய் கேஸ் நடத்திகிட்டு இருக்கே… அந்த சந்திராதான்.”

“அந்த பொண்ணா… அவளோட பேரு சந்திரவதனா… நீங்க சந்திரான்னு உரிமையோடு சொல்றீங்க…”

“எனக்கு சந்திரான்னு கூப்பிடத்தான் பிடிக்கும் மேடம்.”

“ஆமா நீங்க யாரு… சந்திராவுக்கு என்ன உறவு?”

“அ… அ… அது வந்து மேடம்…”

“சொல்ல வேண்டியதை சீக்கிரமா சொல்லி முடியுங்க. நான் கோர்ட்டுக்கு கிளம்பணும்.”

“மேடம்… சந்திராவுக்கு நீங்க டைவோர்ஸ் வாங்கிக் கொடுத்துட்டீங்கன்னா, அடுத்த நாளே அவளோட கழுத்துல தாலியைக் கட்ட நான் தயாராயிருக்கேன்.”

தேவகி சற்றே அதிர்ந்துபோனவனாய் தன்னுடைய மூக்குக் கண்ணாடியைக் கழற்றியபடி வியப்போடு அந்த ஜெயக்குமாரை ஏறிட்டாள்.

“ஏற்கனவே நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸா?”

“இல்ல மேடம்… சந்திராவை கடந்த மூணுமாச காலமாய்த்தான் தெரியும்… நான் ஒரு ப்ராப்பர்டி கேஸ் விஷயமாய் கோர்ட்டுக்கு வந்து போயிட்டிருக்கேன். அந்த சமயத்துலதான் ஒரு மத்தியான நேரம் கோர்ட் காண்டீன்ல ‘லஞ்ச்’ சாப்பிடும்போது சந்திராவைப் பார்த்தேன். முகம் ரொம்பவும் வாட்டத்தோடு இருந்ததால, மெல்ல பேச்சு கொடுத்து என்ன ஏதுன்னு விசாரிச்சேன். புருஷன்கிட்டயிருந்து டைவர்ஸ் கேட்டு, கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கிறதா சொன்னா. கல்யாணமாகி புருஷன் கூட ஒரு மாசம் கூட சேர்ந்து வாழலைன்னு சந்திரா அழுதுகிட்டே சொன்னப்ப என்னோட மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாயிருந்தது மேடம்…”

“உடனே சந்திராவை கல்யாணம் பண்ணிக்க முடிவு எடுத்துட்டீங்க?”

“உடனடியாய் அந்த முடிவுக்கு வந்துடலை மேடம்.”

“அப்புறம்?”

“நாலைஞ்சு தடவை சந்திராவோடு பேசிப்பழக வாய்ப்பு கிடைச்சப்ப, அவ என்கிட்ட பேசின விதம், நடந்துகிட்ட முறை எனக்கு ரொம்பவே பிடிச்சது மேடம். பத்து நாளைக்கு முன்னாடி ஒரு நாள் துணிச்சலா ‘உனக்கு டைவர்ஸ் கிடைச்சா என்னைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டாமான்னு கேட்டேன்’.”

“அதுக்கு சந்திரா என்ன பதில் சொன்னா?”

“மொதல்ல எனக்கு டைவோர்ஸ் கிடைக்கட்டும். அம்மா அப்பா எனக்கு இல்லாததினால இருக்கிற ஒரே உறவான சித்தப்பாகிட்டதான் இதைப் பத்தி பேசணும்ன்னு சொல்லிட்டா.”

“அவ சொல்றதும் சரிதானே?”

“சரிதான் மேடம்… ஆனா என்னாலதான் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்க முடியலை… அது என்னவோ தெரியலை மேடம், சந்திராவை பார்த்த நாளிலிருந்து இப்படிப்பட்ட ஒரு பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு ஒவ்வொரு விநாடியும் எனக்கு தோணிகிட்டே இருக்கு… எனக்கும் வயசு முப்பத்திரெண்டு ஆச்சு. மேட்ரிமோனியல் மூலமா எத்தனையோ பொண்ணுகளைப் பார்த்துட்டேன். யாரையுமே எனக்குப் பிடிக்கலை… அதையும் மீறி எனக்கு ரெண்டு பொண்ணுகளைப் பிடிச்சது. ஆனா அந்தப் பெண்கள் போட்ட கண்டிஷன்கள் எனக்கு ஒத்து வரலை… என்னோட ஜாதகப்படி வரப்போகிற ஆறுமாசத்துக்குள்ளே எனக்கு கல்யாணம் நடந்தா ரொம்பவும் நல்லதுன்னு எட்டிமடை ஜோஸியர் சொல்லியிருக்கார். அதுக்குள்ளே சந்திராவுக்கு டைவோர்ஸ் கிடைச்சுடுமா மேடம்?”

தேவகி மெல்லத் தலையாட்டிவிட்டு சொன்னாள்.

“அடுத்த வாரத்துல ஒரு ‘ஹியரிங்’ இருக்கு. அது முடிஞ்ச அடுத்த பத்துநாளைக்குள்ளே தீர்ப்பு கிடைச்சுடும். கண்டிப்பா அந்தத் தீர்ப்பு சந்திராவுக்கு சாதகமாத்தான் இருக்கும்… காரணம் அவனோட ஹஸ்பெண்ட் கோர்ட்டோட ஆர்டரை மதிக்காமே சரியா கோர்ட்டுக்கு வரலை. ஸோ கேஸ் எக்ஸ்பார்ட்டி ஆயிடும்…”

“இப்படி நீங்க சொல்றதை கேக்கும்போதே எனக்கு ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கு மேடம்.”

“உங்களுக்கு இதே ஊர்தானா ஜெயக்குமார்?”

“ஆமா மேடம்.”

“என்ன வேலை பார்க்கறீங்க?”

“இந்திரா நகர் என்.டி.சி மில்லில் ஸ்பின்னிங் மாஸ்டராய் இருக்கேன் மேடம். சம்பளம் எண்பதாயிரம். குறிச்சி சுந்தராபுரத்துல சொந்த வீடும், பொள்ளாச்சியில அம்பது சென்ட் விவசாய நிலமும் இருக்கு… என்னோட அம்மாவும் அப்பாவும் விவசாயம் பார்த்துகிட்டு அங்கேயே இருக்காங்க…”

“விவாகரத்தான ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கப்போற விஷயம் அவங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும் மேடம்… நான் சொல்லிட்டேன். அவங்க’நீ எந்தப்பெண்ணைக் கொண்டுவந்து எங்க முன்னாடி நிறுத்தினாலும் சரி, கல்யாணத்தைப்பண்ணி வெக்க நாங்க தயார்ன்னு  சொல்லிட்டாங்க…”

“சரி… சந்திராவுக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம்தானே?”

“இஷ்டம்தான் மேடம்… தினசரி ரெண்டு தடவையாவது செல்போன்ல பேசிக்கிறோம்… டைவோர்ஸ் கிடைச்சதும் என்னோட அம்மாவையும் அப்பாவையும் கூட்டிகிட்டு, சந்திரா வீட்டுக்குப் போய், முறைப்படி அவளோட சித்தப்பாவைப் பார்த்து, கல்யாண விஷயமா பேசிடலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்…”

“ரொம்ப சந்தோஷம்… எப்படியோ சந்திராவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா சரி” தேவகி சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

ஜெயக்குமார் குறுக்கிட்டான்.

“ஒரு நிமிஷம் மேடம்.”

“என்ன… சொல்லுங்க… எனக்கு நேரமாச்சு… சாவகாசமாய் உட்கார்ந்து பேசிட்டிருக்க நேரமில்லை.”

ஜெயக்குமார் தன் கையோடு கொண்டு போயிருந்த லெதர் பேக்கைத் திறந்து, இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்து தேவகியிடம் நீட்ட அவள் தன் இரண்டு புருவங்களையும் ஒரு சேர உயர்த்தினாள்.

“எதுக்குப் பணம்?”

“சந்திராவோட டைவோர்ஸ் கேஸை நீங்க எடுத்து நடத்திகிட்டு இருக்கீங்க… உங்களுக்கு கொடுக்க வேண்டிய ஃபீஸை சந்திராவால கொடுக்க முடியலைன்னு கேள்விப்பட்டேன். இதுல ஒரு லட்ச ரூபாய் இருக்கு. வாங்கிக்கீங்க… கேஸை எவ்வளவு சீக்கிரத்துல முடிக்க முடியுமோ… அவ்வளவு சீக்கிரத்துல முடிங்க. சந்திராவுக்கு சீக்கிரமா டைவோர்ஸ் கிடைக்கணும்.”

தேவகி ஒரு சிறிய புன்னகையோடு தலையை ஆட்டி மறுத்தாள். “இப்ப ஃபீஸ் எதுவும் வேண்டாம். கேஸ் முடியட்டும். நானே கேட்டு வாங்கிக்கறேன்… இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ளே ஜட்ஜ்மெண்ட் வந்துடும்… உங்க போன் நெம்பர் குடுத்துட்டுப் போங்க… நானே உங்களுக்கு போன் பண்றேன்.”

“தேங்க்யூ மேடம்” என்று சொன்ன ஜெயக்குமார் தன்னுடைய விசிட்டிங் கார்டொன்றை எடுத்து தேவகியிடம் நீட்டினான்.

…..

ரண்டு வாரங்கள் கரைந்து காணாமல் போயிருக்க, அன்றைய தினம் காலை பதினோரு மணி.

க்ளைய்ண்ட் ஒருவர் பேசிவிட்டு வெளியே வரும் வரைக்கும் பொறுமையோடு, அறைக்கு வெளியே காத்திருந்த சந்திரா, அதற்குப் பிறகு தேவகியின் அறைக்குள் நுழைந்தாள். கையில் வைத்திருந்த ஸ்வீட் பாக்ஸை நீட்டி ஒரு மெல்லிய புன்னகையோடு சொன்னாள்.

“எடுத்துக்குங்க மேடம்.”

தேவகி பார்த்துக் கொண்டிருந்த கேஸ் கட்டை தள்ளி மேஜையின் ஓரமாய் வைத்துவிட்டு சிரித்தாள். ஸ்வீட் பாக்ஸில் நெருக்கமாய் அணிவகுத்திருந்த முந்திரிகேக் துண்டங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டபடி சொன்னாள்.

“உன்னோட டைவோர்ஸ் கேஸ் முடிய எப்படியும் இன்னும் ஒரு ஹியரிங் போக வேண்டியிருக்கும்ன்னு நினைச்சேன். ஆனா அதுக்கு அவசியம் இல்லாமே போய், ஜட்ஜ்மெண்ட் இன்னிக்கே கிடைச்சுடுச்சு. உனக்கு போன் பண்ணி தகவல் கொடுத்த அதே நிமிஷம், ஜெயக்குமாருக்கும் விஷயத்தை கன்வே பண்ணிட்டேன். அவரும் புறப்பட்டு வந்துட்டிருப்பார்ன்னு நினைக்கிறேன்.”

தேவகி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவு மெலிதாய் தட்டப்பட்டது.

“அவர்தான்னு நினைக்கிறேன்… கம் இன்.”

ஜெயக்குமார் சந்தோஷம் பரவிக் கொண்ட முகத்தோடு உள்ளே வந்தான். கையில் வண்ணமயமாய் ஒரு பொக்கே. தேவகி மெலிதாய் சிரித்தபடி அவனை ஏறிட்டாள். “இப்பத்தான் உங்களைப் பத்தி சொல்லிகிட்டிருந்தேன்.”

அவன் பொக்கேவை நீட்டினான்.

“வாழ்த்துக்கள் மேடம்.”

“இதெல்லாம் எதுக்கு?”

“என்ன மேடம்… இப்படி சொல்லிட்டீங்க..? சந்திராவுக்கு எவ்வளவு பெரிய விடுதலையை வாங்கிக் கொடுத்து இருக்கீங்க? நியாயப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு டன் எடையில கனமா… ரோஜாப்பூ மாலையையேப் போடணும்…”

பொக்கேயை வாங்கிக் கொண்ட தேவகி தனக்கு எதிரே இருந்த நாற்காலியைக் காட்டினாள்.

“மொதல்ல உட்கார்ங்க ஜெயக்குமார்.”

அவன் உட்கார்ந்தபடியே சந்திராவிடம் கேட்டான்.

“சந்திரா! நீ… வந்து நேரமாச்சா?”

“இல்ல… இப்பத்தான் வந்தேன்… இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்குங்க.”

“தேங்க்யூ…” ஸ்வீட் ஒன்றை எடுத்துக் கொண்டவன் தேவகியை ஏறிட்டான்.

“மேடம்… சந்திராவுக்கு டைவோர்ஸ் கிடைச்சாச்சு. எங்களுக்கு நடக்கப்போகிற கல்யாணத்தைப் பத்திப் பேசி ஒரு முடிவு எடுத்துடலாமா?”

“ஷ்யூர்… ஷ்யூர் இன்னிக்கு புதன்கிழமை. முகூர்த்த நாளும் கூட..! பேச்சை ஆரம்பிச்சுடலாம். அதுக்கு முன்னாடி சந்திரா உங்ககிட்ட சில விஷயங்களைப் பத்தி கேட்டு தெளிவுபடுத்திக்க விரும்பறா…”

“ஈஸிட்… தாராளமாய் கேட்கட்டும்.”

சந்திரா சில விநாடிகள் மௌனமாய் இருந்துவிட்டு ஜெயக்குமாரிடம் திரும்பினாள்.

“என்னோட கணவர் ஐ மீன் முன்னாள் கணவர் மணிமாறனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. எங்களோட டைவோர்ஸீக்கு முதல் காரணமே அதுதான். அந்தப் பழக்கம் காரணமாய் சின்னச் சின்னதாய் நிறைய கெட்டப்பழக்கங்கள். அதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமே போனதால்தான் நான் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்குப் போனேன்.”

ஜெயக்குமார் சின்னதாய் சிரிப்பொன்றை தன் உதடுகளில் கசியவிட்டான்.

“இந்த விஷயத்தைத்தான் நீ ஏற்கெனவே என்கிட்டே சொல்லியிருக்கியே? இப்ப எதுக்காக மறுபடியும் சொல்றே?”

“உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கா?”

“இல்லை…”

“ஸ்மோக்கிங்?”

“இல்லை…”

“நான் நம்பலாமா?”

“தாராளமாய் நம்பலாம்.”

“சரி… நம்ம கல்யாணத்துக்குப் பிறகு உங்க அம்மாவும் அப்பாவும் நம்மோடு வந்து கூடவே இருக்க வாய்ப்பிருக்கா?”

“வாய்ப்பே இல்லை.”

“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?”

“என்னோட அம்மாவைப் பத்தியும், அப்பாவைப் பத்தியும் எனக்கு நல்லாவே தெரியும். அவங்களை என் கூட வந்து இருக்கச் சொல்லி எத்தனையோ தடவை கேட்டுப் பார்த்துட்டேன். கிராமத்தில் இருக்கிற விவசாய நிலத்தையும், வீட்டையும் விட்டுட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க…”

“சரி, நான் இப்ப கேக்கப் போகிற கேள்விதான் முக்கியமான கேள்வி. நீங்களும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னோட முன்னாள் கணவர் மணிமாறனுக்கு கண்டிப்பா எம்மேல கோபம் வரும். ஏன்னா அவர் ஒரு பொஸசிவ்னஸ் டைப். உங்களை அவர் ஒரு எதிரியாய் பார்ப்பார். அவரோட எதிர்ப்பை நம்மால் சமாளித்து ஒரு அமைதியான வாழ்க்கையை நடத்த முடியுமா?”

ஜெயக்குமார் சிரித்தான்.

“இதோ பார் சந்திரா… சட்டப்படி உனக்கு விவாகரத்து கிடைச்சிருக்கு… நீயும் நானும் விரும்பித்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். இதைத் தடுக்க உன்னோட எக்ஸ் ஹஸ்பெண்ட் மணிமாறனுக்கு கொஞ்சம் கூட உரிமை கிடையாது.”

“அது எனக்கும் தெரியும்… இருந்தாலும்…”

“நீ இப்ப என்ன சொல்ல வர்றே சந்திரா?”

“நீங்க என்னோட எக்ஸ் ஹஸ்பெண்ட் மணிமாறனைப் பார்த்து இருக்கீங்களா?”

“நேர்ல பார்த்தது இல்லை. போன மாசம் நீயும் அவரும் கல்யாணகோலத்தில் இருந்த ஒரு போட்டோவை நீ காட்டினப்பதான் முதல் தடவையாய் அவரைப் பார்த்தேன்.”

“நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முந்தி, நீங்க அவரை ஒரு தடவை பார்த்து பேசிடறது நல்லது.”

“நான் எதுக்காக அவரைப் பார்க்கணும்?”

(வாசகர்கள் இந்த இடத்திலிருந்து கதையை தொடர்ந்து எழுதி முடிக்கலாம்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com